இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப்பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழைய நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரித்த பிறகு, தாமஸ் நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றிப் பொதுவாக விவரித்துவிட்டு அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றி விவரிக்கலானார். மேலே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்!
*****
தாமஸ், அக்வாமரீனின் தனித்திறன் வாய்ந்த வெப்ப மின்னணு நுட்பத்தை உப்பகற்றலுக்குப் பயன்படுத்தும் முறையை விவரித்துவிட்டு உயிர்நிகர் (biomimetic) நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், தனக்கு உயிர்நிகர்த் துறையில் ஓரளவுக்கே பரிச்சயம் இருப்பதால் அந்த நுட்பத்தை உப்பகற்றலுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்ற விவரத்தை யாவ்னாவே விளக்கட்டும் என்றுக் கூறிவிடவே, யாவ்னா மகிழ்ச்சியுடன் விளக்க ஆரம்பித்தாள்.
"கிரண் நீ டென்னிஸ் ஆடறத்துக்கு இல்லைன்னா நடக்கறத்துக்கு, ஓடறத்துக்கு ஸ்னீக்கர் ஷூ போடறப்போ வெல்க்ரோவால பிணைக்கறதுண்டா?"
கிரண் புரியாமல் குழம்பினான். "ஆமாம், போடறேன், ஆனா அதுக்கென்ன இப்போ தீடீர்னு? நாம பேசிக்கிட்டிருக்கறத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?"
யாவ்னா சிரித்து விட்டுத் தொடர்ந்தாள். "அஹ்ஹஹ்...ஹா! அங்கதானே விஷயமே இருக்கு! அந்த வெல்க்ரோவைக் கண்டுபிடிச்சதே உயிர்நிகர்த்துவம் மூலமாத்தான். ஜார்ஜ் மெஸ்ட்ரல்ங்கற ஒரு விஞ்ஞானி, தன் நாயோட ரோமத்துல நல்லா சிக்கிக்கிட்ட வஸ்துக்கள் எப்படி ரோமங்களைப் புடிச்சுக்கிட்டிருக்குன்னு ஆராய்ஞ்சு அதே மாதிரியா, கொக்கிகள் ஒரு பக்கமும், வளையங்கள் இன்னொரு பக்கமும் அமைச்சு, இரண்டு பட்டைகளை உறுதியாகப் பிணைக்கும் வெல்க்ரோ நுட்பத்தை உருவாக்கினார்."
ஷாலினி சிலாகித்தாள். "ஆஹா, பிரமாதமா இருக்கே! இன்னும் வேற உதாரணம் சொல்லேன் யாவ்னா."
யாவ்னா முறுவலுடன் தொடர்ந்தாள். "சூர்யா கூட ஏற்கனவே குறிப்பிட்டாரே, சூர்யகாந்தி மலர்கள் அமைஞ்சிருக்கற ஃபிபனாச்சி வரிசை (Fibonacci sequence) அமைப்புப் படி சூரிய மின்சக்தி பலகைகள் ஒண்ணுமேல ஒண்ணு நிழல் படாம இருக்கறாமாதிரி வரிசையா வைக்கறத்துக்கு கண்டு பிடிச்சிருக்காங்க. அதே மாதிரி தாவர வகை உயிர்நிகர்த்துவத்துக்கு இன்னொரு உதாரணமா, தாமரை இலைகளைப் பத்தியும் சொல்லலாம். அதுமேல தண்ணி ஒட்டாம இருக்குன்னு..."
கிரண் குறுக்கிட்டான். "ஆமாம், எங்க அப்பாகூட எப்பப் பாத்தாலும், தாமரை இல்லைத் தண்ணி மாதிரி இருக்கணும் ரொம்ப அட்டாச்மெண்ட் கூடாதுன்னு ஒரே தத்துவ மழையா பொழிஞ்சு போரடிச்சுடுவாரு."
