சில மாற்றங்கள் (பகுதி- 9)
இதுவரை...
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயை சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ராஜை அழைத்து வர தினேஷ், ஸ்ரீயுடன் கிளம்புகிறான். ஸ்ரீ தனக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் நினைவு கூர்ந்தவாறே ராஜைப் பழி தீர்க்கும் எண்ணத்தில் காரைச் செலுத்துகிறான். ஸ்ரீ பழி தீர்த்தானா? ராஜுக்கு வேலை கிடைத்ததா? அவன் கஷ்டம் தீர்ந்ததா?

*****


ஸ்ரீக்குத் தலைமீது பெரிய பாறாங்கல்லை வைத்தது போல பாரமாக இருந்தது. லேசாகக் கண் விழித்தபோது அருகில் அப்பா கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார். மதியம் ஆகியிருக்க வேண்டும். வாயை அசைக்கமுடியவில்லை, உடல் ஒரு நிலையில் இல்லை. சற்றே யோசித்த போது நள்ளிரவிலும், பிறகு அதிகாலையிலும் நினைவு வந்து விழித்து அம்மாவிடமும், மாமாவிடமும் பேசியது லேசாக நினைவுக்கு வந்தது. ஆனால் எல்லாமே ஒருவித குழப்பக் கலவையாக நினைவில் இருந்தது. நான் கண்விழித்த உடன் "காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க" என்று சஷ்டி கவசத்தை இரையத் தொடங்கினாள் அம்மா. அப்பா அம்மாவை அமர்த்திவிட்டு, என் கைகளைப் பற்றிக்கொண்டு "சீனு இப்ப எப்படி இருக்க, ஏதாவது வலிக்கிறதா?" என்றார். நான் ஒன்றும் பேசாமல், தலையை மட்டும் மெதுவாக அசைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். என் கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் பிரவாகித்தது. அப்பா என் கண்களைத் துடைத்து விட்டு "சரி நீ எதுவும் இப்ப பேசவேண்டாம். மெள்ள எழுந்து ஏதாவது சாப்பிடு. நாம நாளை ராத்திரி சென்னை போகப்போறோம். இங்க யாருகிட்டயாவது சொல்லிக்கணும்னா சொல்லிக்க. நல்ல ஸ்பெஷலிஸ்ட் பார்த்து உனக்கு இந்த நோயை குணப்படுத்திடலாம். நீ எதையும் நினைச்சு வருத்தப்படாதே" என்றார். எனக்கு நம்பிக்கை தருவதற்காக அவர் தெளிவாகப் பேசப் பார்த்தாலும், அவர் குரலில் ஒருபோதும் நான் கேட்டிராத நடுக்கம் அவருடைய துயரத்தைக் காட்டிக் கொடுத்தது. "யாருகிட்டேயும் சொல்லிக்க வேண்டாம் எனக்கு. கிளம்பற வரைக்கும் இந்த அறையிலேயே இருக்கேன்" என்று சற்றே சிரமப்பட்டுப் பேசினேன்.

இன்று கடைசிப் பரிட்சை முடிந்திருக்கும். எல்லாம் நல்லபடியாக நடந்திருந்தால், கஷ்டப்பட்டுப் படித்ததற்கு, நன்றாகப் பரீட்சை எழுதியதற்கு சந்தோஷமாக துள்ளிக் குதித்து நண்பர்களோடு கோடை விடுமுறையை எதிர்நோக்கிக் களியாட்டம் போட்டவாறு வீட்டுக்கு இந்நேரம் வந்திருப்பேன். ஆனால் நேற்று ரங்கன் அரங்கேற்றிய பழிவாங்கும் நாடகத்தில் என் பள்ளி வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் தடுமாறி எதிர்காலமே கேள்விக்குறியாக இந்த அறையில் அடைபட்டுக் கிடக்கும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். எனக்கு எவரையும் பார்க்க இஷ்டமில்லை. ஏதோ பெயருக்குச் சாப்பிட்டுவிட்டு என் பொருட்களைச் சென்னைப் பயணத்துக்கு அள்ளி அடைத்துக் கொண்டேன். தனலட்சுமி மறுநாள் காலை என்னைப் பார்க்க வந்தபோதுகூடத் தூங்குவதுபோல பாவனை செய்து அவளை நாசூக்காகத் தவிர்த்தேன். ரங்கன் மீது எனக்கு வந்த ஆத்திரமும் கோபமும் வடிகாலில்லாமல் பொங்கிப் பொங்கி என்னுள்ளேயே வழிந்து கொண்டிருந்தது. கண்ணனூரை விட்டு நான் புறப்பட்டபோது மிகக் கசப்பான மனநிலையில், இனி இந்த ஊருக்கு வருவதில்லை என்று நிச்சயித்துக் கொண்டேன்.

