இதுவரை... பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் மேலும் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறுவயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்து கொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயைச் சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ராஜை அழைத்து வர தினேஷ், ஸ்ரீயுடன் கிளம்புகிறான். ஸ்ரீ தனக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் நினைவு கூர்ந்தவாறே ராஜைப் பழி தீர்க்கும் எண்ணத்தில் காரைச் செலுத்துகிறான். ஸ்ரீ பழி தீர்த்தானா? ராஜுக்கு வேலை கிடைத்ததா? அவன் கஷ்டம் தீர்ந்ததா?
இருட்டாக இருந்தது, வழி காரின் பிரகாசமான தலை வெளிச்சத்திலும் சரியாகத் தெரியவில்லை. மழை வேறு நசநசவென்று அனத்திக் கொண்டிருந்தது. ஸ்ரீயின் மனம் ஒரு நிலையில் இல்லையென்றாலும், சாலை சீராக இருந்ததால் கார் நிதானமாகப் போய்க் கொண்டிருந்தது.
*****
மறுநாள் டாக்டர் சாரியிடம் வழக்கமான செக்கப்புக்குப் போனபோது, அவரிடம் தனியாகச் சில நிமிடங்கள் எனக்குப் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் என் பெற்றோரின் மன உளைச்சலையும், என்னால் என்னுடைய இந்த மனச் சிக்கலிலிருந்து வெளிவர முடியாத நிலையையும் விவரித்தேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் புரியும் விதத்தில் எடுத்து சொன்னார்.
"சீனு நீ ஒரு புத்திசாலிப் பையன். ஆனால் உன் பொறுப்பை இன்னும் நீ உணரவில்லை. அது உன் வயசுக்குப் பெரிய குற்றமில்லை. ஆனால் உனக்கு இன்னிக்கு இருக்கிற பிரச்சனைக்கு நீ உன் பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். உன் உடல்ரீதியான பிரச்சனைக்கு நான் குடுக்கிற மருந்தும், ட்ரீட்மெண்டும் ஒரு முடிவைக் கொடுத்துடும். ஆனால் உன்னுடைய மனசு உறுதியாகணும். உன்னால் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரமுடியும், வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்னு நீ மனப்பூர்வமா நம்பினால் மட்டுமே உன் நிலைமை சரியாகும். உன் அப்பா, அம்மா கவலைப்படுவது எனக்கும் வெளிப்படையா தெரியுது. புதுசா அவங்களை என் கிளினிக்குல பாக்குறவங்க அவங்களைத் தான் பேஷண்டுனு நினைச்சுப்பாங்க, அப்படி சோர்ந்து போயிருக்காங்க. அப்பா அம்மாவின் மன உளைச்சலும், அவங்க உன்னைப் பற்றி அபரிமிதமா கவலைப்படுறதும் உனக்குப் பொறுப்பை உணர்த்தியிருக்கணும்."
"எனக்குப் புரியுது டாக்டர், ஆனால் எனக்கு ஒருவித இயலாமை வந்துவிட்டது. எல்லாத்துக்கும் அந்த ரங்கன்தான் காரணம், அவனை என்னால் ஒண்ணும் பண்ணமுடியலையேனு ஒரு கையாலாகத்தனம் என்னை வாட்டுது. எல்லாத்திலேயும் வெறுப்பு வந்து எதும் சரியாக இனி எனக்கு நடக்காதுனு சோர்வு மனப்பான்மை வந்துட்டுது."
