புத்திசாலிக் குரங்கு
ஓர் அடர்ந்த காட்டில் சில மிருகங்கள் வாழ்ந்து வந்தன. ஒரு சிங்கம் அந்த மிருகங்களை வேட்டையாடிக் கொன்று வந்தது. சிங்கத்தை எதிர்க்க அஞ்சிய பிற மிருகங்கள் பயந்து வாழ்க்கை நடத்தின.

ஒருநாள் மான் ஒன்றை வேட்டையாடச் சென்ற சிங்கம் அடர்ந்த முள்புதர் ஒன்றில் சிக்கிக் கொண்டு விட்டது. அதன் உடல் எல்லாம் முள் கிழித்த காயம். காலில் பெரிய முள் ஒன்று குத்திவிட்டதால் அதனால் நடக்க முடியவில்லை. முள்ளைக் காலிலிருந்து எடுக்க இயலவில்லை. அதனால் வேதனையில் பெருங் குரலெடுத்து கர்ஜித்தது. தன் காலில் உள்ள முள்ளை எடுத்து விடுமாறு பிற மிருகங்களை வேண்டிக் கொண்டது.

ஆனால், எங்கே சிங்கம் தன்னைக் கொன்று தின்றுவிடுமோ என்று அஞ்சிய பிற மிருகங்கள் அதன் உதவிக்குச் செல்லவில்லை. அதனால் வேதனையாலும் பசியாலும் வாடிக் களைத்த சிங்கம் பெருங்குரலில் கர்ஜித்துக் கொண்டே இருந்தது.

அப்போது அந்த வழியாகக் குரங்கு ஒன்று வந்தது. அது காட்டிலுள்ள தனது நண்பனைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து வந்து கொண்டிருந்தது. சிங்கம் வேதனையில் தவிப்பதைப் பார்த்த அது மிகவும் மனம் இரங்கியது. சிங்கமும் குரங்கிடம் தன் காலில் உள்ள முள்ளை எடுத்து விடுமாறு கேட்டுக்கொண்டது.

உடனே குரங்கு சில மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்தது. சிங்கத்தின் காலில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு, மூலிகையின் சாற்றை அந்தக் காயத்தில் பிழிந்தது. சில நிமிடங்களில் சிங்கம் காலை ஊன்றி எழுந்து நின்றது. உடனே குரங்கின் கழுத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அது, "எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. நான் உன்னைச் சாப்பிடப் போகிறேன்" என்றது.

சிங்கத்தின் நம்பிக்கைத் துரோகம் குரங்குக்குப் புரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "நீங்கள் தாரளமாக என்னைச் சாப்பிடலாம். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயம். இந்தக் காட்டுக்கு வரும் வழியில் நான் மற்றொரு சிங்கத்தைச் சந்தித்தேன். அதுவும் என்னைப் பிடித்துக் கொண்டு சாப்பிடப் போவதாகச் சொல்லி மிரட்டியது. ‘நான் என் நண்பனைப் பார்த்துவிட்டுத் திரும்ப வருகிறேன். அப்போது சாப்பிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அதுவும் காத்திருப்பதாகச் சொல்லி என்னை விட்டுவிட்டது. இப்போது நீங்கள் என்னைச் சாப்பிட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது?" என்றது.

அதைக் கேட்ட சிங்கத்திற்கு அளவற்ற கோபம் வந்துவிட்டது. "என்ன, இந்தக் காட்டில் எனக்குப் போட்டியாக இன்னொரு சிங்கமா? இருக்கவே கூடாது. முதலில் அதைக் காட்டு. அதனைக் கொன்றுவிட்டுப் பின்னர் உன்னைத் தின்கிறேன்" என்றது.

குரங்கும் அந்தச் சிங்கத்தைக் காட்டுவதாகச் சொல்லிக் காட்டின் வெளியில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. "இந்தப் பெரிய குகைக்குள்தான் அந்த சிங்கம் இருக்கிறது" என்றது குரங்கு. "அப்படியா?" என்று ஆத்திரத்துடன் எட்டிப் பார்த்தது சிங்கம்.

அப்போது பகல் நேரம் என்பதால் சூரியன் உச்சியில் ஒளி வீசிக் கொண்டிருந்தான். அதன் வெளிச்சம் கிணற்று நீரில் பட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அதில் எட்டிப் பார்த்த சிங்கத்தின் முகமும் தெரிந்தது. "மற்றொரு சிங்கம் தெரிகிறதா?" என்றது குரங்கு.

"ஆம். தெரிகிறது. அதை என்ன செய்கிறேன் பார்" என்று கர்ஜித்தது சிங்கம். கூடவே கிணற்றுச் சிங்கமும் கர்ஜித்தது!

உடனே குரங்கு, "பாருங்கள் உங்களை எதிர்த்து அதுவும் கர்ஜிக்கிறது. நீங்கள் இப்படியே சும்மா விட்டால் உங்கள்மீது பாய்ந்து கொன்றுவிடும்" என்றது.

"என்னை அது கொல்லுமுன் நான் அதைக் கொன்று விடுவேன்" என்று சொல்லிக்கொண்டே சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது. பாறையில் மோதி இறந்து போனது.

"அப்பாடா! இனி எல்லா மிருகங்களும் இந்தக் காட்டில் நிம்மதியாக வாழும்" சொல்லிக்கொண்டே தன் நண்பனைப் பார்க்க காட்டுக்குள் சென்றது குரங்கு.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com