உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் மலேசியா-சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்புகளைத் தந்தவண்ணம் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கமலாதேவி அரவிந்தன். மலேசியாவில் பிறந்து வளர்ந்த கமலாதேவியின் தாய்மொழி மலையாளம். பெற்றோர் கேரளத்திலிருந்து மலேசியாவுக்குக் குடிபுகுந்ததால் மலையாளம் மட்டுமே பேசி வளர்ந்தார். பள்ளியில் படிக்கும்போது அறிமுகமான 'பாரதியார் கவிதைகள்' இவருக்குள் தமிழ் இலக்கிய ஆர்வத்தை மூட்டியது. அதன் கவிதை சுகத்தில் மயங்கிச் சிறுசிறு கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். மலேசியாவின் புகழ்பெற்ற 'தமிழ்நேசன்' இதழின் சிறுவர் பகுதிக்கு எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின. அதன் ஆசிரியர் முருகு சுப்ரமணியனின் ஊக்குவிப்பில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். அப்போது கமலாதேவிக்கு வயது 15. பத்திரிகை எழுத்துக்களோடு சுற்றுவட்டாரங்களில் நடந்த கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள், பாராட்டுக்கள், கோப்பைகளை வென்றார்.
ஒரு கட்டுரைப் போட்டியில் மாகாணத்திலேயே முதல் பரிசு வென்றதால் "தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி கமலாதேவி" எனத் தமிழவேள் கோ.சாரங்கபாணி பாராட்டியதுடன், தனக்குப்போட இருந்த மாலையை கமலாதேவியின் கழுத்தில் அணிவித்துப் பாராட்டி வாழ்த்தினார். தமிழ்நேசன் ஆசிரியர் முருகு சுப்ரமணியன் "கேரளம் தந்த கொடை இச்சிறுமி" எனப் பாராட்டி எழுதினார். 'தமிழ்மலர்' ஆசிரியர் செல்வகணபதி, தமிழ்முரசின் வை.திருநாவுக்கரசு போன்றோர் கமலாதேவியைத் தொடர்ந்து எழுதத் தூண்டினர். வீட்டில் தமிழில் எழுத ஆதரவில்லாச் சூழ்நிலை இருந்தபோதிலும் இவரை எழுத வைத்தவை இத்தகைய ஊக்குவிப்புகளே. முதல் சிறுகதை 'விலாசினி' தமிழ்நேசன் இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து 'தமிழ்மலர்', 'தமிழ்முரசு' போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. மலேசிய வானொலியின் 'வனிதையர் சோலை' பகுதியிலும் இவரது குறுநாடகங்கள் வெளியாகின.
கமலாதேவிக்கு 17 வயதில் திருமணம் ஆகிக் கணவருடன் சிங்கப்பூருக்குக் குடிபுகுந்தார். அதுமுதல் சிங்கப்பூரையே தாயகமாகக் கொண்டார். இவரது சிறுகதைகளும் நாடகங்களும் தமிழ்முரசு, தமிழ்நேசன், தமிழ்மலர், வானம்பாடி, மயில், பிற இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளியாகிப் புகழைப் பெற்றுத் தந்தன. மலையாள நாடகத் துறையில் டாக்டர் மத்தாயி அவர்களிடம் பயிற்சி பெற்றபின் நவீன நாடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் கூத்துப் பட்டறை முத்துசாமி அவர்களிடமும், தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராமானுஜம், டெல்லி டாக்டர் ரவீந்திரன் போன்றோரிடமும் பயிற்சி பெற்றார். கமலாதேவியுடன் அக்காலத்தில் சக மாணவர்களாகப் பயிற்சி பெற்ற பசுபதி, கலைராணி போன்றோர் இன்று திரைப்படத்துறையில் முக்கிய பங்களிப்புக்களைத் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
"லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் ஆகியோரது எழுத்துக்களால் கிறங்கிப்போய் தமிழிலக்கியம் படைக்க வந்தவள் நான்" என்று கூறும் கமலாதேவி, "கதை வடிவத்துக்கேற்ப மொழிநடையைக் கொண்டு போவதுதான் இலக்கியம். அழகியல் பரிமாணங்களுடன், உருவகப் படிமத்தோடு எழுதுவதும் எனக்குப் பிடிக்கும். கனவாய், மழையாய் உதிப்பது இலக்கியம். அந்த யாகத்திலிருந்து எழும் ஒவ்வொரு சிருஷ்டியையும் எழுதி முடிக்கும்போது, வேள்வியிலிருந்து எழுந்த அனுபவம்தான் எனக்கு ஏற்படுகிறது. மலையாளத்தில் உள்ள பரிசோதனை முயற்சிகளைத்தான் தமிழிலும் எழுதுகிறேன்" என்கிறார். "சங்க இலக்கியங்களில் இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படைப்புகள் வரை அனைத்தையும் வாசிப்பதாலேயே பம்மாத்து இலக்கியம் எது, தரமான இலக்கியம் எது, இலக்கியக் காடேற்றிகள் யார் என்பதை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே என்னால் கணித்துவிட முடிகிறது" என்கிறார் மிகத் தெளிவாக.
