இசை மேதைமையாலும் கடும் உழைப்பாலும் கலையுலகத்துக்குப் பெருமை சேர்த்தோர் பலருள் வீணை என்னும் இசைக்கருவிக்குப் புகழ் சேர்த்து 'வீணை தனம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பெற்றவர் வீணை தனம்மாள். இவர் 1867ல் சென்னை, ஜார்ஜ் டவுனில் பாரம்பரியமான இசைக்குடும்பத்தில் பிறந்தார். இவரது பாட்டி காமாட்சி அம்மாள் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர். தஞ்சாவூர் சமஸ்தான இசைக்கலைஞர் பரம்பரையில் வந்தவர். நாட்டியமும் கற்றவர். சியாமா சாஸ்திரி, பாலு ஸ்வாமி தீட்சிதர், பரதம் கணபதி சாஸ்திரி போன்றோரிடம் இசையும் நாட்டியமும் பயின்றவர். பாட்டியின் திறமையும் மேதைமையும் தனம்மாளுக்கு வாய்த்தது. தாயார் சுந்தரம்மாளும் தேர்ந்த பாடகி என்பதால் இசைச்சூழலில் வளரும் வாய்ப்புக் கிட்டியது. தாயாரும் பாட்டியும் தனம்மாளுக்கு இசை பயிற்றுவித்தனர். முத்தையால்பேட்டை தியாகய்யர், தம்பியப்ப பிள்ளை தீட்சிதர், அழகியசிங்கராயர் போன்றோரிடமும் வாய்ப்பாட்டு மற்றும் வீணையிசை நுணுக்கங்களைப் பயின்றார். தேர்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞரானார். சங்கீத வித்வான்களான சுப்புராயர், பலதாஸ் நாயுடு ஆகியோரும் சிறுமி தனம்மாளுக்கு அக்கறையோடு இசை நுணுக்கங்களைப் பயில்வித்தனர். சுப்புராயர், தனம்மாளுக்காகவே சில பாடல்களை எழுதிப் பயிற்சி கொடுத்தார்.
தனம்மாளின் கச்சேரி அரங்கேற்றம் அவரது ஏழு வயதில் நடந்தது. சகோதரி ரூபாவதி உடன் பாட, தம்பி நாராயணசாமி வயலின் வாசிக்க, தாயார் ஆசிர்வதிக்க நடந்த அந்தக் கச்சேரி தனம்மாளுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் தனம்மாளுக்கு வாய்ப்பாட்டுடன் வீணை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. இதனால் பாட்டியினுடைய வீணைக் கச்சேரிகளுக்குச் சென்றும், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த வீணைக் கலைஞர்களான திருவிதாங்கூர் ராமச்சந்திரன், திருவிதாங்கூர் கல்யாணகிருஷ்ணன் போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டும் தனது திறனை வளர்த்துக் கொண்டார். மயிலை சவுரியம்மாள் என்பவர் சிறந்த இசைக் கலைஞர். அவரைத் தனது முன்மாதிரியாகக் கொண்ட தனம்மாள், சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை பயின்றார். அதன் நுணுக்கங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். வாய்ப்பாட்டுடன் வீணைக் கச்சேரியும் செய்ய ஆரம்பித்தார். தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தனம்மாள் தமிழ் சாகித்தியங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். வாசிக்கக் கடினமான திருப்புகழ், திருவருட்பா, தேவாரம், திருவாசகம் போன்றவற்றை மேடையில் தொடர்ந்து வாசித்தார். அத்தோடு நில்லாமல், வாய்ப்பாட்டுக் கலைஞர் என்பதால் அவற்றைப் பாடிக்கொண்டே வீணை வாசித்தார். கிருதிகளும், பதங்களும், ஜாவளிகளுமாக தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகளில் பாடித் தனது மேதாவிலாசத்தைக் காண்பித்தார். அரிய பல கிருதிகளையும், அரிதான ராக பாவங்களில் உள்ள பாடல்களையும் வாசிப்பது அவர் வழக்கமாக இருந்தது. அது "தனம்மாள் பாணி" என்று தனிப்படப் புகழ்ந்துரைக்கப்பட்டது.
கச்சேரிகளில் கண்டிப்பையும் ஒழுங்கையும் கடைப்பிடிப்பவராக இருந்தார் தனம்மாள். "ஆஹா.. பேஷ், பேஷ்" போன்ற கூக்குரல்களோ, துண்டுச் சீட்டு அனுப்பி பாடச் சொல்வதோ, கலைஞர்கள் வாசிக்கும்போது ரசிகர்கள் எழுந்து செல்வதோ அவர் கச்சேரிகளில் காணக் கிடைக்காது. இசையை அவர் ஒரு தவமாக, இறைவனுக்கான பூரண அர்ப்பணிப்பாக, ஒரு தியான வேள்வியாக நடத்தினார். அதில் குறுக்கீடு வருவதை அவர் விரும்பவில்லை. அப்படி ஏதேனும் வந்தால் கச்சேரியையே நிறுத்திவிட்டு வெளியேறி விடுவார். அதுமட்டுமல்ல, புதுமை என்ற பெயரில் ராக பாவங்களைச் சிதைப்பதையோ, பாரம்பரிய முறைகளிலிருந்து மாறித் தன் இஷ்டத்திற்குப் பாடகர்கள் கச்சேரிகள் செய்வதையோ தனம்மாள் விரும்பவில்லை. இசையைப் பொறுத்தவரை எந்தவித சமரசத்தையும் அவர் ஏற்கமாட்டார்.