*****


'டாக்டர் பி.கே.சாரி, நியூரோ சர்ஜன்' என்று பளபளக்கும் வினைல் பலகையில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த பெயருக்குப் பக்கத்தில் ஆங்கிலத்தில் சில எழுத்துக்கள் தவிர மற்ற எல்லாமும் அவருடைய மருத்துவ அறிவை அறிவித்துக் கொண்டிருந்தன. நாங்கள் சென்னைக்கு வந்த மறுநாளே அப்பா ஒரு நண்பர் மூலம் நியூரோ ஸ்பெஷலிஸ்டிடம் அபாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டார். இந்தியாவில், ஏன் உலகிலேயே சிறந்த நரம்பியல் மருத்துவர்களில் டாக்டர் சாரியும் ஒருவர் என்று எனக்கு சொல்லப்பட்டது. சென்னை வரும்போதும், வந்த பின்னும் எனக்கு வலிப்பு வரவில்லை. சென்னையின் பரபரப்பான வித்தியாசமான உலகை வியந்து பார்த்ததில் கண்ணனூர் எண்ணங்கள் கொஞ்சம் மறந்து போயின.

எங்கள் முறை வந்தபோது, மென்மையாகப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டேன். டாக்டர் சாரியின் அறைக்குள் நுழைந்து வணக்கம் சொல்லி உட்கார்ந்தேன். அவருடைய அறை வழக்கமான டாக்டர் அறைபோல மருந்து நெடியெல்லாம் இல்லாமல், ஒரு சாதாரண அலுவலக அறைபோல இருந்தது. ஒரு போர்டில் "நோய் நாடி நோய் முதல் நாடி" குறள் பெரிதாக எழுதப்பட்டிருந்தது, அதற்குக் கீழே "இதுவும் கடந்து போகும்" என்ற வாசகம் இருந்தது. அருகே மிக நேர்த்தியாக மருத்துவப் புத்தகங்கள், அதற்கு மேல் மனித நரம்பியல் படம் பாகங்கள் குறிக்கப்பட்டு இருந்தன. டாக்டரின் உதவியாளர்(ளி) என்னுடைய கோப்புகளை அவரிடம் கொடுத்தார். தடிமனான தன் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு விறுவிறுவென என் பிரச்னைகளை அவர் உள்வாங்கத் தொடங்கினார். டாக்டர் சாரி ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவராகத் தோன்றினார். சிவந்த மேனியும், நீண்ட நாசியும் அவர் தோற்றத்தை எடுப்பாகக் காட்டியது. அசப்பில் ஹிந்தி நடிகர் அசோக்குமாரைப் போலத் தோற்றமளித்தார். அவரது புன்னகை நிறைந்த முகம் அவர் ஒரு ஜாலியான மனிதர் என்று தோன்ற வைத்தது. அவர் என்ன சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தையே நானும், என் அப்பா, அம்மாவும் கவலையோடு நோக்கினோம்.

மாறாத புன்னகையோடு என் அப்பாவைப் பார்த்து "கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்தேன். அன்னிக்கு ஸ்கூல்ல நடந்த ஸ்ட்ரெஸ்ஃபுல்லான இவண்ட்ல இப்படி சீஷர் இன்வோக் ஆகியிருக்கலாம். இதைப்போல ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு ஓசை அல்லது காட்சியினால வரக்கூடிய வலிப்பை மருந்தினாலும், அதை டிரிகர் பண்ணக்கூடிய விஷயங்களைத் தவிர்க்கறதாலேயும் நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவந்து குணப்படுத்திடலாம். ஆனால் அதை முதலில் உறுதிப்படுத்திக்கணும்" என்று சற்றே நிறுத்தி என்னைப் பார்த்து "ஸ்ரீனிவாசன் உன்னை எப்படிக் கூப்பிட்டா பிடிக்கும்?" என்றார். "எல்லாரும் என்னை சீனுனு கூப்பிடுவாங்க, அப்படியே கூப்பிடுங்க சார்" என்றேன். "வெரி குட், லுக் சீனு இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு எனக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு சரியா?"

