வர்ஜீனியா: அத்யயன உத்சவம்
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் பத்து நாட்கள் பகல்பத்து என்றும் பின்னால் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் பிரபந்தங்களைப் பாராயணம் செய்வர். கலியன் எனப்படும் திருமங்கை ஆழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகப் பாடல்களால் மகிழ்ந்து போன அரங்கநாதன் அவரிடம் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு வேதத்துக்கு நிகரான அந்தஸ்து தருவதாகவும், திருவாய் மொழியைப் பிராட்டியருடன் சேர்ந்து கேட்பதாகவும் வரமளிக்கிறார். அதன்படி இந்த விழா பல நூறு ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 200 பாடல்கள் வீதம் 20 நாட்களில் 4000 பிரபந்தங்களை வாசிப்பார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழ் தெரியாத வைணவர்கள்கூட கன்னடத்திலும், தெலுங்கிலும் அச்சடித்த புத்தகங்களைக் கொண்டு தமிழ் வேதம் படிப்பதுதான்.

ராமாநுஜன் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாகத் தம் வீட்டில் இந்த உத்சவத்தை நடத்தி வருகிறார். வார நாட்களில் கிட்டத்தட்ட 40 பேர்களும் சனி, ஞாயிறுகளில் 100 பேர்களும் பங்கு கொள்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரம் பாராயணம் நடக்கும். நேரில் பங்கேற்க முடியாதவர்கள் தொலைபேசி மூலமாகவும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சி முழுவதும் வலை மூலமாக நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாராயணம் செய்யத் தகுந்தவாறு பாடல்கள் திரையிடப்பட்டன.

மேலும் விபரங்களுக்கு:
Balaji Ramanujam - balaji7@yahoo.com, iambalu@gmail.com

வாஷிங்டன் பாலாஜி

© TamilOnline.com