டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி (82) பிப்ரவரி 12, 2012 அன்று காலமானார் இவர் மே 20, 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின், ஊரிஸ் கல்லூரியில் இண்டர்மீடியட் நிறைவு செய்தார். பின் டில்லியின் மத்தியச் செயலகத்தின் வரலாற்று ஆய்வுத் துறையில் ஆராய்ச்சியாளராக இருந்த கே.என்.வி சாஸ்திரியின் அழைப்பின் பேரில் அவருக்கு உதவியாளராகப் பணியாற்ற டில்லி சென்றார். ஆறு ஆண்டுகள் அந்தப் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்றபின் மத்திய பொதுப்பணித் துறையில் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பல்வேறு சிறு சிறு பொறுப்புகளில் பணியாற்றினார். எழுத்தே தமது வாழ்க்கையாகக் கொண்ட இவர், அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளராக விளங்கியவர். இவரது படைப்புகள் தினமணி, விகடன். கல்கி, வடக்குவாசல் உட்படப் பல இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். அதன் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
|