மார்ச் 11, 2012 அன்று ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மையத்தின் அரங்கில், 'Concerts of Compassion' தொடரில் அம்மாவின் உலகளாவிய மனிதநேயத் தொண்டுகளுக்கு நிதி திரட்டும் வகையில், ஸ்ரீகாந்த்சாரி அவர்களின் வீணை, மோஹன்ரங்கன் அவர்களின் புல்லாங்குழல், சரவணப்பிரியன் அவர்களின் வயலின் ஆகியவை இணைந்த வாத்திய இசை நிகழ்ச்சி அரங்கேறியது. மைசூர் வரதாச்சாரியின் கெளளை ராக 'பிரணமாம்யஹம்' கிருதியில் துவங்கி, சுப்பராயரின் ரீதிகெளளை ராக 'ஜனனி நின்னுவினா' என்ற தேவி கிருதி, தியாகராஜரின் சிம்ஹவாஹினி ராக 'நேனருன்ச்சரா', ஆரபி ராக 'ஸ்ரீசரஸ்வதி நமோஸ்துதே' கிருதி ஆகியவை ஆலாபனை, கல்பனா ஸ்வரத்துடன் நடந்தது.
முக்கிய அங்கமாக ராகம், தானம், பல்லவியில் அம்ருதவர்ஷிணியுடன் ஆபோகியை இணைத்துப் புதிய முறையில் அம்மாவின் பெயரில் அமைந்த இரட்டை ராக பல்லவி இந்நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தது. வீணாவாதினி, வஸந்தி, வலஜி ஆகியவற்றைத் தொடர்ந்த ஹம்ஸாநந்தி ஸ்வர கல்பனையும், மிருதங்கம், கஞ்சீரா தாள வாத்தியம் ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்து தொகுத்தளித்த விதம் இந்நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்தது. இறுதி பாகமாக மதுவந்தி ராக 'யமுனா நதி தீரம்', ரகுபதி ராகவ பஜனைகள், தேஷ் ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஜெயஸ்ரீ நரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |