ஓவியர் ஜி.கே.மூர்த்தி
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின் காரணமாகக் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். படிப்பை முடித்தபின் 'கலாவல்லி' மாத இதழில் சிலகாலம் ஓவியராகப் பணிபுரிந்தார். தனது தனித்திறனால் பல்வேறு கோயில்களின் சிற்பங்கள், சுவரோவியங்களை ஓவியமாக வடித்தார். பின் சென்னைக்குக் குடி பெயர்ந்த இவர் சிலகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். கலைமகள், கல்கி, தினமணி கதிர், காமகோடி, கோபுரதரிசனம், அமுதசுரபி, தினமலர்-வாரமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்த ஆன்மீகக் கதை, கட்டுரைகளுக்கு ஓவியங்கள் வரைந்தார். காஞ்சி மகா பெரியவரை தரிசித்த பின் இவரது வாழ்க்கையின் போக்கு மாறிப்போனது. முழுக்க முழுக்க ஆன்மீகத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தெய்வீகத் திருவுருவங்களை மட்டுமே வரையத் துவங்கினார். இவற்றைத் தாங்கியே பல இதழ்களின் தீபாவளி மலர்கள் வெளியாகின. வெற்றிதரும் ஸ்ரீ சனீஸ்வரனின் மகத்துவம், ஒரு பாமரனின் கீதை, இந்துக்களின் சாஸ்திர ஞானங்கள் போன்ற ஆன்மீக நூல்களையும் எழுதியிருக்கிறார். பல்வேறு ஆலயங்களின் ஓவியங்களை வரைந்துள்ள இவரது சனீஸ்வரன் ஓவியம் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அதில் காக்கை வாகனத்துக்குப் பதிலாக, கருடனை சனிபகவானின் வாகனமாக வரைந்திருந்தார். காஞ்சிப் பெரியவரின் ஆக்ஞைப்படி சனி பகவானுக்குக் கோயில் எழுப்பும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். உடல் நலிவுற்றுக் காலமான மூர்த்திக்கு மங்களம் என்ற மனைவி, நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com