உப்பும் நீரும்
உடலில் உப்புச் சத்து குறைதல் Hyponatremia எனப்படும். நமது உடலில் இருக்கும் உப்பு அதாவது சோடியம் சரியான அளவில் இருப்பது மிகவும் அவசியம். இது 135 முதல் 145 வரை இருக்கலாம். இதன் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.

உப்பின் அளவு எப்போது குறையும்?
இது குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும். பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது பரிசோதனையில் கண்டறியப்படும். ஆனால் சில வேளைகளில் வீட்டில் இருக்கும்போதும் ஏற்படலாம்.

காரணங்கள்
* மருந்துகள்-குறிப்பாக (thizides) உயர் ரத்த அழுத்த மருந்துகள், மன உளைச்சல் மருந்துகள், வலி நிவாரண மருந்துகள்
* நிமோனியா அல்லது நுரையீரல் நோய்க் கிருமிகள் தாக்கம்
* வாந்தி அல்லது பேதி அதிகம் ஏற்படுவது
* சிறுநீரகக் குறைபாடு (Kidney Failure)
* இருதய நோய் (Heart failure)
* கல்லீரல் பாதிக்கப்படுவதால் (Liver failure)
* மிக அதிகம் தண்ணீர் குடிப்பதால் (பெரும்பாலும் உடற்பயிற்சி அதிகம் செய்பவர்களுக்கு ஏற்படலாம்)
* தைராய்டு நோய் உள்ளவர்கள்
* உடலின் தண்ணீர் மற்றும் உப்பின் அளவை மாற்றும் நாளமில்லாச் சுரப்பியில் கோளாறு ஏற்படுவதால்

அறிகுறிகள்
* தலைவலி
* குமட்டல்
* உடல் சோர்வு அல்லது களைப்பு
* மூளை குழம்புதல் (இது குடும்பத்தினரே கண்டுபிடிப்பர்)
* மயக்க நிலை

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் உடனடி ரத்த பரிசோதனை அவசியம். சிலருக்கு மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் செய்ய வேண்டியது வரலாம். பலருக்கு மருந்துகள் மாற்றம், தண்ணீர் அளவு மாற்றம் போதுமானவை. இது உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலும் நேரலாம். ஆகையால் அதற்கேற்ப மருத்துவர் தண்ணீர் மற்றும் உப்பின் அளவை எடுத்துச் சொல்வார்கள். தட்பவெப்ப நிலைபோல் இது ஒருவருக்கொருவர் மாறுபடுவதால் ஆலோசனையும் அறிவுரையும் வேறுபடும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்பத் தண்ணீரின் அளவும் உப்பின் அளவும் வேறுபடும்.

எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்?
சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பு போதும். நமது சராசரி உணவில் 3.5 கிராம் உப்பு உள்ளது. இது உண்ணும் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களில் இயற்கையாகவே கிடைக்கிறது. அதனால் மேலும் உணவில் உப்பு சேர்ப்பது அவசியமில்லை. ஆனால் உப்பில்லாப் பண்டம் குப்பையில் என்று நாம் சுவைக்காக உப்புச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இருதய நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைத்து உண்பது மிகவும் அவசியம்.

அமெரிக்கப் பொருட்களில் குறிப்பாக சீஸ், பதப்படுத்திய (canned) உணவுகள் ஆகியவற்றிலும், இந்திய உணவுகளில் ஊறுகாயிலும், சீன உணவுகளில் சோயா சாஸிலும் மிக அதிகமான உப்பு உள்ளது. இவற்றைத் தவிர்த்தல் மிகவும் அவசியம்.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இது மிகச் சுலபமான கேள்வி. விடைதான் மிகவும் கடினமானது. ஒரு நாளைக்கு எட்டுக் கோப்பை தண்ணீர் அருந்த வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால் இதற்குச் சரியான அறிவியல் சான்று இல்லை. அவரவர் உடல்நிலை, தட்பவெப்ப நிலை, உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், மருந்து மாத்திரைகள் இவற்றுக்கு ஏற்பத் தண்ணீரின் அளவு மாறுபடும்.

பொதுவாக ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 3.1 லிட்டரும் பெண்களுக்கு 2.8 லிட்டரும் தண்ணீர் தேவை என்று சொல்லலாம். நமது உணவுகளில் சில தர்பூசணி, தக்காளி போன்றவை அதிகத் தண்ணீர் உடையவை. இதைத் தவிர காபி, தேநீர், பழச்சாறு முதலியவையும் தண்ணீரின் அளவை மாற்றும். உடற்பயிற்சி செய்பவர்கள் அதற்கேற்ப அதிகத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் இவர்கள் உப்புக் கலந்த தண்ணீர் குடிப்பது (Gatorade) உசிதம். வியர்வையில் உப்பு விரயமாகும். மாரத்தான் ஓடுபவர்கள் வெறும் தண்ணீர் அதிகம் குடித்து உப்புத் தண்ணீர் குறைவாக குடித்தால் உப்பின் அளவு மிக வேகமாகக் குறைந்து உயிருக்கு அபாயம் விளையலாம். தத்தம் உடலின் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வாந்தி பேதி ஏற்பட்டாலோ, சிறுநீரக வாயிலில் நுண்ணுயிர்க் கிருமி தாக்கம் அல்லது வைரஸ் நோய் ஏற்பட்டால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் அதிகம் தண்ணீர் தேவை.

உப்பும் நீரும் எண்ணும் எழுத்தும் போல இரு கண்களைப் போன்றவை என்றால் மிகையில்லை. மேலும் விவரங்களுக்குப் பார்க்க: mayoclinic.com

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com