தனிமையும் பயமும் தோழிகளாக....
அன்புள்ள சிநேகிதியே

ஊர் உறவுகள் என்னை விட்டுப் பிரிய தனிமையும் சோகமும் எதிர்காலத்தைப் பற்றிய பயமும்தான் எஞ்சி இருக்கிறது. நான் ஒரே பெண். அப்பா, அம்மாவுக்குப் பல வருடம் கழித்து, எவ்வளவோ வேண்டுதல்களுக்குப் பின் பிறந்தவள். ஆனால் அவர்களுடன் அதிகம் வாழும் கொடுப்பினை இல்லை. வயதின் காரணமாக ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். நல்ல உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றேன். மருத்துவக் காரணங்களால் திருமணம் செய்து கொள்ளவில்லை. நண்பர்கள், உறவினர் என்று வாழ்க்கையைத் தனிமையில்லாமல் இத்தனை காலம் கழித்துவிட்டேன். வயது 71 ஆகிறது. அமெரிக்காவுக்கு வருவது இதுதான் முதல்முறை. இன்னும் ஒரு மாதத்தில் திரும்பி விடுவேன். இங்கே என்னுடைய தோழியின் டீன் ஏஜ் குழந்தைகளுடன் நன்றாகப் பொழுது போய்விட்டது. நான் பேராசிரியையாக இருந்தவள் என்பதால் அவர்களுடன் தர்க்க ரீதியாகப் பேசிக் கொண்டிருப்பேன். அவர்களின் கேள்விகள் எல்லாவற்றிற்கும் லாஜிகல் ஆக பதில்களைச் சொல்லி வந்ததால் என் கம்பெனி அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. "Aunty, you are different!" என்று சொல்வார்கள். அதைத் தவிர்த்து மற்ற உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அவரவர் இருக்குமிடத்துக்குச் சென்று நன்றாக ஊர் சுற்றினேன். மகிழ்ச்சியாக இருந்தது.

போன மாதத்தில் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி -- என்னைவிடச் சின்னவள், மிக மிக அந்தரங்கமான தோழி, ரொம்ப அருமையாகச் சமைப்பாள் -- அவள் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது தெரிந்தவுடன் உடனே விவாகரத்து செய்தவள். 'அவனே வேண்டாம் என்று ஆன பிறகு அவன் பணம் எதற்கு' என்று ஒரு பைசாகூடப் பெற்றுக் கொள்ளாமல் தன் சுய சம்பாத்தியத்தில் பெரிய அபார்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு கௌரவமாக இருந்தாள். எனக்கு ஒரு சர்ஜரி செய்ய வேண்டும் என்ற மெடிகல் அட்வைஸ் பற்றி அவளிடம் பயத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, "நான் இருக்கிறேன் அக்கா. கவலைப்பட வேண்டாம்" என்று தைரியம் சொன்னவள். அவள் போன மாதம் திடீரென்று போய்விட்டாள். அதிலிருந்து எனக்கு மனச்சோர்வு (depression) வந்துவிட்டது. இங்கே இருப்புக் கொள்ளவில்லை. எதிலுமே மனம் செல்லவில்லை. எல்லோரும் என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுத் தங்கள் இடத்திற்குப் போய்விட்டார்கள். தனிமை... தனிமை... தனிமை... ஒரு பயம், இதுதான் இப்போது தோழிகள் எனக்கு. "உன்னைப்போல் நிறையப் பேர் இருக்கிறார்கள்" என்று நீங்கள் சொல்லப்போவது எனக்குப் புரிகிறது. ஆனால் அதைத் தவிர்க்க ஒரு ட்யூப்ளே அபார்ட்மென்ட்டில் இருக்கிறேன். மேலே இரண்டு குடும்பங்கள் உள்ளன. கீழே இரண்டு. அதில் இரண்டு குடும்பங்கள் அமெரிக்காவிற்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். தரைத்தளம் கடைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நான் ஒரே ஒருத்திதான் அங்கே. இந்தியா திரும்பினால் நடு இரவில் ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்குப் போகவே பயமாக இருக்கிறது. காலை என்றால் டிரைவர், வேலைக்காரி, சமையல்காரி என்று எல்லாம் வந்து விடுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் ஆறுமாத காலமாக நான் ஊரில் இல்லை என்பதால் யார், யார் எவ்வளவு விசுவாசமாக இருப்பார்கள் என்பது தெரியாது. இப்போது எதை நினைத்தாலும் திகிலாக இருக்கிறது. நான் இவ்வளவு படித்தும் இப்படி நினைப்பதற்கெல்லாம் திகில் அடைகிறேனே என்று மனதிற்குள் வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு
...............