ஷாலினி, "சே! என்ன கிரண் இது! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு! நீ இவன் உளர்றதை விடு. யாவ்னா, மேல சொல்லு!" என்றாள்.
கிரண் பதிலுக்கு முகம் சுளித்துப் பழித்துக் காட்டவும், யாவ்னா சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள். "தாமரை இலை மேல பூரா சிறிதளவு குண்டான சின்னச் சின்ன வளைவுகள் பரந்து சற்றே உயர்ந்திருக்கும். அதுனால மேல தண்ணி விழறச்சே ஒட்டிக்காம சின்ன சின்ன குண்டுத் துளிகளா திரண்டுக்குது. அது மட்டுமல்லாம, இலைமேல இருக்கற தூசிகளையும் சேர்த்து திரள்றதுனால, இலையும் சுத்தமாகுது. இந்த மாதிரி மேல்பூச்சை கார்கள் போன்றவற்றுக்குப் பூசினா சுத்தமாக தூசி ஒட்டிக்காம இருக்கும்னு சில நிறுவனங்கள் ஆராய்ஞ்சு, அதைத் தொழில்ரீதியா உருவாக்கிக்கிட்டிருக்காங்க."
கிரண் மீண்டும் குதித்தான். "ஹைய்யா! அதைப் போட்டா என் கார் பளிச்சுன்னே இருக்குமே! எங்கே கிடைக்கும் அது?"
யாவ்னா கிண்கிணித்தாள், "இன்னும் அது வணிகரீதியா வரலை. வந்தவுடனே உனக்கு முதல்ல சொல்றேன். இந்த மாதிரி உயிர்நிகர் நுட்பங்கள் எத்தனையோ இருக்கு. இன்னும் என்னென்னவோ சொல்லிக்கிட்டே போகலாம்! ஆனா, இப்ப இன்னும் பிரமாதமானது ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன்! அது, நம்ம தோல் மாதிரி காயங்களைத் தானே ஆத்திக்கிட்டு சரியாக்கிக்கிடற ப்ளாஸ்டிக் நுட்பம்."
ஷாலினி ஆர்வத்துடன் தூண்டினாள். "ஆஹா, யாவ்னா, இது என் மருத்துவ சம்பந்தப்பட்ட விஷயம் மாதிரி இருக்கே, சொல்லு சொல்லு."
யாவ்னா தலையாட்டிவிட்டுத் தொடர்ந்தாள். "கொஞ்சம் அந்த மாதிரிதான், ஆனா உடம்புக்கு இல்லை, மற்ற ப்ளாஸ்டிக் பயன்படுத்தற சாதனங்களுக்கு. உடம்புல ரத்தம் உறைஞ்சப்புறம், தோல் மீண்டும் வளருது. அதுக்குப் பதிலா, இதுல ப்ளாஸ்டிக் இழைகளுக்குள்ள ஒட்டற கோந்து மாதிரியான எபாக்ஸி ரெஸின் திரவத்தை வச்சு அந்த மாதிரி இழைகளைச் சேர்த்து பெரிய ப்ளாஸ்டிக் பரப்பைத் தயாரிக்கறாங்க. எதாவது இழை தேய்ஞ்சோ, இல்லைன்னா அடிபட்டு உடைஞ்சுதுனா, உள்ள இருக்கற ரெஸின் வழிஞ்சு மூடி, உறைஞ்சு திரும்பி பலமாக்கிடுது. இந்த நுட்பத்தை வச்சு விமான இறக்கை, வேகமான ஸ்போர்ட்ஸ் கார் போன்றவற்றை கனமில்லாமல் ஆனா பலமுள்ளதா, சின்ன பழுதுகளைத் தானே சரியாக்கிக்கற மாதிரி செய்ய முடியும்."