"உனக்கு இதற்கு முன்ன எப்பவாவது இதுபோல வலிப்போ, இல்லை சுய நினைவில்லாமல் மயக்கமோ வந்திருக்கா?"

"இல்லை டாக்டர், இதுவரை அப்படி எதுவும் ஆனதில்லை. அன்னிக்கு... அன்னிக்கு... ஸ்கூல்ல நடந்ததுதான் முதல் முறை. என்ன நடந்ததுனு எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்படி ஒரு உணர்வை நான் இதுவரை அனுபவிச்சதே இல்லை."

"வெரி குட் சீனு... உனக்கு அடிக்கடி தலைவலி இல்லை தலை பாரமாக இருக்கற உணர்வு இதுவரை வந்திருக்கா?"

"எப்பவாவது ஜலதோஷம் வரும்போது தலைவலி வரும், மத்தபடி எனக்குத் தலைவலித்ததில்லை. ஆனால் இப்ப இந்த நோய் வந்ததிலிருந்து எப்பவும் தலை வலிக்கிற மாதிரியே இருக்கு."

"இப்படி வலிப்பு வரும்போது உனக்கு ஏதாவது ஓசை கேக்குதா? அப்ப நடக்கற விஷயங்கள் ஏதாவது ஞாபகம் இருக்குதா?"

"ஒரு மாதிரி உய்யுனு ஓசை கேக்குது. அதுக்குப் பிறகுதான் வலிப்பு வருது. வந்த சில வினாடிகளுக்குள் நினைவு தப்பிடுது. நடக்கிற எதுவும் நினைவில் இருக்க மாட்டேங்கிறது."

"சரி சீனு, கவலைப்பட ஒண்ணுமில்லை. மிஸ்டர் ராகவன், உங்க பையனுக்கு வந்திருக்கிறது எபிலெப்ஸிங்கிற வலிப்பு நோய். இது பல காரணங்களுக்காக வரலாம், சில சமயம் காரணங்களே கண்டுபிடிக்க முடியாமகூட வரலாம். குட் திங், இங்க ஒரு டிரிகரிங் இவெண்ட், ஒரு காரணம் தெரியுது. இதை மருந்தினால் குணப்படுத்த முடியும். சில டெஸ்ட் எடுத்துட்டு, ரிஸல்ட் பாத்துட்டு மெடிகேஷனை ஸ்ட்ரீம்லைன் பண்ணலாம். இவனுக்கு முதலில் ஒரு ப்ரெயின் ஸ்கேன் எடுக்கணும். எனக்கு இந்த வலிப்பு ப்ரெயின் ட்யூமர் மாதிரிக் காரணங்களால ஏற்படலைனு உறுதிப்படுத்திக்கணும்."

அப்பா "ட்யூமரா? அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா?" என்று அதிர்ச்சியாகக் கேட்டார்.

"இல்லை மிஸ்டர் ராகவன். இருக்காதுன்னு நான் நினைக்கிறேன். ஆனால், டெஸ்ட் பண்ணி உறுதிப்படுத்திக்கணும். அப்புறம் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்."

அம்மா "நல்லா படிக்கிற பையன் டாக்டர். கண் பட்டது போல, இப்படி ஆயிட்டான். இவன் ஒழுங்கா முன்ன போல நடமாடிக்கிட்டு குணமாயிட்டா போதும். இவன் படிக்க வேணாம். வேலைக்குப் போக வேணாம். வீட்டோட நல்லபடியா இருக்கிறா மாதிரி குணப்படுத்திக் குடுங்க டாக்டர்" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே "எல்லாம் நல்லபடியா குணமாயிடுவான். கவலைப்படாதீங்க. இது வெறும் நோய்தான். இதனால இவங்களோட எந்த நடவடிக்கையும் பாதிக்கப்படாது. எல்லா வேலைகளையும் இவன் வழக்கம்போல செய்துக்கலாம். இவன் சாதாரணமாப் படிக்கிறாப்போல படிக்க விடுங்க. முடக்கிப் போடப் பாக்காதீங்க. எவ்வளவோ சாதனையாளர்களுக்கெல்லாம் இந்த நோய் இருந்திருக்கு. சீனு நீ பத்தாவது வகுப்பு படிக்கிற இல்லையா, நீ அலெக்ஸாண்டர் தி கிரேட், பிதாகரஸ், டாவின்ஸி, மைக்கேல் ஆஞ்சலோ, ஜோன் ஆஃப் ஆர்க் இவங்களைப் பத்தியெல்லாம் பாடத்தில் படிச்சிருக்க இல்லையா?"

