ஒருநாள் கடவுள்
"ஹேய் மனோ!"

கூப்பிட்ட குரலில் இருந்த அன்யோன்னியம், பீக் ஹவர் டிராஃபிக்கில் கூட என்னை அறியாமல் திரும்பிப் பார்க்க செய்தது. பாக்கி!

"பாக்கி! நீயா… எப்டி இருக்க? என்னால நம்பவே முடியல!"

"ஆமால்ல!" தெத்துப்பல் தெரிய அழகாக சிரித்தாள்.

ஒரு சில நொடிகள் பரஸ்பரம் சிரித்துக் கொண்டே இருந்தோம்.

"என்னடா பிளாஷ்பேக் போறியா?" என்று நக்கலாகக் கேட்டாள்.

"சரிசரி இப்படி நீ பேரலல் ரைடிங் பண்ணா போலீஸ்காரன் என்னை மட்டும் பிடிச்சிடுவான். இரு பார்க் பண்ணலாம்." மறுபடியும் தெத்துப் பல் சிரிப்பு.

அருகில் இருந்த ஒரு ஆவின் கடை நிழலோரம் வண்டியைப் பார்க் பண்ணிவிட்டு அதில் அமர்ந்தோம். நான் பேசுகிற நிலையில் இல்லை என்றாலும் அவளின் இந்தப் பரிச்சயமான முகமலர்ச்சி பழைய நாளுக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவளே ஆரம்பித்தாள்.

"நிஜமாவே நான் எதிர்பார்க்கல தெரியுமா! ரியர்வியூவில உன் மூஞ்சிய சும்மாதான் பாத்தேன். இத எங்கயோ பாத்திருக்கமேன்னு வந்தா, நீ!!" ஆச்சர்யம் விலகாமல் சொன்னாள்.

"வண்டி ஓட்ற சாக்குல இதெல்லாம் பண்றியா நீ?"

"சீ போ… எப்டி இருக்க... சரி சொல்லு சாப்ட்டியா?"

" ... "

"எதுக்கு இப்டி அழுது வடியர?ஆமா மஹி எப்டி இருக்கா?"

"எதாவது ஒண்ணு கேளு"

சற்று யோசித்துவிட்டு, "சாப்டியா?" என்றாள்.

"இன்னும் இல்ல..."

"அப்போ இரு," என்று சொல்லி ஸ்கூட்டியில் இருந்து இறங்கி ஆவின் கடை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள், என் பதிலை எதிர்ப்பார்க்காமல்.

அதான் பாக்கி என்கிற பாக்கியலட்சுமி. என் ஸ்நேகிதி. அப்படியே இருக்கிறாள்.

5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன். தெத்துப்பல்காரி சிரித்தே மழுப்பி விடுவாள்.

என் அம்மாவுக்கு பாக்கி என்றாள் இஷ்டம். நான் மஹியோட ரகசியாமாய்ப் பேசும்போதெல்லாம் என் அம்மா எட்டிப் பார்த்து, "பாக்கிதானடா… எனக்கு தெரியும். கொஞ்சம் கொடேன், நான் பேசறனே" என்பாள். என்னமோ எதையோ கண்டுபிடித்த சாதனைக் கண்ணில் மின்ன.

"சரியாப் போச்சு. உனக்கு இந்த நினைப்பு வேறையா. இது என்னோட பிரெண்ட் மஹி. பேசறியா?"

"கண்ட கழுதையோட நான் ஏன் பேசணும்" என்று வேண்டுமென்றே காதுபட முணுமுணுத்துக் கொண்டு உள்ளே போய்விடுவாள்.

இப்படி பாக்கி என்னை, எனக்குப் பிடித்தவர்கள் எல்லோரையும், பிடித்து வைத்திருந்தாள். நம் ஊரில் ஸ்நேகிதம் விட்டு போகக் காரணமா இல்லை! அப்படித்தான் பாக்கி என் தினசரி வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, ஒரு மழைவிட்ட நாளில் நான் அசைபோடும் ஞாபகங்களில் ஒன்றாகச் சேர்ந்து விட்டாள். இப்போதுதான் மீண்டும் பார்க்கிறேன்.

