அன்பும் அருளும்
"குமாரு! குமாரு!" என் அம்மா எனக்கு வெறுப்பாய்த் தோன்றும் நேரம் இதுதான். என் தூக்கத்தைக் கலைப்பதில் அப்படி என்ன அவசரம் இவங்களுக்கு?

"ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம் போக முடியாதா? மூவரும் எழுந்தோம். உடலில் உஷ்ணம் மெல்லப் பரவியதுதான் தாமதம், நான் நீ என்று போட்டியிட்டபடி கிளம்பினோம்.

"ஸ்கூலுக்கு இப்படி சீக்கிரமா கிளம்பிருக்குங்களா! திரியிரதுன்னா பாரு ஆர்வத்தே!" என்று முணுமுணுத்துக் கொண்டே அவரும் கிளம்பிக் கொண்டிருந்தார். பாட்டி வீடு 'சுன்லோங் எஸ்டேட்'டில் உள்ளது.

சுங்கைப் பட்டாணியிலிருந்து பாட்டி வீட்டிற்குச் செல்ல 40 நிமிடமாகும். பாட்டி வீட்டிற்குப் போவதென்றால் பெருமகிழ்ச்சி எங்கள் மூவருக்கும். அதற்குக் காரணங்களும் உண்டு. முதல் காரணம் பயணம். மற்றது பாட்டி வீட்டருகே உள்ள சோளத் தோட்டம், ரப்பர் மரங்கள், கிணறு, சண்டைக்கோழி, என்று பல. அதில் மிக இரகசியமான உண்மை படிக்காமல் தப்பிப்பது.

அதிகாலை வீட்டிலிருந்து முதலில் மெயின் ரோட்டிற்குச் செல்ல வேண்டும். ஆகவே ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, ஆறு மணிக்குள் மெயின் ரோட்டை அடைய வேண்டும். 6.30 மணி பேருந்து வந்ததும் அதில் ஏறி பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். பின், அங்கு 7.30 மணி குவாலா கெட்டில் பேருந்தில் செல்ல வேண்டும். குவாலா கெட்டிலில் 8.00 மணியளவில் பாடாங் செராய் பேருந்து வரும். அதில் பயணித்து அவ்விடத்தை அடைந்ததும், 30 நிமிடம் காத்திருந்தால் லூனாஸ் வழியே செல்லும் பேருந்து அங்கே வந்தடையும். அதுவே எங்களின் அன்றைய பயணத்தின் இறுதிப் பேருந்து.

பல பேருந்துகள் ஏறினாலும், களைப்பு எங்களை ஆட்கொள்ளவில்லை. பாட்டி வீடிருக்கும் எஸ்டேட்டை அடைந்தோம். வழக்கம்போல மூன்று கிலோ மீட்டர் நடக்க வேண்டும். எஸ்டேட் பாதை குண்டும் குழியுமாக இருக்குமென்பதால், நடந்துதான் செல்ல வேண்டும். தொலைபேசி வசதி இல்லாத பல எஸ்டேட்களில் அதுவும் ஒன்று. வரப்போகிறோம், வந்துக்கொண்டிருக்கிறோம், வந்துவிட்டோம் என்றெல்லாம் எதையும் தெரிவிக்க முடியாத ஒரு காலம். எங்கள் வருகை பாட்டிக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும், மற்றவர்களுக்குத் துன்ப அதிர்ச்சியளிக்கும். அவர்களுக்கு நாங்கள் தொல்லையென்பது காலம் செல்லச் செல்ல எனக்குப் புரிந்தது.

நாங்கள் சில வாரம் பாட்டி வீட்டிலேயே தங்கிவிடுவோம். அங்கே, பாட்டி, தாத்தா, பெரிய மாமா, பெரிய அத்தை, பெரிய மாமா பிள்ளை, சுரேஷ் மாமா, அசோ மாமா, அரும்பு சித்தி என்று பலர் இருப்பார்கள். எனக்குப் பிடித்தது என்னவோ, அசோ மாமா வளர்க்கும் சண்டைக்கோழிகளும் சண்டை மீன்களும் தான். மாமா வீட்டில் இல்லாத நேரத்தில், கோழிகளைப் பார்க்க கூண்டருகே செல்வேன். நான் ஏதாவது செய்து விடுவேனோ என்று பயந்து என் அம்மா உடனே என்னை அழைத்திடுவார். அதிகாலை பனியில் ரப்பர் மரம் வெட்டச் செல்லும் பாட்டி, தாத்தா மற்றும் பெரிய மாமாவிற்கு துணையாக உடன் செல்வதும் ஓரின்பம். வீட்டை நெருங்க நெருங்க எனக்கு ஆர்வம் மிகுந்தபடியே இருந்தது. திடீரென என் அக்கா வேகமாக நடந்தாள். நானும் வேகமாக நடந்தேன். நான் ஓட ஆரம்பித்ததும் அக்காவும் ஓடினாள். நான் முதலில் பாட்டி வீட்டின் வாசலை அடைந்தேன். அக்கா எங்கேயென்று திரும்பிப் பார்த்தேன். அவள் சிரித்தப்படியே வந்து கொண்டிருந்தாள். அவள் பின்னே அம்மாவும் தங்கையும் வந்தனர். பாட்டி எங்களைக் கண்டதும் மகிழ்ந்தார்.

