மகேந்திரபுரி நாட்டை மதிவாணன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஆனால் மிகுந்த கோபக்காரன். அப்படிக் கோபம் வரும்போது அவன் அருகில் இருப்போரை அடித்தும், பொருட்களைத் தூக்கி எறிந்தும் நாசம் செய்வான். கோபம் தணிந்ததும் தன் செயலுக்கு மிகவும் வருந்துவான். கோபத்தை அடக்கப் பலமுறை முயற்சித்தும் அவனால் முடியவில்லை. அளவற்ற கோபத்தினால் அவன் உடல்நலமும் பாதிக்கப்பட்டது.
ஒருநாள் அந்த அரசனின் அரண்மனைக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவரை வணங்கி வரவேற்ற மன்னன், அவரிடம் தனது பிரச்சனை குறித்தும், கோபத்தைத் தீர்க்கும் மருந்தைத் தந்து தன்னைக் காக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். முனிவர் சிறிது நேரம் யோசித்தார். பின், "மன்னா கவலை வேண்டாம். நாளைக் காலை இதற்கு நான் மருந்து தருகிறேன்" என்றார். மன்னனும் அவரை அரண்மனையிலேயே தங்கவைத்து வேண்டிய உதவிகள் செய்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது. அரசவைக்கு வந்த முனிவரை வணங்கினான் மன்னன்.
முனிவர் மன்னனிடம், "மன்னா! உன் கோபத்தைத் தீர்க்க ஒரு மந்திரக் குடுவையை உனக்குப் பரிசாகத் தருகிறேன். உனக்குக் கோபம் வரும்போதெல்லாம் அதில் நீரை ஊற்றி மூன்றுமுறை அருந்து. உன் கோபம் காணாமல் போய்விடும்" என்று கூறிவிட்டு, தான் வைத்திருந்த ஒரு குடுவையை அவனுக்குத் தந்தார்.
மன்னனும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டான். முனிவருக்குத் தகுந்த மரியாதைகள் செய்து விடை கொடுத்தான்.
மன்னனுக்குக் கோபம் ஏற்படும். உடனே தண்ணீரை மந்திரக் குடுவையில் ஊற்றி, 'என் கோபம் தணிய வேண்டும்' என்று சொல்லி மூன்றுமுறை அருந்துவான். இப்படி அவன் குடிக்கக் குடிக்க நாளடைவில் படிப்படியாகக் கோபம் குறைந்தது. சில மாதங்களில் கோபமே வராத அளவுக்குச் சாந்தமுடையவனாக அவன் மாறிப் போனான். தனது இந்த மாற்றத்திற்கு முனிவர் தந்த மந்திரக் குடுவையே காரணம் என்று சொல்லி அவரைத் தேடி அழைத்து வருமாறு தன் வீரர்களை அனுப்பினான்.
நாடெங்கும் சுற்றிய வீரர்கள் இறுதியில் ஒரு காட்டிலிருந்து முனிவரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
மன்னனும் அவரைக் கண்டு மகிழ்ந்து பாதம் பணிந்தான். தனது கோபம் நீக்கியமைக்காகவும், மந்திரக் குடுவையைத் தந்ததற்காகவும் அவருக்கு நன்றி கூறினான்.
அதைக் கேட்டு நகைத்த முனிவர், "மன்னா, அது மந்திரக் குடுவையல்ல. நான் அனுதினமும் பயன்படுத்திய சாதாரண தண்ணீர் சேகரிக்கும் குடுவைதான். அப்படி ஒரு நம்பிக்கை உன் மனதுள் எழுந்தால் உன் கோபம் குறைந்துவிடும், சினம் திசைமாறிப் போய்விடும் என்பதால் அதை 'மந்திரக் குடுவை' என்று சொன்னேன்" என்றார்.
உண்மைதானே, மனமாற்றம் நமக்குள்ளே நிகழ வேண்டும் என்பதை நாம் உணர்ந்தால் போதும் அல்லவா குழந்தைகளே?
சுப்புத் தாத்தா |