2007 மார்ச் 18 அன்று மாலை ·ப்ரீமாண்ட்டில் உள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கத்தில் ராதிகா சங்கர் மற்றும் தாரா சங்கர் ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
வழுவூர் ஞான சபேசரின் பெயரில் இறைவணக்கம், ராகமாலிகை பாட்டுடன் ஆரம்பம். அடுத்து பூர்வரங்கம். பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமியின் ஆசிகளை வேண்டி இந்திரன் அளித்த ‘ஜர்ஜரா’ என்ற குடைபோன்ற குச்சியை நடராஜர் அருகில் வைத்து அஞ்சலி. உருக்கத்துடன் கூடிய ஸ்லோகத்தில் பிரம்மா, பின் ஒரு கணம் தாளம் நிறுத்தி பின் சரஸ்வதி, லட்சுமி வந்தனம் மிக்க அருமை.
தொடர்ந்து ‘கஞ்சதளாயதாக்ஷ¢’ பாடலுக்கு நவரசங்களை விளக்கும் செளந்தர்ய லஹரி ஸ்லோகம் ‘ராகா சசிவதனே’ எனும் இடத்தில் ராதிகா அவர்கள் அன்னையின் முக அழகையும், கருணை விழிகளையும் முகபாவத்தில் அனாயாசமாகக் காண்பித்து அவையோரின் கைதட்டலைப் பெற்றார். சிறந்த தாளக்கட்டு, கை அசைவுகள் கனஜோர்.
பாரதியார் பாடலான ‘தீராதவிளையாட்டு பிள்ளையில்’ கதவைத் தட்டுதல், பழத்தை தட்டிப் பறித்தல், பின்னலை இழுத்தல், மண்ணை வாரி இறைத்தல், மலரைச் சூடுதல் ஆகியவற்றுக்குக் கிருஷ்ணனாக வந்த சிறுமி சோன்யாவின் அபிநயம் மிக்க அழகு. தாரா, மேனகா இருவரும் மாறிமாறிக் காண்பித்த முகபாவம் மனதுக்கு இதம். ஓயாத தொல்லை தரும் கண்ணனைக் கண்டிக்கும் தாயின் நடிப்பு தத்ரூபம். மீன்குட்டிக்கு நீந்த கற்றுக் கொடுக்கணுமா என்றாற்போல குழந்தைகள் மிக சிறப்பாக ஆடி அவையோரை மகிழ்வித்தனர்.
கையும் காலும் இடுப்பும் இணைத்துக் காட்டும் பாவத்துக்குக் கரணம் என்று பெயர். இதில் 108ல் 50 விதமான அசைவுகளை ராதிகா சங்கர், தாரா சங்கர் இருவரும் ஒரே மாதிரி கை அசைவுகளுடன் தாய் மகள் போல் அல்லாமல் இரு சகோதரிகள் போல் ஆடி விளக்கிய விதம் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தாலும் புதுமை கலந்த விறுவிறுப்புடன் இருந்தது.
அடுத்து மேற்கத்திய வாத்திய இசைப் பின்னணியில் ஜடாயுவின் தியாகம். ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது சண்டையிட்டு, காயமடைந்து மரித்த ஜடாயுவை ராமன் தகனம் செய்கிறார். இதைச் சிறந்த முகபாவத்துடன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய விதம் கச்சிதம். தாரா சங்கர் அவர்கள் நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக அளித்தார்.
தொடர்ந்து ‘மயில்மீது’ எனும் முருகன் பாடலில் ராதிகா சங்கர் அவர்கள் இடைவிடாது கம்ப்யூட்டரிலும் டெலி போனிலும் இதர அலுவல்களிலும் ஈடுபட்டுள்ள பெற்றோர், குழந்தைகள் ஒருதரமாவது முருகன் நாமத்தைச் சொல்லக்கூடாதா என்று அபிநயித்த விதம் மிக்க அருமையாக இருந்தது.
ஜெயதேவர் அஷ்டபதியில் (17, 19, 4வது) ராதையின் கோபம், கண்ணனின் கெஞ்சல், பின் இருவரும் இணைந்து கோலாட்டம் ஆடியது பேரானந்தம்.
கடைசியாக ‘த்ருபத்’ எனும் இந்துஸ்தானி இசையில் தில்லானாவைப் போன்ற துரிதகாலத் தாளகட்டுடன் சப்த ஸ்வரங்களின் விளக்கத்தில் ஏழுவித பறவை, மிருகங்களின் உருவங்களை அபிநயித்துக் காண்பித்து பின் சர்வம் பிரம்ம மயம் என முடித்தது மிகப் பொருத்தம். பாட்டு, வயலின், மிருதங்கம், மோர்சிங், நட்டுவாங்கம் எல்லாமே மிகச் சிறப்பாக இருந்தன.
சீதா துரைராஜ் |