அன்புள்ள சிநேகிதியே
என் கணவர் வழியில் உறவுக்கார மாமா ஒருவர் இருக்கிறார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. மாமி இறந்து மூன்று, நான்கு வருடம் ஆகிறது. பாங்கில் ஆபீசராக இருந்து ரிடயர் ஆனவர். சொந்த மாமா இல்லையென்றாலும் சின்ன வயதில் என் கணவர், மைத்துனர்கள் எல்லோருக்கும் பொங்கல், தீபாவளியின் போது உடைகள், பொருட்கள் வாங்கிக் கொடுப்பார். எல்லோரிடமும் பாசமாக இருப்பார். எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும் சுபாவம் உண்டு. அமெரிக்காவுக்கு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாரம், இரண்டு வாரம் என்று தங்குவார்கள் மாமாவும், மாமியும். மாமா கொஞ்சம் தொணதொண டைப்தான் என்றாலும் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்வேன். மாமி போனபிறகு கொஞ்சம் தனிமையாக உணர ஆரம்பித்திருக்கிறார். ஆகவே கொஞ்சம் அதிக நாள் இருக்க ஆரம்பித்து விட்டார். "நான் ஹோம்வர்க் சொல்லிக் கொடுக்கிறேன். நீ இந்தியாவிற்குப் போவதாகச் சொன்னாயே, நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஏதேனும் ஒரு சாக்குச் சொல்லி போன வருடம் முழுக்கத் தங்கிவிட்டுப் போனார். இப்போது மறுபடியும் திரும்ப வந்துவிட்டார். என் மாமனார், மாமியார் எல்லாம் மூன்று வருடத்திற்கு ஒருமுறைதான் வந்து போகிறார்கள். என்னுடைய அம்மா ஐந்து வருடத்துக்கு முன்பு வந்து தங்கிவிட்டுப் போனதுதான். மாமா தங்குவதைப் பற்றியோ, அவருக்கு சாப்பாடு போடுவதைப் பற்றியோ நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அவர் தினமும் எங்கள் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுகிறார். நிறைய தர்மசங்கடமான கேள்விகளை கேட்கிறார். மாமிக்கு நாகரிகம் தெரியும். தன் கணவரின் நடவடிக்கைகளில் எங்காவது வரம்பு மீறுவதாகத் தெரிந்தால் உடனே மாமாவுக்கு அன்புக் கட்டளை போட்டுவிடுவார். இப்போது அந்த கண்ட்ரோலும் இல்லை.
எங்கள் குழந்தைகள் டீன் ஏஜ் ஆகிவிட்டதால் நாங்களே அவர்கள் அறைக்குள் கதவைத் தட்டாமல் உள்ளே செல்வதில்லை. ஆனால் இந்த மாமா அவர்கள் பள்ளிக்கும், நாங்கள் வேலைக்கும் போயிருக்கும் போது எல்லாவற்றையும் ஆராய்கிறார். எங்களுக்குப் பூட்டி வைத்துப் பழக்கமில்லாததால் இந்த மாமா குடைவது தெரியாமலே இருந்தது. சமீபத்தில் என்னிடம், "உன் பெண்ணை கண்ட்ரோல் செய். மட்டமான புத்தகங்களைப் படிக்கிறாள்" என்று சொன்னார். எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு, தடுமாறி பதில் சொன்னார். அதேபோல கணினி Desktopல் ஏதாவது Documents வைத்திருந்தால் அதைத் திறந்து படிப்பது, வீட்டில் இருக்கும் பழைய கடிதங்களைப் பார்ப்பது போன்றவை தெரிய வந்ததால் மாமாவைக் கண்டுகொள்ள ஆரம்பித்தோம். ஒருமுறை வெளியே செல்லும்போது அறையைச் சாத்திவிட்டுப் போனோம். அப்படியும்கூடத் திறந்து எங்கெங்கு என்ன இருக்கிறது என்று பார்த்திருக்கிறார். ரொம்ப எரிச்சலாக இருக்கிறது.