நானும் என் தங்கையும் பாட்டியைக் கட்டியணைத்தோம். பிறகு, நாங்கள் ஆடை மாற்றிக்கொண்டு விளையாடப் போனோம். அம்மா "வந்தோன விளையாட்டா?" என்று முடக்கினார். "பருவால விடு, விளையாடட்டும், அவங்க வந்துட்டா எங்க விளையாட முடியும்," என்று பாட்டி பச்சைக்கொடி காட்டினார்.

நாங்கள் விளையாடி, விளையாடி மாலைப்பொழுது மறையும் வேளையில் ஓய்ந்தோம். அம்மா எங்களைக் குளிக்க அழைத்துச் சென்றார். குளிக்க, துணிமணிகள் துவைக்க வேண்டுமென்றால், ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஆலக்கரைக்கு அருகே ஒரு கிணறு உள்ளது. அதுவே அங்குள்ளவர்களுக்கு நீர் வசதி. நான் பெரிய வாளி ஒன்றை எடுத்துக் கொண்டேன். அக்கா இரண்டு வாளி எடுத்துக் கொள்ள, தங்கை அவளுடைய மாற்றுத் துணியை மட்டும் எடுத்துக் கொண்டாள். அம்மா நீர் எடுக்கும் வாளியையும் துணிமணிகளையும் எடுத்து கொண்டார். எத்தனையோ முறை இக்கிணற்றைப் பார்த்திருந்தாலும், இன்னமும் பயமாகவே இருக்கின்றது. கிணற்று நீரின் குளிர்ச்சிக்கு ஈடேயில்லை. குளித்து முடித்தவுடன், அம்மா வாளிகளில் நீரை நிரப்பினார். பெரிய வாளிகளை, அம்மா காண்ட தடியில் மாட்டித் தூக்கிக்கொண்டு வந்தார். நானும் அக்காவும் சிறிய வாளிகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டோம்.

பகலைத் திரையிட்டு மூடியபடியே, இரவு மெல்ல மலர்ந்தது. மாமா, அத்தை, சித்தி என்று ஒவ்வொருவராக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் புன்னகைத்து வரவேற்று நலம் விசாரித்தார்கள். அனைவரும் ஒன்றாக உணவு உண்டோம். மாமா புதுப்படம் வீடியோ டேப் போட்டார். அவர்களுக்கு அது பழைய படம்தான். வெள்ளி, சனி தினங்களில் டிவியில் ஒளிபரப்பப்படும் மிகப்பழைய திரைப்படத்தைக் காட்டிலும் இத்திரைப்படம் புதியதே. படம் முடிந்தவுடன் உறக்கம் என அந்நாள் முடிந்தது.

கதிரவன் காலையை வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கிழமையானதால், அனைவரும் வீட்டில் இருந்தனர். சித்தி மட்டும் சிறிது நேரம் கழித்து எதிர்காலச் சிற்றப்பாவோடு வெளியே சென்றார். பெரிய மாமா கோழிகளுக்குத் தீனி வாங்க டவுனுக்கு சென்றார். சுரேஷ் மாமாவும் அசோ மாமாவும் சண்டைமீன் பிடிக்கக் கிளம்பினர். இருவரும் ஒரே மோட்டாரில் கிளம்பினர். நான் வாசலுக்கு வெளியே இருந்த எண்ணைத் தோம்பில் அமர்ந்து கொய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மோட்டார் வாசலருகே வந்ததும், சட்டென நின்றது. அசோ மாமா, "சண்டமீன் புடிக்கப் போறோம், வரியா?" என்றழைத்தார். எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உற்சாகத்தில், ஓடிச் சென்று விடக்கென்று ஏறிக்கொண்டேன். "அசோ! அசோ!" கத்திக்கொண்டே என் அம்மா ஓடி வந்தார். இனி நான் செல்லமுடியாது என்று என் மனம் கூறியது. "அசோ, அவன் வேணாம்! நீங்க மட்டும் போங்க." அம்மா உறுதியாகக் கூறவே, நான் கீழே இறங்கினேன். பழையபடி தோம்பில் அமர்ந்தேன். மாமா இருவரும் என்னைச் சீண்டும் நோக்கில் "பாய்!" என்று கையசைத்துக் கொண்டே சென்றனர்.

மதியவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. பாட்டி சமைத்துக் கொண்டிருந்த கோழிக் கறியின் வாசம் மூக்கைத் தொளைத்தது. ஞாயிற்றுக் கிழமையானால், எல்லோருக்கும் விடுமுறை. ஆகவே, உணவுவகை பலவிதமாக இருக்கும். சமையலின் ருசி என் பசியை மிகையாக்கிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில், சாப்பாடு தயாராகிவிடும் என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். தூரத்தில் ஒரு மோட்டார் வண்டியின் ஒலி கேட்டது. மாமா வந்துவிட்டார் என ஆவலுடன் வெளியே ஓடிப் பார்த்தேன். அங்கு, ஒருவர் பழைய மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தார்.

நான் உடனே, "பாட்டி, யாரோ வராங்க!" என்று தகவல் அனுப்பினேன். வீட்டுக்கு வெளியே துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்த அத்தை வந்தார். வந்தவரை, நான் இதுவரை பார்த்ததில்லை. அத்தை முகத்திலும் அதே ஒளி. அவர் மோட்டாரை அப்படியே வைத்தபடி வந்தார். "இது கிருஷ்ணன் வீடுங்களா?" அவர் தாத்தாவின் பெயரை அடையாளமிட்டுக் கேட்டதிலிருந்து, அவர் உறவினர் இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டேன்.

"ஆமாம், ஏன் கேக்குறிங்கே?" அவர் முகத்திலிருந்த கலவரம் அத்தையையும் பாதித்திருக்கும். "அவரு மகன் அடிபட்டுட்டாரு!" விஷயம் அறிந்ததும் அத்தை, "ஐயோ! ஐயோ!!" என்று கதறவே, வீட்டிலுள்ளோர் அனைவரும் ஓடிவந்தனர். என் கால்கள் பசைப்பட்டு போனது. "என்னாச்சி, என்னாச்சி?" என்று அம்மா கேட்க, "கிருஷ்ணன் மகன்க, அடிபட்டு கெடக்குறாரு!" அம்மா, பாட்டி இருவரின் கதறல் என்னை மேலும் உலுக்கியது. அத்தை அழுது அழுது பலம் அற்றவராகிக் கொண்டிருந்தார். "அசோக்கும் சுரேஷும் எப்டி சொல்றது!". "எங்கே இருக்காங்கே?" அம்மா அழுகையுடன் கேட்க, "கேலங் லாமா கிட்ட அடிபட்டிருக்காங்க!" என்று சஞ்சல பதிலை அளித்தார்.

"கேலாங் லாமாவா!"

"ஆமாங்க, ரெண்டு பேரும் அடிபட்டுக் கிடக்குறாங்க!"

"ஐயோ! ஐயயோ!! அம்மா, அசோவும் சுரேஷும் அடிபட்டுருக்காங்க!" பாட்டி இடிந்து விழுந்தார். அம்மா பாட்டியைப் பிடிக்க ஓடினார். அத்தையும் உடனே ஓடி வந்தார். உடனே அம்மா அத்தையைப் பார்த்து, "நீ அம்மாவே பார்த்துக்கோ, நான் போய் பார்க்குறேன்!" என்று கூறிவிட்டு, "என்ன அந்த எடத்துக்குக் கூட்டிகிட்டு போவ முடியுமா?" என்றார்.

"சரி, வாங்க!" அம்மா வந்தவரோடு கிளம்பினார். பாட்டி நாற்காலியில் சாய்ந்தார்.

தாத்தா இன்னும் போதை கலந்த தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. அத்தை சாதாரணமாக அமர்ந்திருந்தார். இப்பொழுது அத்தை அழவில்லை. ஏன் அவர் அழுகை நின்றது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

விஜயன்,
கெடா, மலேசியா

© TamilOnline.com