தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். 1925ல் பர்மாவில் பிறந்த ஹெப்சிபா, குமரி மாவட்டத்தின் தக்கலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தந்தை பர்மாவில் மர வணிகர். இரண்டாம் உலகப் போரை அடுத்துக் குடும்பம் நாகர்கோயிலுக்குக் குடிபெயர்ந்தது. முதுகலைப் படிப்புவரை அங்கு நிறைவு செய்த ஹெப்சிபா, திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி சேர்ந்தார். அங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜேசுதாசனைக் காதலித்து மணந்தார். கணவரின் தூண்டுதலால் குமரி மாவட்ட மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட 'புத்தம் வீடு' நாவலை எழுதினார். பரவலான வரவேற்பைப் பெற்ற இந்நாவல் பின்னர் மலையாளத்திலும், ஆங்கிலத்தில் 'Lissy's Legacy' என்ற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 'டாக்டர் செல்லப்பா', 'அனாதை', 'மாஜினி' போன்ற படைப்புகளைத் தந்திருக்கும் ஹெப்சிபா, 'Countdown from Solomon' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல் ஒன்றைத் தந்திருக்கிறார். ஆங்கிலத்தில் குறிப்பிடத்தக்க கவிதை நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், சிறுவர்களுக்காகவும் பல படைப்புகளைத் தந்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை, 'Songs of The Cuckoo and Other Poems' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 2002ல் கணவரது மறைவுக்குபின் மதச் சேவையில் வாழ்க்கையைக் கழித்த ஹெப்சிபா ஜேசுதாஸன் உடல் நலிவுற்றுக் காலமானார்.
|