இந்த மாமாவை எப்படி அவர் மனம் புண்படாமல் ஏரக்கட்டுவது என்று தெரியவில்லை. ஒரு பக்கம் பாவமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கோபமாக வருகிறது. நாங்கள் காட்டும் கரிசனத்தை அவர் எங்கள் மேல் காட்டுவதில்லை. என் கணவரின் பெயரைச் சொல்லி, "அவன்தான் என் பிள்ளை. என் வீட்டை அவன் பெயருக்குத்தான் எழுதி வைக்கப் போகிறேன்" என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். எங்களுக்கு அவரது எந்தக் காசும் வீடும் தேவையில்லை. அரசல் புரசலாகச் சொல்லிப் பார்த்தோம்; இங்கு இருப்பவர்களுக்கு privacy முக்கியம், வீடு முக்கியமல்ல என்பதை. அப்படியும் அவர் எதைப்பற்றியும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. சிலசமயம் அவருடைய நடவடிக்கையைப் பார்த்து நானும் என் கணவரும் சிரித்துக் கொள்கிறோம். எங்கேயாவது வெளியில் கிளம்ப வேண்டுமென்றால் எல்லோருக்கும் முன்னால் தன் கைப்பையையும், வாட்டர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்து விடுவார். சில சமயம் மிக மிக எரிச்சலாக வருகிறது. ப்ளீஸ்... ப்ளீஸ்.. ஏதேனும் ஆலோசனை கொடுங்கள்.
இப்படிக்கு ...................
அன்புள்ள சிநேகிதியே
அமெரிக்கக் கலாசாரத்தில் முன் சீட் உரிமை மனைவிக்குத்தான் முதலில் என்றில்லாமல் குடுகுடுவென்று உங்கள் மாமா ஏறி உட்கார்ந்து கொள்வதில் இருந்தும், மற்ற நடவடிக்கைகள் பற்றி நீங்கள் எழுதி இருப்பதை என் கற்பனையில் பார்க்கும்போதும் எனக்கும் சிரிப்பு வருகிறது. ஆனால் உங்கள் நிலைமையை நினைத்துப் பார்க்கும் போது முகமும் கொஞ்சம் சுளிக்கிறது.
1. அவரைப் போன்ற குணாதிசயம் படைத்தவர்கள் பாசம் உடையவர்களாக இருப்பார்கள். இப்படியாக அவர்களது குறைகளைச் சொன்னால் உள்ளுக்குள் சுருங்கி நத்தையாகச் சுருண்டு விடுவார்கள். 'சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்' என்று எழுத நான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கே குழப்பமாக இருக்கிறது. எந்த strategy வேலை செய்யும் என யோசிப்பது அவருடைய sensitivity levelஐப் பொருத்தது.
2. அவரை எப்போது திரும்பப் போகச் செய்வது என்பது உங்களுடைய தாக்குப் பிடிக்கும் தன்மையைப் பொருத்தது.
3. நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது உங்கள் கணவருக்கு ஹாஸ்ய உணர்வும், சகிப்புத் தன்மையும் கூடுதலாக இருக்கும் எனத் தெரிகிறது. அதனால் மாமா வந்து ஒரு மாதம் ஆகிறது; இன்னும் ஒரு மாதம் இருப்பார் என்றால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளலாம். அப்புறம் அடுத்த வருடம் பார்க்கலாம். அவருக்கும் வயதாகிக் கொண்டிருப்பதால் தானே தன் பயணத்தைக் குறைத்துக் கொள்வார்.
4. விருந்தினரிடம் எவ்வளவு மனம் புண்படாமல் இருக்க நம்மால் முடிகிறதோ அவ்வளவு நல்லது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் நம்முடைய அத்தனை உபசரிப்பும் சின்னச் சீறலில் மறைந்து போய்விடும். அந்தக் கசப்புணர்ச்சிதான் யாருக்கும் தங்கியிருக்கும். அதனால்தான் அவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது, இந்த வெளிப்படையான நடவடிக்கைக்கு.
5. ஹாஸ்ய உணர்வு இருப்பவர்களுக்குப் பிரியம் காண்பிக்க அக்கறையே வரும்.
6. Start thinking how to handle this mama. you will be amazed at your own strategy.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |