கயை
இந்துக்களாகப் பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது காசி யாத்திரை செல்வதை முக்கியமாகக் கருதுகிறார்கள். முதலில் பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, பின் வேணிதானம், கர்ம காரியங்கள் செய்த பின் காசி கங்கைக் கரையில் தீர்த்த ஸ்நானம், சிராத்தம், தானங்கள், கங்கா பூஜை, தம்பதி பூஜை பின் விஸ்வநாதர், விசாலாக்ஷி, அன்ன பூரணி தரிசனம் முடித்து, தம்பதியாக கயைக்குச் செல்லவேண்டும். அங்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து பிண்டம் போடுவது இந்துக்களின் முக்கிய கடமை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

'பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம்' எனச் சொல்லப்படுகிறது. அதாவது முதலில் பாவம் களைதல், பின் பாவம் அண்டா மல் தடுத்தல், பாவம் நீங்கி இறையோடு ஒன்றாதல் என்று இதற்குப் பொருள் கூறப்படுகிறது. அதன்படி திரிவேணி சங்கமத்தில் முடி துறந்து பாவங்களைக் களைய வேண்டும். பின் பாவங்கள் நம்மை அணுகாமல் இருக்க காசி சென்று கங்கையில் நீராடி, ஆலய தரிசனங்கள் செய்து, தண்டபாணியை தரிசித்து பின் கால பைரவர் தரிசனம் செய்ய அவர் காசிக்கயிறு கொண்டு காப்புக் கட்டு கிறார். இதுதான் தண்டம் போதிக்கும் தத்துவம். கயையில் முன்னோர்கள் முக்தி அடையப் பிண்டம் போடுவது விசேஷ மாகக் கருதப்படுகிறது. இதற்கு வழி வகுத்துத் தந்தவன் கயாசுரன்.

கயாசுரன் என்னும் அரக்கன் கோலகல பர்வதத்தில் வாசுதேவனை நோக்கித் தவம் செய்தான். வாசுதேவன் அவன்முன் தோன்ற, கயாசுரன், "என்னுடைய சரீரம் எல்லா தீர்த்தங்களைக் காட்டிலும் பவித்ரமானதாகச் செய்ய வேண்டும்" என்று வரம் கேட்க, இறைவனும் அவ்வாறே அருள் புரிகிறார். அதுமுதல் மக்கள் பலரும் கயாசுரனின் உடலைத் தொட்டு தங்கள் பாவங்களைக் போக்கிக் கொண்டனர். இதனால் எமதர்மராஜனின் பணி பாதிக்கப்பட்டது. பூமியில் சுமை அதிகரித்தது. எமன் முதலிய தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா விஷ்ணுவிடம் இதைத் தெரிவித்தார். உடனே விஷ்ணு, பிரம்மாவிடம் "நீ கயாசுரனிடம் சென்று உன் உடல் பவித்ரமானது. அதில் யக்ஞம் செய்ய வேண்டும் எனக் கேள்" என்றார். பிரம்மாவும் அதன்படி சென்று கயாசுரனி டம் கேட்க, அவன், ஒரு நல்ல காரியத் துக்கு என் உடல் பயன்படுமானால் அது எனக்கு மகிழ்ச்சியே என்று கூறி வடக்கே தலை வைத்து, தெற்கே கால்நீட்டித் தன் உடலைக் கிடத்தினான். பிரம்மா வேள்வியைத் தொடங்க, கயாவின் தலை அசங்கிற்று. பிரம்மா யமனை அழைத்து அசுரனின் தலையில் சிலை ஒன்றை வைக்கச் சொன்னார். அப்போதும் அவன் தலை அசைவது நிற்கவில்லை. தேவர் களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பின் விஷ்ணுவின் கதாதர அவதார மூர்த்தம் அங்கே சிலையாக வைக்கப்பட, வேழ முகத்தவனும், சூரியனும் அதில் ஏறி அமர்ந்தனர். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோர் வந்தனர். விஷ்ணு தன் கதையால் அவன் தலை அசைவதை நிறுத்தி, தனது பாதத்தால் அவனைப் பாதாள உலகுக்கு அனுப்பினார். அப் போது கயாசுரன் வரமாக "இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிராத்தம் செய்பவர் அனைவருக்கும் எந்தப் பாவமும் அண்டாமல் பிரம்மலோகம் சித்திக்க வேண்டும்" என விஷ்ணுவைப் பிரார்த்தித்தான். விஷ்ணுவும் ஆசிர்வதித் தார். இவ்வாறு கயாசுரன் தன் உடலை வேள்விக்கு தானமாக அளித்த இடம் தான் அவன் பெயரில் 'கயை' என்று அழைக்கப்படுகிறது.

