கவிதா தேவி அருள் வேட்டல் என்ற பாரதி பாடலை அலசிக் கொண்டிருந்தோம். அப்பாடலில் வெளியிடப்படாத பகுதியிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டியிருந்தோம். வெளியிடப்பட்ட பகுதியில் பல பதிப்புகளில் நீக்கப்பட்டு அல்லது சிறு மாற்றங்களோடு வெளிவந்துள்ள இரண்டு அடிகளைப் பற்றிச் சொல்லியிருந்தோம். தொடர் குறித்து வரும் வாசகர் தனிமடல்கள் இம்முறை சற்றே கிறுகிறுக்க அடித்துவிட்டன. குறிப்பாக வினு பிரசாத் என்னும் சென்னை வாசகர் அனுப்பியிருந்த மடலில் "என்னிடம் உள்ள பாரதியார் கவிதைத் தொகுதிகளில் (1. பதிப்பாசிரியர் தமிழவேள் ச.மெய்யப்பன், தென்றல் நிலையம், 2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்) பார்த்ததில் இரண்டிலுமே அக்கவிதை 'வாழ்ந்தனன் கதையின் முன்போல் வாழ்க்கை' என்ற அடியுடன் முடிந்துள்ளது. மேலும், 80, 81ம் அடிகள் "திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும் ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்" என உள்ளது. ஆனால் தாங்கள் அவ்வடிகளை, "திமிங்கில வுடலும் சிறுநாய் அறிவும் ஓரேழ் பெண்டிரும் உடையதோர் அலிமகன்" எனக் குறித்துள்ளீர்கள். இணையத்தில் தேடியவரையில் முழுப்பாடல் கிடைக்கவில்லை. முதல் 83 அடிகள் மட்டுமே கிடைக்கின்றன. Project Madurai தொகுப்பில் இக்கவிதையே இடம் பெறவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடலின் முழுவடிமும் கிடைத்தால் நன்று என இந்த அன்பர் குறித்திருந்தார். வாசகர்கள் இப்படிக் கேள்வி எழுப்புவது நமக்குப் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட முழுப்பாடலையும் ஒளிவருடியிருக்கிறேன். தொடர்ந்து இத்தகைய கேள்விகளை எழுப்பவேண்டும் என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாசகர் எழுப்பிய கேள்வியால் இன்னொரு ஆச்சரியமான உண்மையும் வெளிப்பட்டது. என் கவனத்துக்கே தப்பிய ஓர் உண்மையிது. இந்தக் கண்ணிகளை பாரதி இந்தப் பாடலில் இரண்டுமுறை பயன்படுத்தியிருக்கிறான் என்பதே அது. 'திமிங்கில உடலும் சிறியநாய் அறிவும் பொருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து' என்று 28-30ம் அடிகளிலும், 'திமிங்கில........... ஓரேழ் பெண்டிரும் உடையதோர் அலிமகன்' என்று அடி எண் 80-81ல் மீண்டும் ஒருமுறை, சிறிய வேறுபாட்டுடனும் எழுதியிருக்கிறான். 28, 29, 30 ஆகிய மூன்றடிகளும் எல்லாப் பதிப்புகளிலும் நீக்கப்பட்டுள்ளன. 80-81ம் அடிகளில் பாரதி பிரசுராலயம் 'ஓரேழ் பெண்டிரும் உடையதோர் ......'என்று புள்ளி வைத்து மறைத்து வெளியிட்டிருக்கிறது. அரசு வெளியிட்ட பதிப்போ, 'ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்' என்று திருத்திப் பதிப்பித்திருக்கிறது. 'வேந்தன்' என்று திருத்தியிருப்பது அரசு வெளியிட்ட பதிப்பிலேதான் நடந்திருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிய முடிகிறது. ஆக, சென்னை சைதாப்பேட்டையிலிருந்த மர்மலாங் பாலம், மறைமலையடிகள் பாலமாக மாறியதால் ஏற்பட்ட வராற்றுக் குறிப்பு நஷ்டம் இங்கும் நடந்திருக்கிறது. பாரதி இயலில் பெரிய பெரிய ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கும் மிகத் தவறானதும், அடிப்படையற்றதுமான முடிபுகளைப் போலவே இந்தப் பாடலும் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் அச்சு வாகனமேறியிருக்கிறது.