கிரண் துள்ளினான். "ஆஹா, என் ஸ்போர்ட்ஸ் கார் தனக்குத் தானே ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செஞ்சுக்கும் போலிருக்கே. இது எப்படி இருக்கு! யாவ்னா, இந்த உயிர்நிகர் நுட்பம் பத்தி எனக்கு இவ்வளவு நாளாத் தெரியவே தெரியாது. இதுல நிறையப் பணம் பண்ணலாம்னு நினைக்கறேன். இரு இப்பவே எங்க ஆட்களை இதுல இருக்கற நிறுவனங்கள் பங்குகளைப் பாக்கச் சொல்றேன்" என்று கூறி தன் ஐஃபோனை எடுத்துத் தட்ட ஆரம்பித்தான்.
யாவ்னா, "தனக்குத் தானே ப்ளாஸ்டிக் ஸர்ஜரி! இது நல்ல ஜோக்தான்" என்று சிரித்தாள். ஷாலினியோ கண்ணை மேற்பக்கம் உருட்டி நெற்றியில் லேசாக தட்டிக் கொண்டு, "ஹையோ, போதுமே, அவனுக்கு ஊக்கம் குடுத்துடாதே. கடி ஜோக்கா அடிச்சுக் குதறிடுவான்," என்றாள்.
சூர்யா குறுக்கிட்டு வினாவினார். "அதெல்லாம் சரி யாவ்னா, ஆனா, இந்த உயிர்நிகர்த்துவம் எப்படி உங்க உப்பகற்றல் துறையில பயன்படுது?"
சூர்யாவின் கேள்வி யாவ்னாவைத் தற்காலத்துக்கு இழுத்து விடவே, தலையைச் சற்றே உதறிச் சுதாரித்துக் கொண்ட யாவ்னா தொடர்ந்தாள். "சரியாக் கேட்டீங்க சூர்யா. நான் எதோ எனக்கு மிக ஆர்வமுள்ள துறைங்கறதுனால பலதரப்பட்ட உதாரணங்களைச் சொல்லிக்கிட்டு எங்கயோ போயிட்டேன்! சரி உப்பகற்றலுக்கு உயிர்நிகர்த் துறை எப்படிப் பயன்படுதுன்னு இப்ப விவரிக்கறேன். தாவரவகைகள் உட்பட, எல்லா உயிரினங்களின் ஸெல்களிலும், நீரை உள்ளிழுப்பதற்கான, செலுத்துவதற்கான திறப்புவழிகள் (channels) உள்ளன. இதில் உப்பகற்றல் துறைக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உப்பை வடிகட்டி, தூயநீரை மட்டும் உள்ளிழுக்கக் கூடிய பண்பு இத்தகைய நீர் திறப்புவழிகளுக்கு இருக்கு!"
அதைக் கேட்ட கிரண் எதையோ நினைத்துக் கொண்டு களுக்கென்று சிரித்துவிடவே, மற்றவர்கள் அவனைப் பார்த்து முறைத்தனர். கிரண் சுதாரித்துக் கொண்டு, "ரொம்ப ஸாரி, ஸெல்களால உப்பை வடிகட்ட முடியும்னு யாவ்னா சொன்னவுடனே, எப்பவாவது, தானே சமைக்கிறேன்னு ஷாலினி கிளம்பறப்போ, சில சமயம் உப்பள்ளிப் போட்டுடறாளே, அதை அந்தப் பண்டத்துல இருக்கற காய்கறியெல்லாம் ரொம்ப உறிஞ்சுக்காம கொஞ்சம் வடிகட்டிட்டா நல்லா இருக்குமேன்னு நினைப்பு வந்தது... அதான்..." என்று இழுத்தான்.
ஷாலினி பொய்க்கோபத்துடன், "படவா, என் சமையலையா நையாண்டி பண்றே, இரு இரு! இதுக்காகவே அடுத்த தடவை நான் பிஸிபேளாபாத் பண்ணறப்போ இன்னும் ரெண்டு ஸ்பூன் உப்பு உனக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா கலந்து குடுக்கறேன். உன் மூஞ்சி போற போக்கைப் பாத்துப் பழி வாங்கின திருப்தி வரும்," என்று மிரட்டவே யாவரும் உரக்கச் சிரித்தனர்.
