பிப்ரவரி 18, 2012 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு அரோரா (இல்லினாய்) பாலாஜி கோயில் அரங்கில் 'சிவோஹம்' என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதம், குச்சிபுடி, மோஹினி ஆட்டம், ஒடிஸி, கதக் ஆகியவற்றைக் கற்பிக்கும் குருமார்கள் தத்தம் பாணியுடன் நவீன நடனமுறைகளையும் இணைத்து நிகழ்ச்சிகள் வழங்கினர்.
ஸ்ரீ சத்திய சாயி பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியை ஹேமலதா புர்ரா அவர்களின் மாணவர்களின் 'சிவபூஜை' மந்திர கோஷத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோபி ஜாகர்லமுடி அவர்கள் ஒருங்கிணைப்பில், சிகாகோலேண்ட் பஜனைக் குழுவினர், சிவபெருமான்மேல் பஜனைப் பாடல்கள் பாடினர். பரதாஞ்சலி நாட்டியப்பள்ளி கலை இயக்குனர் சந்தியா ராதாகிருஷ்ணன் 'சிவஸ்ருதி' என்ற வித்தியாசமான படைப்பை மோஹினி ஆட்டத்தில் வழங்கினார். பின் உத்கலா நாட்டிய மைய இயக்குனர், ஈப்ஸிதா சத்பதி 'அர்த்த நாரீஸ்வரா' என்ற நிகழ்ச்சியை ஒடிஸி பாணியில் வழங்கினார்.
குச்சுபுடி நடனக்கலைஞர் சங்கீதா ரங்காலா வழங்கிய 'நடேச கௌத்துவம்', 'என்னேரமும்' ஆகிய விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பரவசமூட்டின. நளினமும், அழகும் நிறைந்த கதக்கில் 'சிவ ஆராதனை' சிவபெருமானின் புகழ் பாடியது. இது இந்தியன் டான்ஸ் ஸ்கூல்' இயக்குனர் கௌரி ஜோக், இஷா ஜோக் ஆகியோரால் வழங்கப்பட்டது. 'நிருத்ய சங்கீத்' நடனப்பள்ளி இயக்குனர் சௌம்யா குமரன் வடிவமைத்த 'அம்மா ஆனந்ததாயினி' என்ற வர்ணத்துக்குப் பரத நாட்டியம் ஆடினார் பாவ்யா குமரன்.
ஜினு வர்கீஸின் மாணவர்கள் வழங்கிய 'ஓம் சிவோஹம்' தற்கால பரத நாட்டிய பாணியில் அமைக்கப்பட்ட விறுவிறுப்பான நிகழ்ச்சி. 'ஸோஹம் டான்ஸ் ஸ்பேஸ்' இயக்குனர் அஞ்சல் சாண்டே பரத நாட்டியத்தில் 'சிவனுக்கு நமஸ்காரம்' என்ற நிகழ்ச்சியை வழங்கினார். சுஷ்மிதா அருண்குமார் மற்றும் 'நிருத்யாஞ்சலி' பள்ளி மாணவர்கள் வழங்கிய 'சங்கரா - ஆடலரசனுக்கு ஒரு துதி' சிவராத்திரியின் சிறப்பைச் சித்திரித்தது. ஜானகி ஆனந்தவல்லி நாயர் வடிவமைத்து, தன் மாணவர்களுடன் வழங்கிய 'நடனானந்தம்' என்ற குச்சிபுடி நடனம், தாண்டவம், லாஸ்யம் ஆகிய அம்சங்களுடன், விறுவிறுப்பாக இருந்தது. ரவி டோக்கலாவின் மேடை வடிவமைப்பு வெகு அழகு. பாலாஜி கோவில் கலாசாரக் குழுவினரின் உஷா பரிதி நன்றியுரை வழங்கினார்.
சென்னையின் புகழ்பெற்ற பரதக் கலைஞர் திரு. A.லக்ஷ்மணன் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி மார்ச் 3, 2012 அன்று மாலை 6 மணிக்கு ஆலைய அரங்கில் நடைபெறும்.
ஆங்கில செய்திக்குறிப்பிலிருந்து தமிழில்: மீனாட்சி கணபதி |