தெரியுமா?: டாக்டர் ராஜன் நடராஜன் பாராட்டு விழா
புதிதாக நியமனம் பெற்ற மேரிலாந்து வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்களுக்கு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வாழும் இந்திய வம்சாவழியினர் பாராட்டு விழா ஒன்றை அண்மையில் எடுத்தார்கள். வாஷிங்டன் நகரின் கிரீன்பெல்ட்டில் அமைந்துள்ள மார்ட்டின் கிராண்ட்விஸ் அரங்கில் இந்த விழா நடந்தது.

விழாவில் மேரிலாந்து கவர்னர் மேதகு மார்ட்டின் ஓமாலி சிறப்புரை ஆற்றினார். லெஃப்டினன்ட் கவர்னர் ஆன்டனி பிரவுன், வெளியுறவுத் துறைச் செயலர் ஜான் மெக்டோனோ, அட்டர்னி ஜெனரல் டக் கேன்ஸ்லர், செனட் பெரும்பான்மைத் தலைவர் செனட்டர் ராபர்ட் கராஜியோலா, ஹவுஸ் (மேல்சபை) பெரும்பான்மைத் தலைவர் குமார் பார்வே, மாண்ட்கமரி கவுன்டி ஆட்சியர் ஐக் லெக்கட், ஹாவர்ட் கவுன்டி ஆட்சியர் கென் உல்மன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இந்திய தூதரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் வினாயக் க்வாடா கலந்து கொண்டார். இந்திய அமெரிக்கர்களின் தேசிய அமைப்பான NCIAAவின் (National Council of Indian American Associations) தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், பினாய் தாமஸ், டாக்டர் சாம்பு பானிக், டாக்டர் சுரேஷ் குப்தா, வால்டன் தாசன், ஜிசெலா கனி மற்றும் பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் டாக்டர். ராஜன் நடராஜன் அவர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினர். பேசிய அனைவருமே பெயரும் புகழும் பெற்று விளங்கும் ஓர் இந்திய அமெரிக்கரை மேரிலாந்து மாநில அரசில் உயர்பதவிக்கு நியமனம் செய்து வரலாறு படைத்ததற்காக கவர்னர் ஓமாலி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். (படத்தில் இடமிருந்து வலம்: கவர்னர் மார்ட்டின் ஓமாலி, டாக்டர் ராஜன் நடராஜன், அவரது மனைவி டாக்டர் சாவித்திரி).

விழாவில் டாக்டர். ராஜன் நடராஜன் அவர்களுக்குப் பாராட்டுப் பட்டயம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் "இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான உறவு மேம்படுவதற்குச் செய்யும் தங்களின் சீரிய பணிகளுக்காகவும், வழிநடத்தும் திறமைக்காவும் இந்தப் பட்டயத்தை அளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. ஹாவர்ட் கவுன்டி ஆட்சியர் கென் உல்மன், "டிசம்பர் 18, 2011 ஹாவர்ட் கவுன்டியில் டாக்டர். ராஜன் நடராஜன் தினமாக அனுசரிக்கப்படும்" என்று அறிவித்தபோது அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.

டாக்டர் ராஜன் நடராஜனுடனான நேர்காணல் மற்றும் தகவல்களுக்குப் பார்க்க: தென்றல், செப்டம்பர் 2010

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com