யாவ்னா தொடர்ந்தாள், "எல்லா உயிரினங்களின் ஸெல்களும் உப்பைப் புறக்கணித்துத் தூயநீரை உறிஞ்சிக் கொளவ்தில் அதிகத்திறன் படைத்தவை (highly efficient). பல ஆராய்ச்சிக்கூடங்கள், இத்திறனை ஆழ்ந்து ஆராய்ந்து, அதே திறனுடன் கூடிய செயற்கைச் சவ்வுத்தோல் (synthetic membrane) உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இந்தத் துறையில்தான் அக்வாமரீன் ஒரு பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நாங்கள் உருவாக்கியுள்ள சவ்வுத்தோல் உயிரின ஸெல்லளவுக்கு உப்பகற்றும் திறனுடையதாக உள்ளது. ஆனால் அதுமட்டும் போதாது..."
இப்போது பரபரப்புடன் ஷாலினி இடைமறித்தாள். "வாவ், இயற்கை ஸெல் திறனளவுக்கா! பிரமாதம். இதை மருத்துவத்துக்குக்கூடப் பயன்படுத்தலாமே. யாவ்னா, தாமஸ் நீங்க ரெண்டு பேரும் நிச்சயம் எங்க ஆராய்ச்சிக் கூடத்துக்கு வந்து இதைப்பத்தி ஒரு விரிவுரை குடுக்கணும்."
தாமஸ் பவ்யமாகக் குனிந்து, "உயிர்நிகர்த்துவம் பற்றி ரொம்ப விவரிக்க நான் லாயக்கில்லை. யாவ்னாவே வந்து கொஞ்சம் ஆழமா விளக்கட்டும். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன், இயற்கை ஸெல் அளவுக்கு உப்பகற்றக்கூடிய திறன் உள்ள சவ்வை உருவாக்கினா மட்டும் போதாது, அதை உப்பகற்றும் சாதனத்தில எப்படிப் பயன்படுத்தறதுங்கற நுட்பமும் வேணும் இல்லையா. அதுலதான் அக்வாமரீன் இன்னும் பெரும்புதுமை நுட்பத்தைக் கலந்து நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கு."
சூர்யா தீவிர சிந்தனையுடன் தலையாட்ட, கிரண் ஆர்வத்துடன் வினாவினான். "சரி சுத்த சக்தியாச்சு, உயிர்நிகர் நுட்பமாச்சு. அடுத்தது என்ன நேனோடெக் நுட்பமா, அது ஒண்ணுதான் பாக்கி போலிருக்கு!"
யாவ்னா பரபரப்புடன் கூவினாள். "வாவ் கிரண் கரெக்டா கண்டு பிடிச்சுட்டயே! அக்வா மரீனின் மூணாவது புதுமை நுட்பம் நேனோடெக்கே தான்! தாமஸ், நீங்கதான் இதை விவரிக்கணும்." கிரண் பெருமிதத்துடன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்ட, யாவ்னா முகமலர்ந்து முறுவலித்தாள்.
சூர்யாவோ, இந்தக் இளமை நாடகத்தைக் கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளாமல், பரபரத்தார். "ஹே, இது என்னோட பழைய தொழில்நுட்ப அனுபவத்துக்கு அண்மையாயிடுச்சே. ஹூம், மேல சொல்லுங்க."
தாமஸும் பெருமிதத்துடன் விவரிக்கலானார். அவர் விவரித்தது, நேனோ நுட்பம் மற்றும் நவீன உப்பகற்று முறைகள் என்னும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, இரு புதுமைத் துறைகளை இணைக்கும் விறுவிறுப்பான விஷயமானதால், துப்பறியும் மூவருக்கும் கேட்க மிக சுவாரஸ்யமாக இருந்தது!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |