டி.பி.ராஜலட்சுமி
தென்னிந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி, முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர் என்று பல்வேறு பெருமைகளை உடையவர் திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலட்சுமி என்னும் டி.பி. ராஜலட்சுமி. இவர் அக்டோபர் 28, 1911 (ஐப்பசி 11) அன்று திருவையாற்றில் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கும், மீனாட்சி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். அவ்வூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வியைத் தொடங்கினார். அக்கால வழக்கப்படி படித்துக் கொண்டிருக்கும்போதே ஏழாம் வயதில் சுந்தரம் என்பவருடன் திருமணம் நடந்தது. கணவன் வீட்டில் வரதட்சணைக் கொடுமையால் மிகவும் துன்பப்பட்டார். இந்நிலையில் தந்தையார் திடீரெனக் காலமாகவே, குடும்பம் தத்தளித்தது. குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டுத் தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பினார். அதனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணம் முறிந்தது.

இளம்வயதிலேயே ராஜலட்சுமிக்கு நல்ல நினைவாற்றல். பார்த்த நாடகங்களையும் அதன் காட்சிகளையும் அப்படியே நடித்துக் காண்பிப்பதும், பாடல்களை இம்மி பிசகாமல் பாடுவதும் அவரது தனித்திறமைகள். அற்புதமான குரல் வளமும் உண்டு என்பதால் நாடகத்துறையில் வாய்ப்புத் தேடினார் தாயார். நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த காலம் அது. திருச்சியில் சி.எஸ்.சாமண்ணா அய்யர் என்பவரின் நாடகக் குழு மிகப் பிரபலமாக இருந்தது. அங்குச் சென்று மகளுக்கு வாய்ப்புக் கேட்டார் தாய் மீனாட்சி அம்மாள். அங்கே நாடக ஆசிரியராக தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியைப் பாடவும், நடிக்கவும் சொல்லிக் கேட்டார். தான் பார்த்த பவளக்கொடி, அல்லி அரசாணி மாலை போன்ற நாடகங்களிலிருந்து ராஜலட்சுமி பாடி, நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பாற்றலைக் கண்ட சுவாமிகள், ராஜலட்சுமியை உடனடியாக நாடகக் குழுவில் சேர்க்கச் சிபாரிசு செய்தார். மாதம் 50 ரூபாய் சம்பளத்தில் நாடகக்குழுவில் சேர்ந்தார் ராஜலட்சுமி. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களே கிடைத்தன. படிப்படியாக தோழி, கதாநாயகி என நடிக்க ஆரம்பித்தார். அவரது அழகிலும், அற்புதமான குரல்வளத்திலும், நல்ல நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசிக்கத் தொடங்கினர். நாளடைவில் மொய்தீன் பாய் கம்பெனி, பெண்களையே நடிக்கச் சேர்த்துக் கொள்ளாத கன்னையா கம்பெனி போன்றவற்றின் நாடகங்களிலும் ராஜலட்சுமி நாயகி பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். நாளடைவில் தனிப்பட்ட நாடகக் குழுக்களிலிருந்து விலகி, எஸ்.ஜி.கிட்டப்பா, வி.ஏ.செல்லப்பா போன்றோர் நடித்த ஸ்பெஷல் நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மௌனத் திரைப்படங்கள் வெளியாகத் துவங்கிய காலகட்டம் அது. ராஜலட்சுமிக்கு இருந்த வரவேற்பைக் கண்ட ஏ. நாராயண அய்யர் என்பவர் தான் தயாரித்த 'கோவலன்' என்ற படத்தில் அவரை மாதவியாக நடிக்க அழைத்தார். அதுதான் ராஜலட்சுமியின் முதல் படம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர் 'உஷா சுந்தரி' என்ற மௌனப் படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 1931ல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான முதல் பேசும்படமான 'காளிதாஸ்' படத்தில் ராஜலட்சுமிதான் கதாநாயகி. அதன் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். 1933ல் வெளியான 'வள்ளி திருமணம்' இவருக்கு மேலும் புகழைத் தந்தது. 'சினிமா ராணி' என்ற பட்டமும் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களிலும் நாடகங்களிலும் நடித்தார். உடன் நடித்த நடிகர் டி.வி.சுந்தரத்தைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

ராஜலட்சுமிக்கு தேசபக்தி அதிகம். நாடக, திரைப்படப் பாடல்களில் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார். வள்ளி திருமணம் நாடகம் மற்றும் திரைப்படத்தில் இவர் பாடிய,

"வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா
விரட்டியடித்தாலும் வாரீகளோ"

என்ற பாடலும்,

"ஒரு மாசில்லா இந்து சுதேச வளையல்
வச்சிரம் பதித்த உச்சித வளையல்"

என்ற பாடலும் அன்று பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பாடல்களைப் பாடியதால் பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் சளைக்காமல் தன் தேசப் பணியைத் தொடர்ந்தார் ராஜலட்சுமி.

நாடகம், சினிமா என இரண்டிலுமே வெற்றிகரமாகக் கோலோச்சியதால் திரைப்பட நுணுக்கங்கள் இவருக்குக் கைவந்தன. தாமே சொந்தமாகப் படமெடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அப்படி உருவானதுதான் 'ராஜம் டாக்கீஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனம். தென்னிந்தியாவின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார் டி.பி.ராஜலட்சுமி.