"படிச்சிருக்கேன் டாக்டர்."

"இவங்க எல்லாருக்கும், உனக்கும் ஒரு ஒத்துமை இருக்கு, என்ன தெரியுமா?"

"தெரியாது டாக்டர்."

"இவங்க எல்லாம் பெரிய சாதனையாளர்கள். சொன்னா ஆச்சரியப்படுவே. இவங்க எல்லாருமே வலிப்பு நோய்க்காரர்கள்தான். கிரிகெட் உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். இங்கிலாந்து கேப்டனாயிருந்தாரே டோனி கிரெய்க், அவரும் வலிப்பு நோய்க்காரர்தான். ஆக இந்த நோய் படிச்சு சாதனை பண்றதுக்கோ, உடலை வருத்தி விளையாடறதுக்கோ ஒரு தடையே இல்லை. மன உறுதியில்லாம போகிறது மட்டும்தான் உனக்குத் தடையா இருக்கும். அம்மா சொல்றாங்க, அப்பா சொல்றாங்கனு வீட்டுக்குள்ளே முடங்கிடாதே.. நல்லாப் படி, நிறைய சாதிக்கணும். ஓகே?" என்று தன்னம்பிக்கை தரும் விதமாகப் பேசினார். பிறகு அம்மாவைப் பார்த்து "கூட இருக்கிற நீங்களே இப்படி அழுது, ஒடிஞ்சு போறாப் போல பேசினால் அவனை எப்படி நீங்க நல்லா ஆக்க முடியும். இவன் குணமாகிறது என் மருந்துனால மட்டுமில்லை, நீங்க உற்சாகப்படுத்துறதிலும், தன்னம்பிக்கை தர்றதிலையும் இருக்கு" என்றார் கண்டிப்பாக.

"இல்லை, இவனோட எதிர்காலம் எப்படி இருக்குமோனு கவலையில சொல்லிட்டேன். நீங்க சொல்றது ஆறுதலா இருக்கு" என்றாள் அம்மா.

"உங்களுக்கு ஆறுதலுக்காக வெறுமனே இதைச் சொல்லலை. இது நிதர்சனமான உண்மை. நூறு, நூத்தம்பது வருஷத்துக்கு முன்ன பெருநோய் போல, வலிப்பு நோயும் யாரும் புரிஞ்சிக்க முடியாத நோயாத்தான் இருந்தது. இந்த நோய் வந்தவங்களை பேய் பிடிச்சவங்கனு, ஊரைவிட்டு ஒதுக்கி வெக்கிறது, கடுமையான தண்டனை குடுக்கிறதுனெல்லாம் துன்புறுத்தினாங்க. ஆனா மருத்துவ அறிவு வளர வளர இது எதனால வருது, இதை குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கிறதுனு எல்லாத்துலேயும் முன்னேற்றம் வந்துடுச்சு. இந்த நோய் இருக்கிறவங்க இப்ப சமுதாயத்துல மத்தவங்க மாதிரி சாதாரணமா குடும்ப வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க. சிம்பிளா சொல்லணும்னா, இந்த நோய் மூளையில திடீர்னு அடிக்கிற ஒரு புயல். மூளை நம்ம மொத்த உடலையும் இயக்குறதால, அதுல அடிக்கிற புயல் தற்காலிகமா இவங்களை நிலை தடுமாற வெக்குது. அவ்வளவுதான்.