டாக்டர் சாரி இப்போது சற்றுக் கடுமையும் கண்டிப்பும் கலந்த குரலில் பேசினார். "தீதும் நன்றும் பிறர் தர வாரா அப்படினு நீ படிச்சதில்லையா? ஏதோ ஒரு விதத்தில் உன்னுடைய இந்த நிலைக்கு நீதான் காரணமாயிருந்திருக்கிறாய். ரங்கன் ஒரு கருவி அவ்வளவே. உன் தேவையற்ற பயமும், மத்தவங்ககிட்ட எச்சரிக்கையில்லாமல் தாட்சண்யம் காட்டும் குணமும் உன்னுடைய இந்த நிலைக்குக் காரணம். எப்படி உன் பிரச்சனைக்கு காரணம் உன்கிட்டே இருக்கோ அதற்கான தீர்வும் உன்கிட்டதான் இருக்கு. இனி அந்த ஸ்கூல்ல நடந்த விஷயத்தையோ, அந்த ரங்கனை ஒண்ணும் செய்ய முடியலைங்கிற எண்ணத்தையோ நினைக்கிறதில்லைனு முடிவு செய்துக்க. நீ உன் எதிர்காலத்துல என்ன படிக்கணும், என்ன வேலைக்குப் போகணும்னு அதைப் பத்தியெல்லாம் யோசிச்சு ஆக்கபூர்வமா இரு. உன் வாழ்க்கை உன் கையில்."
டாக்டர் சாரியின் அறிவுரை என் பொறுப்பை எனக்கு நன்றாக உணர்த்தி விட்டது. அன்றிலிருந்து நான் ஒரு புதுப்பிறவி எடுத்தாற்போல் மாறினேன். என் அப்பா அம்மாவுக்கு இந்த மாற்றம் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. வீட்டின் நிலை முன்போல் சகஜமாகவும், கலகலப்பாகவும் மாறத் தொடங்கியது. டாக்டர் சாரியின் கவனமான சிகிச்சை, எப்டாய்ன், டெக்ரெடால் மருந்துகளின் உபயம், என் பெற்றோரின் பிரார்த்தனைகள், என் கவனம் கலையாத முயற்சி -- இவற்றால் நான் படிப்படியாகக் கல்லூரிப் படிப்புவரை முடிக்கக் காரணமாய் இருந்தன. எனக்கு வேலை கிடைத்ததும்கூட என் தன்னம்பிக்கையான பேச்சினாலும், வெளிப்படையாக என் நிறைகுறைகளை நேர்காணலில் எடுத்துச் சொன்னதாலுமே என்று நம்பினேன்.
ரங்கனை சுத்தமாக என் வாழ்க்கையிலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, என் வேலையில் ஊக்கமாக உழைத்து முன்னேறினேன். என் நோயும் என்னைவிட்டு விலகியது. நான் முன்னுக்கு வந்து நல்ல நிலையில் குடும்பம் நடத்துவதை, அதற்குக் காரணமான என் பெற்றோரும், டாக்டர் சாரியும் சிறிது காலம் மட்டுமே பார்த்து மகிழ முடிந்தது. இப்போது மூவரும் இந்த உலகில் இல்லை. ஆனால் கடவுள் அவர்களை என்னிடமிருந்து பறித்துக் கொள்வதற்கு முன்னால், சௌம்யாவையும், சித்தார்த்தையும் எனக்குக் கொடுத்து தன் கருணையைக் காட்டிவிட்டான்.
எந்த மன உளைச்சலும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையில் இன்று புயல் வீசிவிட்டது. கனன்று கொண்டிருக்கும் நெருப்பை விசிறிவிட்டாற் போல், என் மனதின் ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பழைய பகை மிகப் பெரிய மாற்றத்தை இந்த ஒரு நாளில் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. டாக்டர் சாரியின் அறிவுரையை நான் என் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் இப்போது மாற்றி நினைத்துக் கொண்டேன். "தீதும் நன்றும் பிறர் தர வாரா -- இது ரங்கனுக்கும் பொருந்தும். இன்று எனக்குப் பழிவாங்க நல்ல சந்தர்ப்பம் நான் தேடிப்போகமலே என்னிடம் வந்திருக்கிறது. இதனால் ரங்கனுக்கு நேரப்போகும் தீமைக்கு அவனே பொறுப்பாளி, நான் அல்ல" என்று என் பழிவாங்கும் நினைப்பிற்குச் சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
*****
தினேஷ் வழிகாட்டியதில் சீக்கிரமே ராஜின் கார் நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றுவிட்டோம். சிறிதே தூரத்தில் அவன் காரையும், அதில் நிழலாகத் தெரிந்த அவன் உருவத்தையும் பார்த்ததும் என் உடல் தடதடக்கத் தொடங்கிவிட்டது. நிதானப்படுத்திக் கொண்டு, காரை ராஜின் காருக்கு முன் நிறுத்தி, நானும் தினேஷும் இறங்கினோம். அந்த இடம் இருளாகவே இருந்தது, காரின் தலை வெளிச்சம் மட்டும் அரசல் புரசலாக யார் எங்கிருக்கிறார் என்று காட்டியது. எங்கள் கார் நின்றதுமே, ராஜ் தன் காரைவிட்டு வெளியே வந்து எங்களை எதிர்நோக்கி நின்றான். தினேஷ்தான் முதலில் அவனிடம் பேசினான்.
