யுவ நாட்டிய சக்தி
ஜனவரி 29, 2012 அன்று 'யுவ நாட்டிய சக்தி' என்ற தன்னார்வ நிறுவனத்தின் தொடக்க விழா வட பிரன்ஸ்விக்கில் (நியூ ஜெர்ஸி) கொண்டாடப்பட்டது. அஸ்வினி நாகப்பன், சஞ்சனா கிருஷ்ணகுமார், நிவேதா பொன்முடி என்ற மூன்று வனிதையரின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சியும் அன்று நடந்தது. இந்த மூன்று நண்பர்களும் சிறு பருவத்தில் இருந்தே வெவ்வேறு குருவிடம் நாட்டியம் பயின்றவர்கள். தங்களது குருக்கள் மூவரையும் அழைத்து அவர்கள் குத்துவிளக்கு ஏற்ற வைத்து இந்த நிகழ்ச்சியைத் துவங்கியது இவர்களின் குருபக்தியைப் பறைசாற்றியது. இவர்களோடு நடனமாடிய ஐஸ்வர்யா வெங்கடேஷ், தீபிகா வெங்கடேசன், நிருபமா நடராஜன், ரம்யா ராமதுரை, ஸ்ரேயா ஆனந்த், த்ரிஷாலா பார்த்தசாரதி ஆகியோர் அரங்கேற்றம் முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் கற்ற அரிய கலையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிதான் இந்த யுவ நாட்டிய சக்தி. பரத நாட்டியக் கலையைப் பேணி பாதுகாப்பதோடு தம்மைப் போன்ற இளம் பெண்களுக்கும் ஒரு தளம் அமைத்துத் தருவது இதன் நோக்கம். இந்த நிகழ்ச்சியில் ஒரு பாடல் தவிர மற்ற அனைத்தும் தமிழ்ப் பாடல்கள். இவர்கள் நடனமாடிய தசாவதாரம், வீரம், தகதக, சின்னஞ்சிறு பெண்போலே போன்ற பாடல்கள் மிகப் பிரமாதம்.

பாலமுரளி,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com