"மிஸ்டர் ராகவன், நான் மெடிகேஷன் இப்ப எழுதித் தரேன். உடனே ஆரம்பிச்சிடுங்க. அப்புறம் எப்பவாவது வலிப்பு வந்தால் எப்ப வந்தது, அப்ப என்ன நடந்ததுனு எழுதி வெய்யுங்க. இன்னும் ரெண்டு வாரத்தில் மறுபடி பார்க்கிறேன். மீன் டைம், ப்ரெய்ன் ஸ்கேன், ஈஈஜி எல்லாம் எடுக்கணும். ரிசல்ட்ஸ் அடுத்தமுறை வரும் போது எடுத்து வாங்க.

"சீனு நீ உன் பரீட்சைக்கு மறுபடி படிக்கலாம். வெளியில் போகும்போது உன் பெயர், வீட்டு விலாசம், தொடர்பு எண் எல்லாம் எழுதின அட்டையை உன்னோடு எப்பவும் எடுத்துப்போ. உனக்கு வெளியில் இருக்கும்போது வலிப்பு வராப்போல் இருந்தால், உனக்கு நெருக்கமா இருக்கிறவங்ககிட்ட உடனே சொல்லிடு. கூடியவரை உயரமான இடங்களுக்குத் தனியா போகாதே. நீச்சல் பண்ணுவதாயிருந்தால், உனக்கு இந்த நோய் வரும்னு தெரிஞ்ச யாராவது ஒருத்தர்கூட போ. எச்சரிக்கையா இரு, ஆனால் உற்சாகமா வழக்கம்போல எல்லா வேலைகளிலும் உன்னை ஈடுபடுத்திக்க, சரியா?" என்றார் டாக்டர் சாரி.

வரும்போது உடைந்தாற்போல் உள்ளே வந்த அம்மாவும், அப்பாவும் டாக்டர் சாரியின் தன்னம்பிக்கையூட்டும் பேச்சில் சற்றே தெளிந்தாற்போல் தெரிந்தார்கள். நான் சலனமில்லாமல் அவர் எழுதித் தந்த மருந்துச் சீட்டோடு எழுந்தேன். கிறுக்கல் எழுத்தில் எழுதப்பட்டிருந்த என்னை குணப்படுத்தும் மருந்து, ரங்கன் கிறுக்கிவைத்துவிட்ட என் வாழ்க்கைத் தாளை ஒத்திருந்தது. இந்த மருந்து அந்தக் கிறுக்கலை அழிக்குமா? டாக்டரின் அறையை விட்டு வரும்போது மீண்டும் "இதுவும் கடந்து போகும்" என்ற வாசகம் கண்ணில் பட்டது.

அடுத்த ஒரு மாதம், ஏதாவது ஒரு லேப் டெஸ்ட், ஸ்கேனிங், டாக்டர் சாரியின் கிளினிக் என்று மாற்றி மாற்றிப் போய்வர வேண்டி வந்தது. பிரெய்ன் ட்யூமர் இல்லை என்று உறுதியானதும், மீண்டும் ஒருமுறை வலிப்பு வராததும் வீட்டில் நிலைமை கொஞ்சம் சகஜ நிலைக்குக் கொண்டுவர உதவின. கதிரேசன் சாருடைய பரிந்துரையில், அப்பீலில் என்னை அக்டோபரில் பரீட்சை எழுத அனுமதி கிடைத்தது. நான் படிக்க ஆரம்பிக்க முயன்ற போது, பத்தாவது தேர்வு மாநில முடிவுகள் தினசரிகளில் வெளி வந்தன. ரங்கன் மாநிலத்தில் ஐந்தாவது ரேங்கில் தேறியிருந்தான். அவனது ஃபோட்டோ பத்திரிகைகளில் சிரித்த முகத்தோடு வெளியாகியிருந்தது என் மனக் காயத்தில் உப்புக் காகிதம் தேய்த்தாற்போல் இருந்தது. அன்று இரவு மீண்டும் வலிப்பு வந்தது, பிறகு நான் படிக்க நினைக்கும் போதெல்லாம் ரங்கனின் இந்தச் சிரித்த முகம், அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சி என்று என் நினைவில் வந்து வாட்டி வாட்டி, மறுபடி மறுபடி வலிப்பை வரவழைத்தது.

