திருவானைக்காவல்
திருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம்.

இத்தலத்திற்கு திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவனம், வெண்நாவல் வனம், ஞானக்ஷேத்ரம், ஞானபூமி, காவை, அமுதேஸ்வரம், தந்தி புகா வாயில் எனப் பல பெயர்கள் உண்டு. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று. அன்னை கருணையுடன் அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ இறைவனை வேண்ட, நீர் திரள, அதனை சிவலிங்கமாக்கி அன்னை வழிபட்ட தலம். யானைக்கு அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்பதாலும் கஜாரண்யம். அம்பிகை சிவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம். யானை புகாதபடி கட்டப்பட்டதால் தந்திபுகா வாயில் என்றும் பெயர்களுண்டு. பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், இராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என நவ தீர்த்தங்கள் உள்ளன. இறைவன் கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வளரும் புனிதப் புனலினால் இது 'ஸ்ரீமத் தீர்த்தம்' என பெயர் பெற்றது.

சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது இத்தலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னன் கோச்செங்கணானால் கட்டப்பட்டது. சிற்பக் கலை நுணுக்கங்கள் சிறப்புற அமைந்துள்ள கோயில். சம்பு முனிவர், அகிலாண்டேஸ்வரி, பிரம்மன், இராமபிரான், கவுதம முனிவர், பராசரர், காளமேகம், தாயுமானவர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடைய தலம். இவ்வாலயம் 2500 அடி நீளமும் 1500 அடி அகலமும் கொண்டது. சுவாமி சன்னிதி மேற்கு முகமாகவும், அம்மன் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே இருந்து வெளியேவரை ஐந்து திருச்சுற்றுக்களை உடையது. 4, 5 சுற்றுக்களில் வீடுகள் அமைந்துள்ளன, நான்காவது சுற்றில் சுவாமி புறப்பாடு, தேரோட்டம் யாவும் நடைபெறுகின்றன. ஐந்தாம் சுற்று விபூதித் திருச்சுற்று என அழைக்கப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே சிறப்பான பல சந்நிதிகளும் அழகான தென்னந்தோப்பும் உள்ளது.

யானை ஒன்று காட்டில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு நீராட்டக் காவிரி நீரைத் துதிக்கையால் எடுத்துக்கொண்டு இறைவன் திருமேனிமுன் இருக்கும் பூக்களை, கனிகளை அகற்றித் தான் கொண்டுவந்த நீரால் அபிஷேகித்து வணங்கி வந்தது. இக்காலத்தில் ஒரு சிலந்தி தன் வினை வசத்தால் சிவத்தொண்டு செய்ய விரும்பி வெண் நாவல் மரத்தில் தனது வாய் நூல் கொண்டு அழகிய பந்தல் அமைத்துப் பெருமான் மீது விழாமல் காத்துப் பணி முடிந்து வேறிடம் சென்று தங்கியது. ஒருநாள் சிலந்தியும் யானையும் சிவனுக்குத் திருப்பணி செய்யும் போது சந்தித்தன. யானை சிலந்தியின் வலையைத் துதிக்கையால் குலைத்தது. சிலந்தி கோபம் கொண்டு யானையின் துதிக்கை வழிப் புகுந்து அதன் உச்சந்தலையில் கடித்தது. உயிர்நிலையில் சிலந்தி கடித்ததால் யானை இறந்துபட, சிலந்தியும் வெளியேற வழியற்று இறந்து போனது. சிவபெருமான் காட்சி தந்து யானையைச் சிவ கணங்களுக்குத் தலைமை தாங்கவும், சிலந்தியைச் சோழ மன்னனாகவும் பிறக்க வரமருளினார். அன்றுதொட்டு இத்திருத்தலம் ஆனைக்கா, நாவற்கா என பெயர் பெறலாயிற்று. மறுபிறவியில் சிலந்தி கோச்செங்கட் சோழனாகப் பிறந்து இத்திருக்கோயிலையும், மேலும் பல கோயில்களையும் கட்டித் திருப்பணி செய்ததாக வரலாறு.

சம்பு மாதவன் எனும் முனிவர் நாவற் காட்டில் தவம் செய்யும்போது முனிவரின் மடியில் வெண்நாவற் பழம் விழுந்தது. அதை முனிவர் கைலாயம் சென்று இறைவனிடம் கொடுக்கச் சிவபெருமான் பழத்தை அமுதினும் மேலாகக் கருதிச் சாப்பிட்டுவிட்டுக் கொட்டையை உமிழ முனிவர் அதை பிரசாதமாகச் சாப்பிட முனிவரின் வயிற்றில் நாவல் மரம் வளர்ந்து வெளிப்பட்டது. பிரமனின் பாதத்தில் முனிவர் வணங்க சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி, காவிரியாற்றங்கரையில் அன்னை மோன தவம் இயற்றும் நாவற்காட்டில் போய் இரு. நான் சிவலிங்கமாக அடிநிழலில் தங்கி அருள்புரிவேன் என்றார். அழகுமாறாத அந்த நாவல் மரத்தின் காரணமாக அவ்விடத்திற்கு ஜம்புகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. அன்னை ஆங்கு தவம்செய்ய இறைவன் அதற்கு இரங்கிக் காட்சி அளிக்க, அன்னை வினவும் ஐயங்களுக்கு ஐயன் பதிலளித்து ஞான உபதேசம் செய்ய, அதுமுதல் இது ஞானோபதேசத் தலம் ஆனது. இறைவன் குருவாகவும், அன்னை சிஷ்யையாகவும் இங்கு இருப்பதால் இங்கு திருக்கல்யாண விழா நடப்பதில்லை.

அன்னை தன் திருக்கரத்தால் காவிரி நீரைக் கொணர்ந்து பூஜை செய்ய, அந்த வழிபாடு இன்றும் தொடர்ந்து வருகிறது. உச்சிக்கால வழிபாடு நடத்த வரும் அர்ச்சகர், அம்மன் கோவிலிலிருந்து அம்மனைப் போல் பெண் உருவம் ஏற்று, மலர்க் கிரீடம் சூடி, ருத்திராட்ச மாலை, பூ, நீர் முதலியன ஏந்தி மேளம் ஒலிக்க ஐயனின் சந்நிதிக்குச் சென்று தன்னை அம்பிகை போலப் பாவித்து சிவ வழிபாடு செய்கிறார்.

இச்சந்நிதி ஆதியில் மிக உக்கிரமான சக்தி கொண்டதாக இருந்ததால் பக்தர்கள் பயந்து கோயிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே வழிபாடு முடித்துச் சென்றனர். இதையறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தி இரண்டு ஸ்ரீ சக்ரங்களைத் தயார் செய்து அம்பிகையின் சாந்நித்யம் முழுவதும் அதில் புகும்படி வேண்ட, ஸ்ரீ அன்னையும் அருள் செய்தாள். அந்த ஸ்ரீசக்ரங்களே அன்னையின் காதில் தோடுகளாக அலங்கரிக்கின்றன. அன்னையின் காதுகளில் ஒளிரும் அந்த ஸ்ரீசக்ரங்களின் புனித ஒளி நம்மை எல்லாச் சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றும் தெய்வீக ஒளியாகும்.

சீதா துரைராஜ்,
சென்னை

© TamilOnline.com