அன்புள்ள சிநேகிதியே

படிப்புக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நம் படிப்பும் அனுபவமும் ஒருவகையில் உதவி செய்யக்கூடும். 'தனிமை' இடத்தைப் பொறுத்தது. 'வெறுமை' உள்ளத்தைப் பொறுத்தது. சிலருக்குத் தனியாக ஓரிடத்தில் இருந்து தங்கள் சோக நிகழ்ச்சிகளை அசை போடுவது பிடிக்கக்கூடும். சிலர் அதைத் தவிர்க்க வெளியே சென்று மற்றவர்களுடன் பார்த்து, பேசி, பழகி அந்த வேதனையைக் கட்டுப்படுத்துவார்கள். சிலர் நாய், பூனை என்று வளர்ப்பார்கள். சிலர் பாப்கார்ன் (இல்லை முறுக்கு) டி.வி.யில் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இயற்கை அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் வலிக்கும், வேதனைக்கும் ஏதோ ஒரு வழி செய்துவிடுகிறது. 'தாங்க முடியவில்லையே' என்று அலறிக் கொண்டே நாம் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். Everyone develops their own coping mechanism.

உங்கள் தனிமை உணர்ச்சி தற்காலிகமானது. உங்கள் அந்தரங்கத் தோழியை திடீரென இயற்கை பறித்துக் கொண்டதால் ஏற்படும் தவிப்பு. தனிமை ஒரு வாழ்க்கையாகவே உங்கள் ஆரம்பமுதலே இருந்திருக்கிறது. வயதின் காரணமாக நாம் எல்லோருமே மனம் தளர்ந்து போவது உண்மை. உங்களைப் பற்றிய என்னுடைய கணிப்பு: நீங்கள் ஒரு மக்கள் விரும்பி. எப்போது மக்களை விரும்புகிறோமே அப்போதே சேவை மனப்பான்மை உள்நின்று இருக்கும். எத்தனையோ பேருக்கு உங்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் உதவி செய்திருப்பீர்கள், இதுவரை. அவர்களில் யாரேனும் துணை நிற்பார்கள்.

நீங்கள் இருக்குமிடத்தில் உங்கள் பாதுகாப்பு பற்றிய பயம் நாளுக்கு நாள் அதிகரித்தால் நீங்களே முடிவெடுத்து விடுவீர்கள் பெரிய காம்பெளெக்ஸிற்கு வீட்டை மாற்ற.

நீங்கள் ஆன்மீக நாட்டமுடையவரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், ஆன்மீகத்தின் மறுபக்கம்தான் சேவை. நீங்கள் அதற்கான சேவை நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்குத் தேவைப்படும் அறுவை சிகிச்சை பற்றி எழுதியிருந்தீர்கள். அந்தந்த நேரத்தில் உதவி வந்து சேர்ந்துவிடும். போட்டி, பொறாமை என்று நம் இனத்தை நாமே குறை சொன்னாலும் 'இயலாமை' என்ற நிலையில் ஒரு உந்துசக்தி மக்களை நம் உதவிக்குக் கொண்டுவந்து நிறுத்தும்.

"Past is history. Future is mystery. Live the present moment" என்ற அறிவுரை பல முனைகளிலிருந்தும் வரும். இருந்தாலும் எதிர்காலம் என்றால் முடங்கி, மடங்கிய உடம்பைத்தான் நாம் இனம் கண்டுகொண்டு, யார் உதவிக்கு வரப்போகிறார்களோ என்று அரண்டு போய் விடுகிறோம். மனம் இளமையாக இருக்கும். உடம்பு ஒத்துழைக்காது. சீனியர் சிட்டிசன்ஸ் ஹோம் என்று யாராவது சொன்னால், 'அது நமக்கில்லை. சீனியர் சிட்டிசன்ஸுக்கு...' என்றுதான் நம் மனம் நினைக்கும். இதற்கு ஒரே வழி அந்தந்த நாளை அனுபவித்துவிட வேண்டும்.

ஒரு முதிய பெண்மணி தனக்கு ஒரு அபார்ட்மென்ட் வாங்க ஒரு ரியால்டரைக் கூப்பிட்டிருக்கிறாள். அவர் ஒரு ஏழெட்டு இடங்களைக் காட்டி, அதிலும் குறிப்பாக ஒரு இடத்தைக் காட்டி, "இதோ பாருங்கள். என்னுடைய 25 வருட அனுபவத்தில் சொல்கிறேன். இது ஒரு பொக்கிஷம். இன்னும் பத்து வருடத்தில் இதன் விலை மூன்று மடங்காக உயரும். அப்போது என்னை நினைத்துக் கொள்வீர்கள்" என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, "என் அருமை மகனே! எனக்கு வேண்டியது என் சௌகரியத்திற்கு ஏற்ற ஒரு நல்ல இருப்பிடம். அது பத்து வருடங்களில் என்ன ஆகப்போகிறது என்று கணிக்கப் போகிறதில்லை. நான் சாப்பிட வாழைப்பழம் கூடப் பச்சையாக வாங்குவதில்லை" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். இங்கே எல்லோருக்குமே ஒரு 'Raw banana stage' இருக்கிறது. சிலருக்கு இப்போதே இருக்கிறது. சிலருக்கு பின்னால் வந்துவிடும். நான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன் - Age is an attitude of mind என்று. இந்த 'Raw banana' உணர்ச்சி வரும்போது நாம் வயதை உணர்கிறோம். ஆனால் வாழ்க்கையை ரசிக்கிறோம். உங்கள் திகில், பயம் எல்லாம் சீக்கிரம் மறைந்து விடும், நம்புங்கள்.

வாழ்த்துக்கள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com