"யூ ஓ மீ பிக் டைம் ஃபார் திஸ். உனக்கு வேலை வாங்கித் தரேன்னு வாக்குக் கொடுத்தாலும் கொடுத்தேன், ஒரு சண்டே ஈவினிங் வீட்டுல நிம்மதியா தண்ணி அடிக்க கூட முடியாம பெரிய ரோதனை" என்று அன்பாகச் சலித்துக் கொண்டான்.
"ரொம்ப சாரிப்பா, என்னாலதான் உனக்குப் பெரிய சிரமம். உனக்கு இன்னும் கஷ்டம் குடுக்காம வரலாம்னு பார்த்தா, வண்டி மக்கர் பண்ணிடுச்சு."
"ஏய் விடுப்பா, சும்மா உன்னை கலாய்க்கலாம்னு ஏதோ சொன்னா, ரொம்ப சீரியஸ் மூடுல நீ பேசறே. சரி என்னை விடு." பின், என்பக்கம் திரும்பி, "சார்தான் திருவாளர் ஸ்ரீ. உனக்கு வேலை வாங்கிக் கொடுத்து உன் வாழ்க்கையில் விளக்கேத்தப் போகும் தெய்வம். ஸ்ரீ, திஸ் இஸ் ராஜ்," என்று அறிமுகப்படுத்தினான்.
ராஜ் பெரிய புன்னகையோடு என்னை நெருங்கி, கைகளை நீட்டியது அந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்தது. ஆனால் எனக்கு கைகொடுக்க இஷ்டமில்லாததால், இருட்டில் தடுமாறுவதுபோலத் தயங்கி "ஹை ஹலோ!" என்று குரலில் என்னைத் தெரிவித்துக் கொண்டேன். ராஜின் புன்னகை உடனே அடங்கியது என்னால் உணர முடிந்தது. ஆட்டம் இப்போதுதான் ஆரம்பம் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு "நான் வாழ்க்கையில் விளக்கேத்தறது இருக்கட்டும், இருட்டில் எதற்கு நின்று பேசிக்கிட்டிருக்கணும், மணி பத்தாயிடுச்சு, வீட்டுக்குப் போய் வெளிச்சத்தில் பேசலாம்" என்றேன்.
"நான், இந்த வண்டியை டோ பண்ணி எடுத்துப் போகச் சொல்லிட்டேன். எல்லாத்தையும் எடுத்துகிட்டு உன் வண்டிலே போகலாம். கவிதாவை டாக்ஸி எடுத்துகிட்டு உன் வீட்டுக்கு வரச் சொல்லிடறேன்" என்று ராஜ் தினேஷிடம் சொன்னான்.
அடுத்த பத்து நிமிடங்களில், நாங்கள் எல்லாரும் தினேஷின் வண்டியில் இருந்தோம். நான்தான் மீண்டும் ஓட்டினேன். இப்போது ராஜ் என் அருகில் உட்கார்ந்து வந்தான். தினேஷும், குழந்தை நித்யாவும் பின் சீட்டில் இருந்தார்கள். தினேஷ் மயக்கமாக உறங்கத் தொடங்கியது, அவன் குறட்டை சப்தத்திலிருந்து தெரிந்தது. நானும், ராஜும் தனியாக அவ்வளவு வருடங்கள் கழித்து ஒரு அன்னிய தேசத்தில்….