எழுத்திலும் இவர் வல்லவராக இருந்தார். குறிப்பாக அக்காலத்தில் பெண்களின் உணர்வுகள் ஒடுக்கப்படுவது குறித்தும், அவர்கள் கல்வி இல்லாமல் மூலையில் முடக்கப்படுவது குறித்தும் மனம் கொதித்தார். பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி 'கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்' என்ற நாவலை எழுதினார். கமலவல்லி, கண்ணப்பன் என்பவனைக் காதலிக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் டாக்டர் சந்திரசேகரனுடம் திருமணம் நிகழ்கிறது. சந்திரசேகரனுக்குக் கமலவல்லியின் காதல் பற்றித் தெரிய வருகிறது. உடனே அந்தக் காதலனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுக்கே அவளை மீண்டும் ஊர், உலகறியத் திருமணம் செய்து வைக்கிறார். இதுதான் நாவலின் கதை. விருப்பமின்றி வேறு ஒருவருடன் திருமணம் நிகழ்ந்தாலும் அவருடன் சேர்ந்து வாழாது பண்பாடு, கலாசாரம் போன்ற மரபு மாயைகளை மீறி ஒரு பெண் தன் காதலனையே மீண்டும் திருமணம் செய்து கொள்வதாக அவர் எழுதியது அவரது புரட்சி மனப்பான்மையைக் காட்டுகிறது. தமிழில் அது போன்றதொரு நாவல் அதுகாறும் வந்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாவலில், "மாசற்ற ஸ்திரீ ரத்தினங்களை ஆண்களோடு சமமாய்ப் பாவித்து, அவர்களைக் கேவலம் அடிமையென்று கருதாமல் பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாராளமாய் அனுபவித்து இன்பவாழ்வு வாழ அவர்களைத் தாராளமாய் விட்டுவிடுவதே இப்போது ஆணுலகத்தைச் சார்ந்த பெருத்த கடமையாகும்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்கார வைக்கப்பட்டால் அப்போதுதான் ஆணுலகம் அறிவு பெறும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1931ல் வெளியான இதுபோன்ற பல புரட்சிக் கருத்துக்களைக் கொண்ட இந்நாவல் அக்காலத்தில் பெரும் சர்ச்சையையும், ராஜலட்சுமிக்கு பலத்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் ராஜலட்சுமி அஞ்சவில்லை. இதைத் திரைப்படமாகவும் தயாரித்தார். தானே 'கமலவல்லி' பாத்திரத்தில் நடித்து படத்தை இயக்கவும் செய்தார். 1936ல் 'மிஸ் கமலா' என்ற பெயரில் வெளியான இப்படம் வழக்கம்போல் எதிர்ப்பைச் சந்தித்தது. படத்தின் புரட்சிகரமான முடிவைக் கண்டு பலர் கொதித்தனர். திரையரங்குகள் முன் கலவரத்திலும் ஈடுபட்டனர். (தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இதுபோன்ற புரட்சிக் கருத்தைக் கொண்ட ஒரே படம் அதுதான். இன்றுவரை இம்மாதிரி புரட்சிகரமான முடிவைக் கொண்ட படம் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) ஆனால் ராஜலட்சுமி அந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. வழக்கம்போல் சினிமா, நாடகம், எழுத்து என்று தனது பணிகளைத் தொடர்ந்தார். ஒருபுறம் மூவலூர் ராமாமிர்தம்மாள், வை.மு.கோதைநாயகி போன்றோர் சமூக விடுதலை, தேச விடுதலை குறித்துத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்க, பெண் விடுதலைமீது அக்கறை கொண்டு காத்திரமான பல படைப்புகளைத் தந்தார் ராஜலட்சுமி. கமலவல்லியைத் தொடர்ந்து இவர் எழுதிய 'விமலா', 'மல்லிகா', 'சுந்தரி', 'வாஸந்திகா', 'உறையின் வாள்' போன்ற நாவல்கள் அனைத்துமே தேச விடுதலை, பெண் விடுதலை, சமூக விடுதலை ஆகியன குறித்துப் பேசுவன ஆகும்.

1931 தொடங்கி 1943வரை மொத்தம் அவர் 14 படங்களில் நடித்திருக்கிறார். சாவித்ரி, திரௌபதி வஸ்திராபகரணம், குலேபகாவலி, ஹரிச்சந்திரா, நந்தகுமார், மதுரை வீரன், ஜீவஜோதி, இதயகீதம் போன்ற இவரது படங்கள் குறிப்பிடத்தக்கன. சிலவற்றில் நாடகங்களில் இவரோடு நடித்த வி.ஏ.செல்லப்பா உடன் நடித்திருந்தார். 1961ல் இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. படத்தயாரிப்பில் ராஜலட்சுமி ஈடுப்பட்டதால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. குடும்பம் வறுமைக்குட்பட்டது. தனது ஓய்வுக் காலத்தை சென்னையில் கழித்த ராஜலட்சுமி, 1964ல் தனது 53ம் வயதில் காலமானார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய டி.பி. ராஜலட்சுமி திரைத்துறை மட்டுமல்லாது நாடகம் மற்றும் எழுத்துத் துறையிலும் சாதித்த முன்னோடிப் பெண்ணாக மதிப்பிடப்பட வேண்டியவர்.

(தகவல் உதவி: ப. பத்மினி பதிப்பித்த 'கமலவல்லி'; முக்தா சீனிவாசன் எழுதிய 'இணையற்ற சாதனையாளர்கள்' மூன்றாம் பாகம்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com