"ஹெலோ, என்ன நீ கொஞ்சம் கேப் கிடைச்சா பிளாஷ்பேக் போய்ட்ற!" சட்டென்று முன் நின்று கொண்டிருந்தாள்.

"நீ இன்னும் மாறவே இல்ல பாக்கி."

மெலிதாகச் சிரித்தாள். "சரி இப்போ சொல்லு எப்டி இருக்க?"

"இருக்கேன்."

"மஹி எப்டி இருக்கா?"

"இருக்கா."

"கல்யாணம் ஆகிடுச்சா?"

"யாருக்கு.. எனக்கா, மஹிக்கா? மஹிக்கு ஆய்டுச்சு. எனக்கு இன்னும் ஆகல!"

பலமாகச் சிரித்தாள்.

நீங்கள் யாரிடமாவது அதுவும் உங்கள் நெருங்கின தோழியிடம் இப்படி ஒன்றைச் சொல்லும்போது அவள் சிரித்தால் எப்படி இருக்கும்... எனக்குக் கோவம் சுள்ளென்று வந்தது. முறைத்தேன்.

"இப்போ எதுக்கு முறைக்கிற?"

முறைத்துக்கொண்டே இருந்தேன்

"இப்போ நான், ‘மனோ..என்னாச்சு... எப்டி நடந்துச்சு? ரெண்டு பேரும் எவ்ளோ சின்சியரா இருந்தீங்க’ன்னு டயலாக் சொல்லணுமா?"

நான் மிகப்பெரிய இழப்பு என்று இதுநாள் வரை மருகிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை மிகச் சாதாரணமாய் பாக்கி அலசுவதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெறித்துப் பார்த்தேன்.

"சரி...! மஹி இல்ல. இப்போ என்ன அதனால நீ இன்விசிபிள் ஆகிட்டியா? இல்லல்ல? லைஃப் இஸ் நார்மல்?"

"நீ அத விடு, வேற எதாவது பேசு."

"மாட்டேன். நான் அதத்தான் பேசுவேன். ஒரு சின்ன விஷயம். இதுக்குப் போய்..."

"எனக்கு இது சின்ன விஷயம் இல்ல பாக்கி...!"

"சரி, பெரிய விஷயமாவே இருக்கட்டும். நடந்தது எதையும் உன்னால இப்போ மாத்த முடியுமா?"

"...."

"முடியுமா..?"

"முடியாது!"

"அப்போ ஃப்ரீயா விடு. இதெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இல்ல."

"..."

"பேய் முழி முழிக்காத, சாப்டு," அதட்டினாள்.

ஏதோ பேச ஆரம்பித்தாள். ஏதேதோ... எனக்கு எதுவும் காதில் விழவில்லை.

ஆனால் ஆளில்லா நிழற்குடையில் அமர்ந்து பிடித்த புத்தகம் படிப்பதைப் போல் மனதுக்கு இதமாக இருந்தது இந்த நொடி... அவள் என் அருகில் இருப்பதும்தான். என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட... சட்டென்று கைகளால் மறைக்கப் போனபோது அதுவரை வேற எங்கயோ பார்த்துக் கொண்டிருந்தவள் சரியாக என்னைப் பார்த்துவிட்டாள்.

என்னால் முடியவில்லை, உடைந்து விட்டே.ன்.

"மனோ லூசு... அழற பாரு!"

"இவ்ளோ நாள் வெயிட் பண்ண... இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுன்னு கேட்டேன். சரின்னு சொல்லிட்டுப் போனவ மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து, ஒரு வருஷத்துல எதும் மாறாது மனோன்னு ஏதேதோ காரணம் சொல்லி, கல்யாணப் பத்திரிகை வெச்சிட்டு போய்ட்டா .."