ஒருமுறை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரிக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தார் தனம்மாள். தோடிக்குப் புகழ்பெற்ற பிள்ளை அப்போது தர்பாரில் கோலோச்சிக் கொண்டிருந்தார். சபை கட்டுண்டு கிடந்தது. திடீரென தனம்மாளின் முகம் மாறியது. சடாரென எழுந்தவர், வேகமாகச் சபையைவிட்டு வெளியேறத் தொடங்கினார். கூட இருந்த ஜாம்பவான்கள் பதறிப்போய் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்தனர். மேடையில் வாசித்துக் கொண்டிருந்த பிள்ளையின் முகம் சுண்டிப் போயிற்று. காரணம், தர்பார் ராகத்தில் வாசித்துக் கொண்டிருந்த பிள்ளை, அதில் சற்றே 'நாயகி' ராகத்தையும் கலந்து விட்டதுதான். அதுதான் தனம்மாளுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்து விட்டது. நாதஸ்வரச் சக்ரவர்த்தியானாலும் அவர் செய்ததை தனம்மாளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு மிகக் கண்டிப்பானவராக இருந்தார்.
தனம்மாளின் கச்சேரிகளில் வீணை ஒன்றுக்குத்தான் முக்கியத்துவம். தம்பூரா, மிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்களுடன் கச்சேரி செய்வதில் அவருக்கு நாட்டமில்லை. "ராகத்தை நீண்ட நேரம் ஆலாபனை செய்யக்கூடாது; இன்ன ராகம் என்று இசை கேட்பவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும்படி வாசிக்க வேண்டும். அதில் மயக்கம் கூடாது" என்பது தனம்மாளின் கருத்து. ரசிகர்களும் தனம்மாளின் கண்டிப்பு பற்றி அறிந்திருந்ததால் அமைதி காத்து ஆதரவு தந்தனர். 1916ல் பரோடாவில் நடந்த இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும், 1935ல் காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் கூடிய மிகப் பெரிய அவையில் கச்சேரி செய்ததும் அவரது வாழ்க்கையின் திருப்புமுனை. இந்தியாவில் மட்டுமல்லாது கொழும்பு முதலிய வெளிநாடுகளுக்கும் சென்று முதன்முதலில் கச்சேரி செய்தவர் தனம்மாள்தான். புகழ்பெற்ற கொலம்பியா நிறுவனம் இவரது இசைத்தட்டுக்களைத் தொடர்ந்து வெளியிட்டு அவருக்குப் புகழ் சேர்த்தது. சீன மொழியில் பாடிக்கூட தனம்மாளால் கேட்பவர் மனத்தில் ஊடுருவ முடியும் என்பது ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் கூற்று. கல்கி, ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் தனம்மாளின் இசையில் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். நாளடைவில் வெளிவட்டாரப் பழக்கங்களைக் குறைத்துக்கொண்டு, ரசிகர்களைத் தன் வீட்டுக்கே வரச்செய்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார் தனம்மாள். ஆண்களுக்கு நிகராக இசை உலகில் சாதிக்க முடியும் என்பதைக் காட்டிய வீணை தனம்மாள் "வீணை ராணி", "வீணை இசைப் பேரரசி", "ஸித்த வித்யாதரி" என்றெல்லாம் போற்றப்பட்டார். கண்டிப்புக்குப் பெயர்போன அவர் கருணை உள்ளம் கொண்டவராகவும் இருந்தார். பிறர் கேட்காதபோதே அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். தான் அறிந்த இசை நுணுக்கங்களைப் பிறருக்கும் பயிற்றுவித்தார். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம், ஜெயம்மாள், காமாட்சி என்று சிறந்த இசை வாரிசுகளை உருவாக்கினார். தனது மகன்களையும் இசைக் கலைஞர்களாக உருவாக்கினார். இவரது மகன்களான ரங்கநாதன் (மிருதங்கம்), விஸ்வநாதன் (புல்லாங்குழல்) ஆகியோர் தேர்ந்த இசைக் கலைஞர்களாகப் புகழ் பெற்றனர். இந்தியாவின் புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர், சங்கீத கலாநிதி பாலசரஸ்வதி, தனம்மாளின் பேத்தி ஆவார். சங்கரன், முக்தா, பிருந்தா போன்ற தனம்மாளின் பேரர்கள் அவரது இசையை உலகறியச் செய்தனர்.
வீட்டுக்குள்ளே பெண்கள் அடைபட்டுக் கிடந்த காலத்தில், அவர்களுக்குச் சம உரிமையும் வாய்ப்பும் மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்து, ஆணாதிக்கச் சமூகத்தை எதிர்கொண்டு, பெண்களால் சாதிக்க முடியும் என்பதை வீணை, வாய்ப்பாட்டு என்று இரு துறைகளிலும் கோலோச்சிச் சாதித்த தனம்மாள், 1938ல் காலமானார். இன்றும் வீணையின் நாதமாக அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.
பா.சு. ரமணன் |