"ஏண்டா அன்னிக்கு அப்படித் திட்டம் போட்டு என் வாழ்க்கையைக் கெடுத்தே?" என்று சட்டையைப் பிடித்து உலுக்கி, செவுளில் அறைய வேண்டும்போல் ஆத்திரம் ஒருபுறம், அவனைப் பேசவிட்டு, உனக்கு இந்த வேலைக்குத் தகுதியில்லை என்று அமைதியாக அவனைப் பழிதீர்க்கும் எண்ணம் இன்னொரு புறம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நான் இரண்டையும் கலந்து, பேச ஆரம்பித்தேன். ராஜ் என்னை இன்னும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இருட்டும், இவ்வளவு கால உருவ மாற்றங்களும் அவனுக்கு என்னைத் தெரியப்படுத்தாமலிருக்க உதவின.
"ஆமா மிஸ்டர் ராஜ், டூ யூ ப்ரிஃபர் டு பீ கால்ட் ராஜ் ஆர் ரங்கன். உங்க முழுப்பெயர் ரங்கராஜ் இல்லையா?"
"இந்த ஊரில் ராஜ். இந்தியாவில் எல்லாரும் என்னை ரங்கன்னுதான் கூப்பிடுவாங்க. நீங்க எப்படி வேணுமானாலும் கூப்பிடலாம்."
"நான் உங்களை ரங்கன்னே கூப்பிடறேன். ஆமா உங்க சொந்த ஊர் எது, உங்க பேக்ரவுண்ட் பத்தி கொஞ்சம் சொல்லுங்க." (சொல்லுடா, சொல்லு எவ்வளவு பொய் சொல்லப் போறேனு பாக்கறேன்).
"டவுன் சவுத் தமிழ் நாடுல, கண்ணனூர்தான் என் சொந்த ஊர். நிறையப் பேர் கேள்வி கூட பட்டிருக்கமாட்டாங்க. சின்ன வயசுப் படிப்பு முழுக்க அந்த ஊரிலதான். பிறகு எங்க அப்பா காலமானதும், சென்னை போயிட்டேன். காலேஜ் படிப்பெல்லாம் அங்கே. ஆமா நீங்க சென்னைதானே?"
"ஆஅ..ஆமா; நான் சென்னைதான். ஆமா, நீங்க படிப்புல நல்ல கிரேடு, சாரி மார்க்ஸ், ஸ்கோர் பண்ணியிருக்கீங்க, ஏன் ப்ரொஃபஷனல் கோர்ஸ் எல்லாம் சேர்ந்து பெரிய லெவலுக்கு போகாமே இந்த சாஃப்ட்வேர் லைன்ல வந்துட்டீங்க?"
"எனக்கும் ஆசைதான், சின்ன வயசுல எப்பவும் எல்லாத்திலேயும் நான் ஃபர்ஸ்ட். ஆனா அதெல்லாம் நான் என் ஊரில் இருந்தவரை தான். சென்னை வந்ததும், என்னாலே ஈடு கொடுக்க முடியலை. எவ்வளவு நல்லா படிச்சாலும், என்னை விடவும் நல்லாப் படிக்கிறவங்க எனக்கு வர்ர வாய்ப்பை எடுத்துக்கிட்டாங்க."
"ஓஒ அப்படியா. ஏன் மத்தவங்களைக் குத்தம் சொல்றீங்க. ஏன் அவங்க நேர்மையா படிச்சுதானே உங்களை முந்தினாங்க? இல்லை வேறே ஏதாவது உங்க முதுகுக்கு பின்னாலே வேலை பண்ணி உங்களோட வாய்ப்பைப் பறிச்சுக்கிட்டாங்களா? எதுக்கு சொல்றேன்னா அப்படி அடுத்தவங்களைக் கெடுத்து முன்னுக்கு வர்ரவங்களும் இருக்காங்க." இந்த பேச்சு ராஜை ஒரு நிமிடம் மவுனத்தில் ஆழ்த்தியது.
"ஏன் ரங்கன், மௌனமாயிட்டீங்க? எனி நோஸ்டால்ஜிக் ஃபீலிங்க்ஸ்" சீண்டுவது பிடித்திருந்தது.