''அந்த ஒரு வருஷத்துல நீ என்ன பண்ண?"

"ஒரு மண்ணும் பண்ணல" என்று சொல்லிக்கொண்டே என் விசிடிங் கார்டு கொடுத்தேன்.

"ஸ்மால் ஸ்கேல்தான். நான், நம்ம நந்து இல்ல, எல்லாம் சேந்து ஆரமிச்சோம். அதுலயும் எதும் பெருசா ப்ராஃபிட் இல்ல."

ஒரு வருஷத்துல பெரிய விஷயம்டா. அதுவும் நம்ம பசங்கன்னு கேக்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்னும் ரெண்டு கார்டு கொடு. என் வீட்டுக்காரர்கிட்ட கொடுக்கறேன்" என்று வாங்கினாள்.

"எனக்கு அவள பாக்கணும்போல இருக்கு... இந்த டென்ஷன்ல..."

"அவள பாக்கணும்னு இருந்தா அதோ அந்தத் தெருமுனைல கூட வெச்சி பாப்ப. ஆனா பாக்கும்போது கொஞ்சம் நீட்டா இருக்கணும்; இல்லைனா அவ எடுத்த முடிவு சரின்னு ஆகிடும்."

"நிறுத்தாத பாக்கி, பேசிட்டே இரு."

ஒரு மென்மையான புன்னகை, "சரி, இப்போ எங்க போய்ட்ருக்கே?"

"ஒரு காண்ட்ராக்ட் விஷயமா கிளையன்ட் ஒருத்தனப் பாத்துட்டு வரேன். அதுவும் அம்பேல்," குரல் தழுதழுத்தது.

"நீ வொரி பண்ணிக்காத."

"இல்ல பாக்கி, இது முக்கியம். கிளையன்ட் இப்படிக் கால வாருவான்னு நினைக்கவே இல்ல! சில சமயம் ரொம்பத் தனியா இருக்கேன் என்னச் சுத்தி யாருமே இல்லையோன்னு தோணுது."

தலை கவிழ்ந்து கொண்டேன்.

"தனியா இருக்கியா. யார் சொன்னா. இதோ பார் உன்மேல ஒரு பூச்சி" என்று என் சட்டைப் பைமேலே ஒட்டிக்கொண்டு எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பூச்சியைக் காட்டினாள்.

"இங்க பாரு மனோ, இந்த கிளையன்ட், மஹி இதெலாம் நீ கிழிச்சு போட்ட தேதி. முடிஞ்சு போச்சுன்னு கசக்கி எரிஞ்சதத் திருப்பி எடுத்துப் பாக்கிற அளவுக்கு நீ என்ன வேல வெட்டி இல்லாதவனா! ஐ டோன்ட் திங்க் ஸோ."

மறுபடியும் சடசட என்று பேச ஆரம்பித்தாள் .

இதுவரை என் வீட்டுக் கண்ணாடி காட்டாத என் பிம்பத்தை அவளின் தீர்க்கமான கண்கள் அப்பட்டமாய்க் காட்டிக் கொண்டிருந்தன.

எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சின்ன வயதில் "அம்மா என்ன விடுமா. விளையாடப் போகணும். வெளில பாரு, எல்லாரும் ஜாலியா இருக்காங்க" என்று முனக ஆரம்பிக்கும்போது சட்டென்று நடு மண்டையில் வலிக்காமல் ஒரு கொட்டுக் கொட்டி "முதல்ல ஹோம்வர்க்க முடி. உன்ன எப்போ விளையாட விடணும்னு எனக்குத் தெரியும்" என்று என் அம்மா சொல்வதுபோல் இருந்தது.

கடவுள் சல்வாரில் தோன்றுவார் என்று நான் நம்பியது அன்றிலிருந்து தான்!

ப்ரீத்தி சேதுரகுநாதன்,
வடகரோலினா

© TamilOnline.com