BATM: பொங்கல் விழா
ஜனவரி 7, 2012 அன்று சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் பொங்கல் விழாவை மில்பிடாஸ் நகரில் உள்ள ஜெயின் கோயில் உள்ளரங்கில் நடத்தியது. இதில் கலை நிகழ்ச்சிகளோடு எந்திர எருது ஏறும் விளையாட்டு, கோலப்போட்டி, கரும்பு உடைக்கும் போட்டி, பொங்கல் சமைக்கும் போட்டி எனப் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைவர் பிரபு வெங்கடேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஜெயபிரகாஷ் ஃபிரான்சிஸ் இசையில் பொங்கல் செறிவுகளைப்பற்றிய பாடல் சிறார்களின் குரலில் ஒலித்தது. பாகீரதி சேஷப்பன் நெறிப்படுத்தி மன்ற மங்கையர் மீட்டிய வீணை இசை, பவித்ரா நாகராஜனின் ஆனந்த தாண்டவம், ரம்யா, சந்தியா இணையின் நடனம் மற்றும் ஜனனி ஜெயக்குமாரின் பரதநாட்டியம் போன்றவை மனதை மகிழ்வித்தன.

ரம்யா இந்திரஜித் ஒருங்கிணைத்து வழங்கிய 'தை பொறந்தா வழி பொறக்கும்' பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின. மதுமதி, பிரேமலதா, சித்ரா, செல்வி பாஸ்கர் குழுவினர் வழங்கிய மண்வாசனை மாறா நடனங்கள், கோமதி ரமேஷ் குழுவினர் வில்லுப்பாட்டு ஆகியவை பிரமாதம். இடையிடையே கரும்புடைக்கும் போட்டியில் ஆடவரை விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் மேடையேறி அமர்க்களப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய சிலம்பாட்டத்தை வேதா நாராயணன் குழுவினர் நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டினார்.

அரங்கத்தின் ஒரங்களில் வண்ணக் கோலங்களின் வார்ப்பு பாராட்டுப் பெற்றது. ஆறுமுகம் பேச்சிமுத்து பொங்கலைப் பற்றிய காணொளி ஒன்றைத் திரையிட்டார். சாந்தி புகழ் தயாரித்து வழங்கிய காவடியாட்டம், சுதா அருணின் நாட்டுப்புற நடனம், மலர் பழனியப்பன், ப்ரியா நெறியாள்கையில் 'நண்பேன்டா' குறு நாடகம், சுகிசிவாவின் சேர்ந்திசை எல்லாமே பெருவிருந்து. தவம் அன்பு ஒழுங்கு செய்த சிறுமிகளின் கோலாட்டம் பரவசப்படுத்தியது. தக்ஷிணியின் ஒருங்கிணைப்பில் கோதையரின் கோலாட்டம் கோலோச்சியதில் ஆச்சர்யமில்லை. Karaoke பாடல்கள் செவிக்கு விருந்து. ஜெயபிரகாஷ் ஒருங்கிணைத்து வழங்கிய 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடல் நிகழ்வுகளின் சுருதியைக் கூட்டியது. ஜெயபிரகாஷ் ஃபிரான்சிஸ் மற்றும் ஸ்ரீதரன் மைனர் நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் தொகுத்து வழங்கினர்.

விழாவை மன்ற நிர்வாகிகள் பிரபு வெங்கடேஷ், ஜெயபிரகாஷ் ஃபிரான்சிஸ், அன்பு ராஜா, வேணு ரங்கனாதன், பாலு கிருஷ்ணராஜ், முத்து ஸ்ரீனிவாசன், ஆறுமுகம் பேச்சிமுத்து, வெங்கடேஷ் பாபு, அபி கணேஷ், அம்ருதா ரவிகிருஷ்ண்ன், மு.சரவணன், இந்திரா தங்கசாமி ஆகியோர் தொண்டர்களின் துணையுடன் திறம்பட நடத்தினார்கள். இதுபற்றிய உங்கள் கருத்துக்களை batm.president@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

அதிக விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org அல்லது www.facebook.com என்ற முகவரியை அணுகலாம்.

இந்திரா தங்கசாமி

© TamilOnline.com