மார்ச் 17, 2012 அன்று ஸ்ரீ லலித கான வித்யாலயா குரு லதா ஸ்ரீராமின் சிஷ்யை நயேஹா லக்ஷ்மணின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம், கலிஃபோர்னியா பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி கம்யூனிடி சென்டர் அரங்கில் நடைபெற்றது. ஹம்ஸத்வனி வர்ணத்துடன் அரங்கேற்றம் துவங்கியது. ஸ்ரீமதி லக்ஷ்மி சுப்ரமணியத்தின் வயலினும், ஸ்ரீ பாலாஜி மஹாதேவன் அவர்களின் மிருதங்கமும், தபேலாவும் நிகழ்ச்சிக்குப் பக்க பலமாயிருந்தன. பந்துவராளி ராக கல்பனா ஸ்வரம், மதுராஷ்டகம், திருப்புகழுக்கு அரங்கம் களை கட்டியது. கமாஸ் ராகத் தில்லானாவும் வெகு அழகு. எல்லாவற்றிற்கும் மேலாக ஆதிசங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் மனதிற்கு மிக இதமாக இருந்தது. நயேஹா லக்ஷ்மண் ஒரு நேபாளியாக இருந்தாலும், அவர் ஏழு வயது முதல் பதினோரு வருட காலமாக லதா ஸ்ரீராம் அவர்களிடம் இசை பயின்று வருகிறார்.
ஸ்ரீ லலிதகான வித்யாலயா 20 வருடங்களுக்கும் மேலாக வளைகுடாவில் இசைப் பணியாற்றி வருகிறது. நயேஹா மிகத் துல்லியமான உச்சரிப்புடன் பாடினார் என்றால் அந்தப் பெருமை குரு லதா அவர்களையே சாரும். நயேஹாவின் நேபாளிப் பெற்றோர் தமது மகளைக் கர்நாடக இசை பயிலவும், அரங்கேற்றம் செய்யவும் உறுதுணையாக இருப்பது மிகவும் நெகிழ்ச்சியான விஷயம்.
கௌசல்யா சுவாமிநாதன், ப்ளஸண்டன், கலிஃபோர்னியா |