ஆய்வுக்குத் திரும்புவோம். மூன்று காதல் என்ற பாடலில் சரஸ்வதி வணக்கத்தில், "ஆற்றங் கரைதனிலே-தனி-யானதோர் மண்டப மீதினிலே,தென்றற் // காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு-கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை // ஏற்று மனமகிழ்ந்தே-அடி-என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று // போற்றிய போதினிலே-இளம்-புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா!" என்று குறித்திருப்பது நம்முடைய கவனத்துக்கு உரியது. மூன்று காதலில் திருமகளையும் மலைமகளையும் பார்த்துச் சொல்லாத வார்த்தைகள் சரஸ்வதி வணக்கத்தில் வெளிப்பட்டுள்ளன. 'என்னோடு இணங்கி மணம் புரிவாய் என்று கேட்டுக்கொண்டேன். அவளோ புன்னகை சிந்தி, மறைந்துவிட்டாள்' என்ற அடி, பாரதி, தனக்கும் கவிதைக்கும் உள்ள உறவு, வள்ளுவர் சொன்ன 'அம்மா அரிவை முயக்கு' (1107) என்ற உறவாகவே நிற்பதை மீண்டும் மீண்டும், தொட்ட இடத்திலெல்லாம் காண்கிறோம்.
முடிவாக, குயில் பாட்டிலுள்ள குயில் உருவகம், தமிழ்க் கவிதையே என்பது தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது. இதில் இன்னொரு பொருத்தமும் உள்ளது. குயில் கூவும் ஒலியைக் கேட்க முடியுமேயன்றி, குயில் எந்த இடத்தில் அமர்ந்துகொண்டு கூவுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது இயலாத செயல். குயிலைப் படமெடுப்பதற்காக கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தொடர்ந்து அலைந்த சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். கண்ணுக்குத் தென்பட்டுவிட்டது என்று கேமராவால் குறிவைத்தால் அடுத்த கணமே விருட்டென்று பறந்துவிடும். "O Cuckoo! shall I call thee Bird, // Or but a wandering Voice?" என்று வேர்ட்ஸ்வொர்த் குயிலைப் பார்த்தும், "Like an unbodied joy whose race is just begun" என்றும், "Thou art unseen, but yet I hear thy shrill delight" என்றும் ஷெல்லி ஸ்கைலார்க்கைப் பற்றியும் எழுதியிருப்பனவே என் சொந்த அனுபவத்துக்கு வலுக்கூட்டும் வரிகள். உருவற்றவளும், உள்ளத்தில் உறைபவளும், வார்த்தை என்ற வாகனத்தின் மூலம் வடிவெடுத்து வெளிப்படுபவளுமான அந்தரங்கக் கவிதைக் காதலி, ஒவ்வொரு கவிஞனுக்கும் இப்படித்தான் தென்பட்டிருக்கிறாள்; தென்படுவாள். (இந்த ஆங்கிலக் கவிதைகளை பாரதியோடு ஒப்பிட்டு விரித்தெழுதவும் ஆவல் எழுகிறது. பிறகொருநாள் பேசலாம்.)