"என்னை ஓர் இலக்கியவாதியாக உருவாக்கியதெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள்தாம். என் ஒவ்வொரு படைப்பையும் பிரசுரித்து அவர்கள் தந்த பூச்சொரியல்தான், என்னை எழுத வைத்தது. சிங்கப்பூர் தமிழ்முரசின் முதன்மைத் துணையாசிரியர் குணாளன் அவர்கள் என்னை, என் தமிழை மிகவும் சிலாகித்துப் போற்றுபவர். என்னுடைய நடையை மாற்றவே கூடாது. இப்படியே எழுதுங்கள் என அவர் தரும் ஊக்கம் என்றும் என் நன்றிக்குரியது" என்கிறார். தன்னுடைய படைப்புகள் பற்றி, "என்னுடைய எழுத்தில், அது சிறுகதையாகட்டும், நாடகமாகட்டும் அன்றாட வாழ்வியலில் சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, பெண்களின் பிரச்சனைகளை, அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைத்தான் அதிகமாக எழுதுகிறேன். நான் ஓர் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதில்தான் எனக்குப் பெருமை. ஆனால் ஒரு கேள்வியுண்டு. ஆண் என்ன? பெண் என்ன? எல்லோருமே படைப்பிலக்கியம் தானே எழுதுகிறோம் என்று ஆறுதல்பட்டுக் கொண்டாலும், நிச்சயமாக ஒரு பெண் வயிற்றுக்குள் குழந்தை புரளும் அனுபவத்தை எந்த ஓர் ஆண் எழுத்தாளராவது எழுத முடியுமா?" என்கிற கமலாதேவியின் கேள்வி சிந்திக்கத் தகுந்தது.
சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல்வேறு தளங்களில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக காத்திரமான பல்வேறு படைப்புகளைத் தந்து வரும் கமலாதேவி, தன் தாய்மொழி மலையாளத்திலும் தமிழிலும் ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். தமிழ்நேசன் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்று முறை முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழ் மலரில் ஏழு முறை இவரின் சிறுகதைகள் சிறப்புச் சிறுகதைகளாக வெளியாகியுள்ளன. இவரது 'ஞயம் பட உரை' சிறுகதை கேரளப் பல்கலைக்கழகத்தில் comparative story writing எனும் உத்தியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கதை. தமிழ்நாடு, கேரளப் பல்கலைக்கழகங்களில் இவரது ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் 'சிலந்தி வலை' என்னும் மலையாள முழுநீள ஆய்வு நாடகம் எழுதி இயக்கிய முதல் பெண் எழுத்தாளர் கமலாதேவிதான். வானொலி நாடகத்துறையில் மலேசிய, சிங்கை வானொலியின் பரிகளை பலமுறை வென்றிருக்கிறார். சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பான இவரது 'தொடுவானம்' நாடகம் 1978ம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் சிறந்த நாடகத்திற்கான பரிசைப் பெற்றது.
மலையாள மொழியில் சிங்கையின் சிறந்த நாடகாசிரியர், சிறந்த பெண் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என்ற விருதுகளைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடகாசிரியர் விருது, தமிழர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்பிலும் தேர்ந்த இவர், தமிழில் தேர்ந்தெடுத்த கதைகளை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் நா. கோவிந்தசாமியின் 'தேடி' குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. 'நுவல்' என்னும் சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. "Theory of modern shortstories" எனும் உத்தியின்கீழ் அதற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது நீண்ட நாள் இலக்கியச் சேவைக்காக இவருக்கு அண்மையில் 'சாஹித்ய ஸ்ரீமதி விருது' வழங்கப்பட்டுள்ளது. "விறுவிறுப்பான எழுத்து நடையால் வாசகர்களைக் கவரும் எழுத்தாளர். சிங்கப்பூரின் தமிழ் படைப்பிலக்கிய உலகில் பெயர் பதித்துள்ள முக்கியமான எழுத்தாளர்" என இவருக்குப் புகழாரம் சூட்டுகிறது சிங்கையின் தமிழ்முரசு.
