கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியில் 13 வருடங்களாகத் தமிழ் பயிற்றி வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை 2012 ஜூன் 8,9,10 தேதிகளில் சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் சான்ட க்லாரா கன்வென்ஷன் சென்டரில் (Santa Clara convention center) நடத்தவிருக்கிறது.
இம்மாநாடு 'சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள்' என்ற கருப்பொருளில் நடத்தப்படும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளிகள், ஆசிரியர், பெற்றோர் தத்தம் குழந்தைகளுக்குத் தமிழ் மற்றும் கலாசாரத்தைக் கற்பித்தலில் உள்ள சவால்கள், சாதனைகள், உத்திகள், பாடத்திட்டங்கள் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்படும். நம் வரலாறு, மொழி, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றை அறியும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் நடத்தும் நாடகம், நடனம், பட்டிமன்றம், பேச்சு ஆகியவையும் இடம்பெறும். இவற்றில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பள்ளிகள் வழியே விண்ணப்பிக்கலாம். தவிர, ஜப்பான், சீனா, மெக்ஸிகோ, கியூபா, பிற இந்திய மொழி பேசுவோர் ஆகியோரும் தத்தமது பாரம்பரிய மொழி, கலாசாரம் மற்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். UCLAவில் ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய மொழி குறித்த கருத்துப்பட்டறையின் பிரதான பேச்சாளர் ஒருவர் கருத்துப் பட்டறையும், ஆசிரியர் பயிற்சியும் அளிக்க உள்ளார்.
மாநாட்டின் ஆய்வரங்கக் குழு புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் பயிற்றல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைத் தெரிந்தெடுத்துள்ளனர். தமிழாசான்கள், தமிழறிஞர்கள், பெற்றோர் இவ்வாய்வுக் கட்டுரைகளைக் கீழ்க்கண்ட தலைப்புகளில் வழங்க உள்ளனர்: (1) தமிழ்க் கல்விக்கான கருவிகள், உத்திகள், தொழில் நுட்பங்கள் (Tools, techniques and technology in Tamil education); (2) பயன்மிக்க பாடத் தொகுப்புகளும், திட்டங்களும் (Effective syllabus and curriculum); (3) தமிழ்க் கல்வியில் கலை, சமூகம், கலாசாரத் தாக்கங்கள் (Art, social and cultural influences in Tamil education); (4) தமிழ்க் கல்விக்கான உலக வலையமைப்பு உருவாக்கம் (Building a world Tamil education network).
இந்த 3 நாள் மாநாட்டில் சுமார் 5000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. கலை நிகழ்சிகளில் பங்கேற்கப் பதிவுசெய்ய கடைசி நாள்: பிப்ரவரி 18, 2012.
கலைநிகழ்ச்சிகள் தரவும், மாநாட்டில் பங்கேற்கவும், விளம்பரம் செய்யவும் தொடர்புகொள்க: வலைதளம் - www.tamilhl.org மின்னஞ்சல் - catamilacademy@yahoo.com, தொலைபேசி - 408.490.0282
நித்யவதி சுந்தரேஷ் |