ஆனால் பாரதியின் காதற் குயில், தன் காதலனுக்காக மறுபிறவி எடுத்துவந்து, அவனுடைய கண்ணுக்கு மட்டும் தென்படுகிறது; அவனுடன் மானுடவர் பேச்சில் உரையாடுகிறது; வாழ்க்கைப் பிரச்சனைகளின் குறியீடான மற்ற பறவைகள், சூழல் முதலானவை தோன்றிய அளவிலே, காதற் குயில் மறைந்துவிடுவதும் குயில் பாட்டில் தொடர்ந்து நடக்கிறது. மாடன், குரங்கன் இருவருடனும் உரையாடிய குயில் மாயத் தோற்றமே. உண்மைக் குயிலன்று. இந்தக் குயில், பெண்மையின் இயல்புக்கு மாறாகத் தன் காதலைத் தானே வெளிப்படுத்துகிறது. இறுதியில், 'நான் சொல்வது உண்மை. என்னை நம்பாவிட்டால் உங்கள் கைகளாலேயே என்னைக் கொன்று போடுங்கள்' என்று தன் கரத்தில் வீழும் குயிலை வாரி எடுத்து,
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரு மின்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா
தன்னுடைய இதழ் ஸ்பரிசம் பெற்றதும், பொதுவாகக் கண்ணுக்குத் தென்படாமல் கூவல் மூலமாகவே தன் இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கும் குயில், தன் குயில் வடிவத்தை இழந்து பெண்ணுருக் கொள்கிறது. பரவசத்தில் கவிஞன் மிதந்து நம்மையும் பரவசப்படுத்துகிறான். கவிதைக்கும் கவிஞனுக்கும் உள்ள (நான் சொல்வது போலி தவிர்த்த, நிஜமான நிஜக் கவிஞர்களையும் கவிதைகளையும் மட்டுமே) உறவு எப்படி வடிவம் கொள்கிறது என்பதை விளக்கும் வரிகளாக அமைகின்றன. கவிக்குயில், கவியின் இதழ் மூலமாகவே வடிவம் பெற்று வெளிப்படுகிறாள். அவனுடைய வாக்கை அவள் ஆட்டுவிக்கும் போதிலும் அவனுடைய வாக்கிலிருந்தே அவள் வடிவெடுக்கிறாள் என்பது வெகுநுட்பமாகத் (subtle) தென்படும் செய்தி.
'வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ' என்று கவி செய்த குறும்பு, ஸ்ரீவித்யா தத்துவத்திலிருந்து, கைவல்ய நவநீதம் வரையிலும், அதற்கப்பாலுக்கப்பாலும் ஆராய்ச்சி வித்தகர்களால் குதறப்பட்டு விட்டது. பாரதியே சொல்வதுபோல்:
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே.
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந் நான்மறை கண்டிலதே.
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணு நிலையாமே-உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்று சான்றவர் கண்டனரே.
இவர்கள் இப்படிக் குதறுவார்கள் என்று பாரதி கண்டிருப்பானா, கண்டிருந்தால், 'வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க' என்று சொல்லியிருப்பானா! வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ்வேதம் அறியாதே முதலான மேற்படிக் கண்ணிகளைப் பொருத்திப் பாருங்கள். சான்றவர் காணும் நிலைமை என்ன என்பதையும் பாரதி வாக்கால் காணுங்கள். பாரதியின் வாழ்வைப் பற்றியதானாலும் சரி, வாக்கைப் பற்றியதானாலும் சரி, பெரும்பாலான ஆய்வாளர்கள் தம்முடைய முன்முடிபுக்கு ஏற்ற வகையில் விரித்தும் திரித்தும் பொருளுரைக்கிறார்கள். இவர்களில் ஒரேயொரு அரிய விதிவிலக்கு திரு சீனி. விசுவநாதன் மட்டுமே. பாரதி ஆய்வில் தான் செய்திருக்கும் தவறுகளைக்கூடப் பட்டியலிட்டு, 'பாரதி ஆய்வுகள்: சிக்கல்களும் தீர்வுகளும்' என்று தன் தவறையும் வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையும் துணிவும் பாரதி இயலில் ஈடுபட்டுள்ள எத்தனை ஆய்வாளர்களுக்கு இருக்கிறது? அப்படி நேர்மையான முறையில் பாரதியை அணுகிய என் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களும் மறைந்துவிட்டார். அவருடைய கருத்துகள் எழுத்து வடிவமாக இல்லாமல் போனாலும், குரல் வடிவமாகக் கிடைக்கச் செய்திருப்பது இணையம் நமக்களித்திருக்கும் வரம்.
குயில் பாட்டின் மையச் செய்தி (central message) என்ன என்பதைப் பார்த்து, குயில் பாட்டைப் பற்றிய இந்த அலசலை அடுத்த இதழில் முடித்துக் கொள்வோம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |