மே 6, 2007 அன்று சின்சினாட்டி சிறுவர் இசைக்குழு, சின்சினாட்டி சேம்பர் கருவிக்குழு ஆகியோருடன் தி கிரேட்டர் சின்சினாட்டி இந்தியச் சிறுவர் இசைக்குழு இணைந்து வழங்கும் ‘The Sound of Seasons - A Musical Celebration of Time’ என்ற மகத்தான அரங்கிசை நிகழ்ச்சி நடைபெறும். இதில் சாந்தி இசைக்குழுவிலிருந்தும் பாடகர்கள் பங்கேற்பர்.
பிரபல இசைகலைஞரும் இசையமைப் பாளரும் குருவுமான திரு கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறார். கலசாரங்களை ஊடறுத்துச் செல்லும், புராதனமான இந்திய ராகங்களின் இசைக்குழு/தேவாலயப் பாடல் வெளிப்பாடு என்று இதனை வர்ணிக்கலாம். பருவமாற்றங்களின் தத்துவத்தை இசையோடு கதையாகச் சொல்லும் கற்பனை வடிவத்தை இந்த இசை நிகழ்ச்சி கையாளுகிறது.
‘பருவங்களுக்கு அப்பால்’ என்ற இந்தியச் சிறாருக்கான பயிலரங்கத்தின் உச்சமாக இந்நிகழ்ச்சி வருகிறது. பயிலரங்கத்தில் 65 சிறார்கள் 9 மாத காலத்தில் பருவ காலங்களுக்கான இந்திய ராகங்களை நுணுகி ஆய்ந்தனர். ‘இந்தியாவில் பிறந்த பெற்றோரின் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்குத் தமது பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்தப் பயிலரங்கம் அமைந்தது’ என்கிறார் கன்னிக்ஸ். ஓஹியோ ஆர்ட்ஸ் கவுன்ஸிலின் பகுதி நிதி உதவி இந்தப் பயிலரங்கத்தைச் சாத்தியமாக்கிற்று.
‘பருவங்களின் நாதங்கள்’ நிகழ்ச்சியின் கௌரவ இசை நடத்துனர் ரே வீலர் (faculty member at the Division of Music Education - College Conservatory of Music).
‘சாந்தி ஓர் அமைதிப் பயணம்’ என்ற பிரம்மாண்டமான, அரங்கு நிரம்பிய நிகழ்ச்சியை வழங்கிப் புகழ்பெற்ற கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் கலைக்கான விருதுகள் பலவற்றைப் பெற்றவர். பொறியியலாளரான இவர் இசையில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளார்.
அதிக விவரங்களுக்கு: Contact: Sherry Tippey Email: tippeytours@hotmail.com Website: www.templenet.com/seasons.htm நிகழ்ச்சி: ‘The Sound of Seasons’ Concert நாள், நேரம்: மே 6, 2007; மாலை 4:00 மணி மற்றும் 6:30 மணி இடம்: Sycamore High School, 7400 Cornell Rd, Cincinnati, 45242 தொலைபேசி: 513.686.1770 நுழைவுச்சீட்டுகள்: $10 (அரங்க நுழைவாயிலில் பெறலாம்) |