பிரம்ம தேவர் வேள்வி முடிந்ததும் தானதர்மம் செய்யும்போது, அந்தணர் களைப் பிறரிடம் கை நீட்டாமல் வாழு மாறு கேட்டுக் கொண்டார். அந்தணர் களும் ஒப்புக் கொண்டனர். ஆனால் யமராஜன் நடத்திய வேள்வியில் கலந்து கொண்டு தானம் பெற்றனர். இதனால் கோபம் கொண்ட பிரம்ம தேவர், "எப்போதும் பொருளுக்கு ஆசைப்படு பவர்களாக இருப்பீர்களாக" என சாபம் அளித்தார். கயை அந்தணர்கள் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்ட, பிரம்ம தேவர் மனமிரங்கி, "கயைக்கு திதி செய்ய வருபவர்கள் உங்களையே பிராமணர் களாக வரிப்பார்கள். அக்ஷய வடத்தின் அடியில் நீங்கள் அவர்களிடம் தானம் பெற்று, திருப்தி கூறி முன்னோர்களைக் கரையேற்றும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு என்னையே பூஜித்த பலன் கிடைக்கும்" என்று வரம் அளித்தார்.

கயையில் வாழும் அந்தணர்களைத் தவிர வேறு யாரையும் அந்தணர்களாக சிராத்தத்திற்கு வரிப்பதில்லை. இத்தலத் தில் அந்தணர்களைத் திருப்திப்படுத்தி னால், பித்ருக்கள் திருப்தி அடைவார்கள் என்பது பகவானுடைய சங்கல்பமாகும். இங்கு சகல புனித தீர்த்தங்களும் உள்ளன. இங்கு வந்து நமது வாரிசுகள் யாராவது பிண்டம் போட்டு நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று முன் னோர்கள் கரையில் காத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஒருவன் கயைக் குத் திதி செய்யக் கிளம்பியதுமே பித்ருக்கள் ஒரு அடி சொர்க்கத்தை நோக்கி நகர்வார்கள் எனப் புராணம் சொல்கிறது.

ஸ்ரீராமன் சீதையுடன் கயையில் தசரதனுக்குத் திதி அளித்ததாக வரலாறு. முதலில் பல்குனி நதி, பின் விஷ்ணு பாதம், அதன் பின் அக்ஷய வடம் ஆகிய இடங்களில் பிண்டம் அளிக்க வேண் டும். பல்குணி நதியில் நீர் அதிகம் இருக்காது. மழைக்காலம் போன்ற சமயங்களில்தான் தண்ணீர் ஓடும். நதியின் எதிரே சீதா மாதா ஆலயம் உள்ளது. கயையில் மடங்கள், சத்திரங்கள் எல்லாப் பிரிவினருக்கும் ஏற்றபடி சிராத்த காரியங்கள் செய்து தர அங்குள்ள மேனேஜர் ஏற்பாடு செய்து தருகின்றார். அவர்களே பல்குனி நதி, விஷ்ணு பாதம், அக்ஷயவடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பிண்டம் போட உதவி செய்கின்றனர். சிராத்தம் செய்பவ ருக்கு கயைவாழ் அந்தணர்கள் பித்ருக்கள் சொர்க்கம் சேர்ந்ததாகச் சொல்லி திருப்தி செய்வார்கள். பின் அக்ஷயவடத்தில் ஆலமரத்தின் அடியில் ஒரு காய், ஒரு கனி, ஒரு இலை போன்றவற்றை இனி உட்கொள்வதில்லை எனச் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

கயையில் தங்கள் முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர் கள், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், செல்லப் பிராணிகள், மரம், செடி, கொடிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர் கள் என அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் பிண்டத்தால் அவர்கள் நற்கதி பெறுவார் கள் என்று கூறப்படுகிறது. வாரிசு இல்லாதவர்கள் தமக்கே 'ஆத்மபிண்டம்' போட்டு விஷ்ணு பாதத்தில் சேர்ப்பிக் கலாம். இரவு விஷ்ணு பாதத்தில் அபிஷேக சமயத்தில் பார்த்தால் விஷ்ணு பாதம் பதிந்திருப்பதை கண்குளிர தரிசனம் செய்யலாம்.

புத்தர் ஞானம் பெற்ற புத்தகயை, கயையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்துக்களுக்கு மட்டுமல்லாது பௌத்தர்களுக்கும் கயை ஒரு மகத்தான புனிதத் தலமாக விளங்குகிறது.

சீதா துரைராஜ்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com