"இல்லை இல்லை ஸ்ரீ. எனக்கு அப்படி யாரும் எதுவும் செய்ததில்லை. என் குடும்பச் சூழல் இருந்த இருப்பில எப்படியாவது சீக்கிரம் வேலைக்குப் போனா போதும்னு என் மத்த ஆசைகளை மூட்டை கட்ட வேண்டியதாயிடுச்சு. பட் ஐ டோண்ட் ரிக்ரெட், இதுதான் எனக்கு அமைஞ்சதுனு நினைச்சிக்கிட்டேன். சாரி ஃபார் த போரிங் பிலாசஃபி. லெட் அஸ் கன்டின்யூ வித் தி இன்டர்வியூ."
"ஓஓஒ... திஸ் இஸ் நாட் என் இன்டர்வியூ ரங்கன். உங்களைப்பத்தி தெரிஞ்சிக்க சில கேள்விகள் கேட்டேன். தட்ஸ் ஆல். சும்மா காரில் போகும்போது பேசிக்கிறோம் அவ்வளவுதான். உங்களுக்கு நான் சொல்லப்போறது அதிர்ச்சியா இருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தான் ஆகணும்."
ரங்கன் பீதி அடைவதை அவனுக்குத் தொண்டை அடைக்கும் சப்தத்திலும், அவன் தன் கைகளால் சீட்டின் கைப்பிடியை கெட்டியாகப் பிடிப்பதிலுமிருந்து என்னால் உணரமுடிந்தது.
"நீங்க தினேஷோட ஃப்ரெண்ட். அதோட உங்க ரெசூமே பாத்ததுல நீங்க இந்த வேலைக்கு சூட்டபிளா இருப்பீங்கனு நினைச்சேன். அதனாலே தான் உங்களை நேரில் பார்க்கச் சம்மதிச்சேன். ஆனால் உங்க கெட்ட நேரமோ இல்லை எங்க கம்பெனியோட நல்ல நேரமோ தெரியலை, ஜஸ்ட் இன்னிக்கு ஈவினிங் எனக்கு இன்னொரு கேண்டிடேட் ரெசூமே வந்தது. உங்களைவிடத் தகுதிகள் பலபடி அதிகம், அவரும் உங்களை மாதிரி இண்டியாலிருந்து இங்க வந்து செட்டில் ஆனவர்தான். தகுதி அடிப்படையில பாத்தா நான் அவருக்குத்தான் இந்த வேலையைக் குடுக்கணும். தினேஷ்கிட்ட இதை என்னாலே அப்பவே சொல்லமுடியலை. நீங்க கிளம்பி வந்துட்டீங்க. பாக்கறதில் தப்பில்லைனு ஜஸ்ட் வந்தேன்."
"ஸ்ரீ.... சார்.... என்ன சொல்றீங்க. இதை நான் மலைபோல நம்பி வந்தேன். இந்த வேலை இல்லேன்னா என் குடும்பமே இடிஞ்சு போயிடும். வேணும்னா நீங்க என்னை இன்டர்வியூ பண்ணுங்க, ஒரு சான்ஸ் குடுங்க ப்ளீஸ்."
"சாரி ரங்கன், இட் வில் பீ வேஸ்ட் ஆஃப் டைம் ஃபார் போத் ஆஃப் அஸ். அஃப் கோர்ஸ் நான் நினைச்சா அந்த கேண்டிடேட் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணிட்டு உங்களை எடுத்துக்க முடியும். ஆனால் தகுதி அடிப்படையில அவர் உங்களைவிட எல்லா விதத்திலேயும் இந்த வேலைக்கு சூட்டபிள். என் பொஸிஷன்ல இருந்தா நீங்க என்ன செய்வீங்க ரங்கன். ஆனஸ்டா சொல்லுங்க. தகுதி, திறமை உள்ள அவருக்கு இந்த வேலையை நான் குடுக்கணுமா. இல்லை பின்வாசல் வழியா, உங்களைக் கொண்டுவந்து அவரோட வாய்ப்பை பறிக்கணுமா? சொல்லுங்க."
ராஜ் சங்கடமான இந்தக் கேள்விக்கு பதிலை யோசிக்க ஆரம்பித்தான். கார் இப்போது தினேஷின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
(அடுத்த இதழில் நிறைவுறும்)
சந்திரமௌலி, ஹூஸ்டன் |