ஜனவரி 28, 2012 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா, அரோரா பாலாஜி கோவில் கலையரங்கத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அறவாழி வரவேற்புரை வழங்கினார். கணேசன், சதீஷ் மற்றும் பார்வதி நிகழ்ச்சியைப்
புதுமையாகத் தொகுத்து வழங்கினர். கதை மற்றும் கதா பாத்திரங்களைத் தேடும் (திருடும்) திரைப்படக் குழுவினராக ஒரு குறு நாடக வடிவில் தொகுத்து வழங்கினர்.
கண்கவர் கிராமிய, பாரம்பரிய மற்றும் திரை இசை நடனங்கள் நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தன. நேப்பர்வில் தமிழ்ப் பள்ளி, சங்க இலக்கியங்களை அலசி ஒரு கலந்துரையாடலை வழங்கியது. மாணவர்கள் சீவக சிந்தாமணி, புறநானுறு, கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரத்தில் இருந்து உவமை, தானம் மற்றும் வீரம் பற்றி விவாதித்தனர். அவற்றில் உள்ள செய்யுள்களை மேற்கோள் காட்டி அதற்கு விளக்கமும் அளித்தது மிகவும் நன்றாக இருந்தது. 'கொங்குச் சீமையிலே' என்ற குறுநாடகம் 1970களில் கொங்கு நாட்டில் இருந்த வாழ்வியலின் அழகைப் படம் பிடித்தது. சந்திரக்குமார் எழுதி, தங்கம் இயக்கிய இந்த நாடகத்தில் சிறுவர்கள் சிறப்பாகக் கொங்குத் தமிழில் பேசி நடித்தனர்.
நிறைவாக 'திரைப்படங்களால் சமுதாயம் வளர்கிறது - தேய்கிறது' என்ற தலைப்பில், உமையாள் முத்து அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. சாக்கிரடிஸ், மயூரி, ஆனந்தன், ரங்கா, நம்பி, சித்ரா, முத்துவேலு, மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். நடுவர் தமக்கே உரிய இலக்கிய நடையில் மட்டுமின்றி இன்றைய திரைப்பட 'பஞ்ச் டயலாக்' நடையிலும் பேசி அசத்தினார். சங்கத்தின் துணைத் தலைவர் சோமு நன்றி உரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
செய்தி: மணிகண்டன், அரோரா, இல்லினாய் படம்: அருளொளி ராஜாராம் |