1. ஒரு பெட்டியில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராமு அதனை நான்கு பங்காக்கி தனக்கு ஒரு பங்கை எடுத்துக் கொண்டு மீதத்தைத் தனது மூன்று சகோதரர்களுக்காக வைத்துச் சென்றான். இரண்டாவது சகோதரன் பெட்டியில் இருந்த சாக்லேட்டுகளை நான்கு பங்காக்கி தனக்கு ஒரு பங்கையும் கூடுதலாக ஒரு சாக்லேட்டையும் எடுத்துச் சென்றான். மூன்றாமவனும் அதுபோல் நான்கு பங்கு செய்து தனக்கு ஒரு பங்கையும் கூடுதலாக இரண்டு சாக்லேட்டையும் எடுத்துச் சென்றான். நான்காமவன் வந்து பார்த்தபோது பெட்டியியில் நான்கு சாக்லேட்டுகள் மட்டுமே மீதம் இருந்தன. அவன் அதை பங்கு பிரிக்காமல் தனக்காக எடுத்து வைத்துக் கொண்டான். மொத்தத்தில் நால்வர் எடுத்த சாக்லேட்டுகளும் எண்ணிக்கையில் சமமாக இருந்தன என்றால் பெட்டியில் இருந்த மொத்த சாக்லேட்டுகள் எத்தனை?
2. ஒன்பது 9களைப் பயன்படுத்தி 1000 விடைவரச் செய்யவேண்டும். முடியுமா?
3. ஓரிடத்தில் சில மாமரங்கள் இருந்தன. பழத்தைத் தின்னும் ஆசையில் கிளிகள் சில அங்கே வந்தன. மரத்திற்கு ஒரு கிளியாக அமர்ந்தபோது மூன்று கிளிகளுக்கு அமர மரம் கிடைக்கவில்லை. மரத்திற்கு இரண்டு கிளிகளாக அமர்ந்தபோது உட்காரக் கிளிகள் இல்லாமல் மூன்று மரங்கள் மீதம் இருந்தன. கிளிகள் எத்தனை, மரங்கள் எத்தனை?
4. கூடையில் சில மாம்பழங்கள் இருந்தன. ராஜு அதில் சம பாதியையும், அரைப்பழத்தையும் மூத்த மகளுக்குக் கொடுத்தார். மீதமிருந்த பழங்களில் பாதியையும், ஒரு அரைப்பழத்தையும் இரண்டாவது மகளுக்குக் கொடுத்தார். எஞ்சிய பழங்களில் பாதியையும், ஒரு அரைப்பழத்தையும் மூன்றாவது மகளுக்குக் கொடுத்தார். இறுதியில் கூடையில் ஐந்து பழங்கள் மட்டுமே மீதம் இருந்தன. எந்த ஒரு அரைப்பழமும் மீதம் இல்லை. அவர் தனது மகள்களுக்கு பழத்தைப் பங்கு பிரித்துக் கொடுத்த போதும் கூட பழத்தை அறுத்தோ, துண்டாக்கியோ கொடுக்கவில்லை. அப்படியானால் கூடையில் இருந்த பழங்கள் எத்தனை? அவற்றை ராஜு எப்படி பங்கு போட்டிருப்பார்?
அரவிந்த்
விடைகள்1. நால்வர் எடுத்துக் கொண்ட சாக்லேட்டுகளும் எண்ணிக்கையில் சமம் என்றால் பெட்டியில் இருந்த மொத்த சாக்லேட்டுகள் 4 X 4 = 16.
ராமு நான்கில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டான்; 16/4 = 4. மீதம் 12 சாக்லேட்டுகள்.
இரண்டாமவன் அதை நான்கு பங்காக்கி, கூடுதலாக ஒன்றையும் எடுத்துக் கொண்டான்; 12/4 = 3; 3 + 1 = 4. மீதம் 8.
மூன்றாமவன் 8ஐ நான்கு பங்காக்க = 8/4 = 2; அதில் ஒரு பங்கையும் கூடுதலாக 2 சாக்லேட்டுகளையும் அவன் எடுத்துக் கொள்ள 2 + 2 = 4. மீதம் = 4.
மீதம் இருந்த 4 சாக்லேட்டுகளை நான்காமவன் எடுத்துக் கொண்டான்.
2. 999 + 999/999 = 999 + 1 = 1000
3. கிளிகள் 12; மரங்கள் 9.
மரத்திற்கு ஒவ்வொரு கிளியாக 9 மரங்களில் அமர 3 கிளிகள் மீதம்.
மரத்திற்கு இரண்டு கிளிகளாக 6 மரங்களில் அமர 3 மரங்கள் மீதம்.
4. கூடையில்
மீதம் இருந்த பழங்கள் 5.
மூன்றாம் மகளுக்குப் பங்கு பிரிக்கும் முன் இதுவும் அரைப்பழமும் சேர்ந்தால் ஒரு பாதி. அதாவது 5 + 1/2 = 5 1/2 பழங்கள் ஒரு பாதிப்பங்கு. அப்படியானால் முழுப் பங்கு = 2 X 5 1/2 = 11. இதில் பாதியும் கூடுதலாக ஒரு அரைப்பழமும் மூன்றாம் மகளுக்குக் கொடுத்தார். அதாவது 5 1/2 + 1/2 = 6.
இதே முறைப்படி இரண்டாம் மகளுக்குக் கொடுத்தது = 11 1/2 + 1/2 = 12
முதலாம் மகளுக்குக் கொடுத்தது = 23 1/2 + 1/2 = 24
ஆக கூடையில் இருந்த மொத்த பழங்கள் = 24 + 12 + 6 + 5 = 47.