நாடகத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகம் என மூன்று தளங்களிலும் இயங்கி வரும் கமலாதேவி, தன் மனம் கவர்ந்த படைப்பு மற்றும் படைப்பாளிகள் பற்றி, "லா.ச.ரா.வின் அனைத்து எழுத்துக்களும் படித்து அந்தத் தமிழில் மயங்கியிருக்கிறேன். தி.ஜா.வின் 'மோகமுள்' படித்துத் திகைத்துப் போயிருக்கிறேன். பிரபஞ்சனின் 'மீன்', கந்தர்வனின் 'சாசனம்', நா.கோவிந்தசாமியின் 'தேடி', இளங்கோவனின் 'தலாக்' எனப் பல என் மனம் கவர்ந்தவை. ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தரராமசாமி. எம்.டி.வாசுதேவன்நாயர், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, அம்பை, சிவகாமி, க.பாக்கியம் என பலர் என் மனம் கவர்ந்தவர்களாக இருந்தாலும் அன்றும் இன்றும் எனதுள்ளம் கவர்ந்த கவி பாரதிக்கீடாக யாருமே இல்லை" என்கிறார். தன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக, தமிழ்நாட்டிலிருந்து வந்த இளம்பெண்கள் பாலியலில் வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்பட்டு உழல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு, குடும்பப்பெண்கள் போகவே தயங்கும் அந்த தெருவுக்கு, தன்னுடைய வழக்கறிஞர் தோழிகளின் உதவியோடு சென்றதையும் அந்தப் பெண்களை மிகச் சிரமப்பட்டு மீட்டு அவர்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கே அனுப்பி வைத்ததையும் குறிப்பிடுகிறார். அந்த அனுபவங்களை வைத்து "சூரிய கிரஹணத்தெரு" என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பிறிதொருமுறை, மனநலம் குன்றிய பெண்களைத் தன்னுடைய நாடகத்துக்காகச் சென்று சந்தித்த அனுபவத்தால், இன்றும் மாதந்தோறும் அவர்களைச் சந்தித்து உதவி வருகிறார். அந்த அனுபவமே 'நுகத்தடி' என்னும் சிறுகதையானது. "சிங்கப்பூருக்கு இடைக்காலத்தில் வேலை நிமித்தம் பிழைப்பதற்காக வந்த சிலரால்தான் சிங்கப்பூர் இலக்கியம் வெளியுலகில் பேசப்படுகிறது என்ற அபத்தமான விமர்சனத்தை மாற்றவாவது முறையான ஆய்விலக்கியம் எழுதப்பட வேண்டும். சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய சிலரது பிழையான மதிப்பீட்டை மாற்றி முறையான ஆவணம் ஒன்றை எழுதவேண்டும் என்பதே தன் எண்ணம்" என்பவர், "இப்பொழுது குறிப்பிட்ட ஒரு முக்கியமான படைப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனைப் பூர்த்தியாக்குவது மட்டுமே இப்போதைய எனது லட்சியம்" என்று கூறுகிறார்.
கமலாதேவியின் கணவர் ஓய்வு பெற்ற பொறியியலாளர். "திருமணமாகி வந்த பிறகு, என்னுடைய அருமைக் கணவர்தான் அன்றிலிருந்து இன்றுவரை, என்னுடைய எழுத்துக்கு வளமாய், மிகப்பெரிய ஊக்கமாய், உந்துசக்தியாய் இருந்து என்னை வழிநடத்திச் செல்கிறார்" என்கிறார் கமலாதேவி நெகிழ்ச்சியுடன். மூத்த மகள் டாக்டர் அனிதா ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இரண்டாவது பெண் அரசு அலுவலில் உயர் அதிகாரி. மனநல மருத்துவமனை, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என மாதந்தோறும் பல இடங்களுக்குச் சென்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவரும் கமலாதேவிக்கு கர்நாடக சங்கீததிலும் ஆர்வம் அதிகம். நடனமும் விருப்பமானது. சிறுகதைகள், நாவல்கள், வானொலி மேடை நாடகங்கள், மேடை இயக்கம், ஆய்வுக்கட்டுரைகள் என்று பல தளங்களிலும் இன்றும் வெற்றிகரமாக இயங்கி வரும் கமலாதேவி அரவிந்தன், பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழிலக்கியத்தில் நல்ல படைப்புகளைத் தந்துவரும் ஜெயமோகன், நரசய்யா வரிசையில் வைத்து மதிப்பிடத் தகுந்தவர்.
அரவிந்த் |