நாதகான அரசி பொன்னுத்தாயி
தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான எம்.எஸ். பொன்னுத்தாயி (வயது 83) ஜனவரி 17, 2012 அன்று மதுரையில் காலமானார். பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிறந்த அவர், இளவயதிலேயே இசையார்வம் மிக்கவராக விளங்கினார். மீனாட்சி அம்மன் கோவிலின் ஆஸ்தான வித்வானாக இருந்த நடேசப் பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றுத் தேர்ந்தார். 9 வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அதுமுதல் தமிழ்நாடெங்கும் பயணம் செய்து பல கச்சேரிகளை நிகழ்த்தினார். ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோருக்கும் வாசித்திருக்கிறார். எம்.எஸ்.வி.யின் திருமணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர் இவர். 20க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் கலைமாமணி, முத்தமிழ்ப் பேரறிஞர் உட்படத் தமிழக, இந்திய அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். நாதஸ்வரக் கலைஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். பொன்னுத்தாயியின் கணவர் அ.சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்ட வீரர். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருக்கமானவர். வாழும் காலத்தில் தனது சொத்துக்களை எல்லாம் பிறருக்கு ஈந்த பொன்னுத்தாயிக்கு இறுதிக் காலத்தில் வந்த அரசு பென்ஷன் ஆயிரம் ரூபாயைத் தவிர கையிருப்பு ஏதுமில்லை. நாதத்துக்காவே தன்னை அர்ப்பணித்த இசைக்குயிலுக்குத் தென்றலின் அஞ்சலி.



© TamilOnline.com