சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையில்லை, ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தாலே போதும் என்ற உண்மையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் விசாலினி குமாரசாமி. திருநெல்வேலியைச் சேர்ந்த கல்யாண குமாரசாமி, சேது ராகமாலிகா தம்பதியினரின் மகள் விசாலினி. இவர் பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறந்தார். பிற குழந்தைகளைப் போல் இவரால் சரியாகப் பேச முடியாதிருந்தது. மருத்துவரின் ஆலோசனை மற்றும் பெற்றோரின் அக்கறை மிக்க கவனிப்பால் மெல்ல மெல்லப் பேச்சு வந்தது. பேச்சுப் பயிற்சியோடு நினைவாற்றலை வளர்க்கும் பயிற்சியையும் பெற்றோர் சொல்லித் தந்தனர். படிப்படியாக அந்தத் திறன் வளர, நான்கு வயதில் தமிழ், சம்ஸ்கிருதப் பாடல்கள் பலவற்றை அடிபிறழாமல் ஒப்பிக்கும் அளவுக்குத் தேர்ச்சியடைந்தார். ஒரு தடவை ஒன்றைக் கேட்டாலே அதை திரும்பக் கூறும் 'ஏக ஸந்த க்ராஹி’ ஆகத் தன்னை வளர்த்துக்கொண்டார்.
சராசரி மனிதர்களின் அறிவுக் குறியீட்டெண் (IQ) 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அவர்கள் அறிவுத்திறன் மிக அதிகம் கொண்டவராக மதிப்பிடப்படுவர். விசாலியின் ஐ.க்யூ. 225. இது கின்னஸ் உலக சாதனையாளரான கிம் யுங் யாங்கின் (Kim Ung-Yong) IQ அளவான 210ஐ விட அதிகம். ஆனால் பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக முடியும் என்பதால் சாதித்த பின்பும் கின்னஸ் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறார் விசாலினி.
விசாலினி செய்திருக்கும் மற்றுமொரு முக்கிய சாதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் MCP (Microsoft Certified Professional) தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும், சிஸ்கோவின் CCNA (Cisco Certified Network Associate) 894 புள்ளிகள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பதும்தான். இது எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கே மிகக் கடினமான ஒரு தேர்வு. பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் செய்ததுதான் சிஸ்கோவைப் பொருத்தவரை இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால் விசாலினி பத்து வயதிலேயே அந்தச் சாதனையை முறியடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் CCNA Security மற்றும் OCJP (Oracle Certified Java Professional) ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். தற்போது MCTS (Microsoft Certified Technology Specialist), MCPD (Microsoft Certified Professional Developer), CCNP (Cisco Certified Network Professional) ஆகியவற்றில் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
The Highest IQ in the world மற்றும் The Youngest CCNA World Record Holder என்று இரு உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விசாலினிக்கு வயது 11தான். 6ம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில், இரண்டு முறை டபுள் ப்ரமோஷன் பெற்று எட்டாம் வகுப்பில் இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் விசாலினியை அழைத்துப் பாராட்டி கௌரவப்படுத்தி வருகின்றன. பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பற்றி உரை நிகழ்த்துகிறார். சமீபத்தில் மங்களூரின் NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் விசாலி.
இவ்வளவு சாதனைகள் புரிந்திருக்கும் விசாலினி சாதாரண மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை எலக்ட்ரீசியன். வானொலியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விசாலினியின் தாய் சேது ராகமாலிகா, விசாலினியை கவனித்துக் கொள்வதற்காகவே வேலையை ராஜினாமா செய்து விட்டு உடனிருந்து ஊக்குவித்து வருகிறார். டாக்டருக்குப் படிப்பதுதான் தமது நோக்கம் எனக் கூறும் விசாலினிக்கு செஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, கார்ட்டூன் பார்ப்பது மிகப் பிடித்தமான பொழுதுபோக்குகள். இவரது வலையகம்: visalini.com
"ஒரு பாகிஸ்தானிய சிறுவன் 12 வயதில் CCNA பெற்றதை அந்த நாடு போற்றி, தனது ராணுவ வலையகத்தில் 'Pride of Pakistan' என்று அவனைப்பற்றிப் புகழ்ந்தது. 10 வயதிலேயே அந்த சாதனையை முறியடித்த விசாலினி எப்போது 'Pride of India' என அங்கீகரிக்கப்படுவார்?” என்பது இவரது பெற்றோரின் கேள்வி. அதற்கான விடை இந்திய அரசின் கையில் உள்ளது.
அரவிந்த் |