டாக்டர் சாரி அடுத்தடுத்த நிகழ்வுகளால் கொஞ்சம் தடுமாறினாற்போல் இருந்தாலும், எனக்கு அளிக்கப்பட்ட மருந்தை மாற்றிக் கொடுத்து, இன்னும் முனைப்போடு, ஆனால் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இனி என்னால் என்றும் வாழ்க்கையில் தலைதூக்க முடியாது, படிக்கவே முடியாது. படித்தாலும் பரீட்சைக்குப் போவதை நினைக்கக்கூட முடியாது என்று எனக்குத் தோன்றிவிட்டது. அக்டோபர் தேர்வுக்குத் தயார் செய்வதை நிறுத்திவிட்டேன். இனி என் வாழ்க்கை முடிந்தது, என்றும் என் அப்பா அம்மாவுக்கு பாரமாக இருக்கப்போகிறேன் என்று எனக்குள் அழுதவாறே எப்போது தூங்கினேன் என்று தெரியாமல், நிலை மறந்து உறங்கிப்போனேன்.

திடீரென்று என் அருகில், வெகு அருகில் பேச்சுக் குரல் கேட்டது. கண்களை விழிக்காமல், காதுகளை மட்டும் தீட்டிக்கொண்டு கேட்டேன். "உங்க ஆபீஸில் ட்ரான்ஸ்ஃபர் பத்தி என்ன சொன்னாங்க?" என்று என் அப்பாவிடம் கேட்டாள் அம்மா.

"அவங்க சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. கவுஹாத்திக்கு டிரான்ஸ்பராச்சு, ப்ரமோஷனோட. வேணாம்னு எழுதிக் குடுத்துட்டேன். இனிமே எந்த ப்ரமோஷனும் வேணாம். இவனுக்கு குணமாகிறவரை இந்த ஊரைவிட்டு மாத்திப் போறதில்லைனு சொல்லிட்டேன். இப்ப நமக்கு நம்ம பையன் குணமாறதுதான் முக்கியம்."

"சரியாயிடுவானாங்க. நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். கொஞ்ச நாள் பிரச்சனையில்லாம இருக்கவே, வந்த கஷ்டம் முடிஞ்சதுனு சந்தோஷப்பட்டேன். இப்ப அவன் படிக்கக்கூட முடியாம இப்படி ஆயிட்டுதே. ஒரே பையன். எந்தக் கஷ்டமும் இல்லாம வளரணும்னு நினைச்சா, இப்படி அந்த கடவுள் சோதிக்கிறானே" என்று அழத் தொடங்கினாள்.

"ஏய்... அழுகையை நிறுத்து. சீனு முழிச்சிக்கப் போறான். எல்லாம் சரியாயிடும். அவன் மனசுல இன்னும் அந்தக் காயம் இருந்துகிட்டேயிருக்குனு நினைக்கிறேன். அதை அவன் மறந்து படிக்க ஆரம்பிச்சாதான் சரியாகும். அவன் முன்னாடி நாம இப்படிக் கலங்கக்கூடாது. தைரியம் சொல்லிட்டேயிருக்கணும். கவலைப்படாதே"

'என்னை கவலைப்படாதேனு சொல்லிட்டு, நீங்க ஏங்க அழறீங்க...."

இருவரும் எழுந்து வெளியே போய்விட்டார்கள். அந்த சம்பாஷணையைக் கேட்டபிறகு, எனக்குத் தூக்கம் போய்விட்டது. என்னால் என் அப்பா, அம்மா இவ்வளவு ஒடிந்து போய்க் கஷ்டப்படுகிறார்களே என்று நினைத்தபோது என்மீதே கோபம் வந்தது. ரங்கனைப் பற்றிய கோபமும், அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சியின் தாக்கமுமே என்னை இன்னும் துன்பத்தில் தள்ளுகிறது என்று புரிந்து கொண்டேன். இனி, அவற்றைப் பற்றி நினைப்பதில்லை என்று வைராக்கியம் செய்து கொண்டேன். அக்டோபரில் விட்ட இரண்டு தேர்வுகளையும் நல்ல படியாக எழுதி, வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும். என் அப்பா, அம்மா மனம் கஷ்டப்படாமல், என்னைப் பார்த்து சந்தோஷப்படும்படி வாழவேண்டும் என்று முடிவு செய்துவிட்டுப் படுத்தபோது, பொழுது விடிந்துவிட்டது.

(தொடரும்)

சந்திரமௌலி

© TamilOnline.com