தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கிண்ணம் மைதா மாவு - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - பொரிக்க
செய்முறை: மாவு இரண்டையும் நெய் உப்பு சேர்த்து மிளகாய்ப் பொடியும் போட்டு கெட்டியாகப் பிசைந்து கொண்டு சாம்பார் கரண்டியைக் கவிழ்த்து போட்டு நிறைய எண்ணெய் தடவி மாவை சிறு அப்பளம் போல இட்டு கரண்டியில் தடவி இடைவெளி இல்லாமல் தொப்பி போல் செய்து எண்ணெய் காய விட்டுக் கரண்டியை அதில் வைத்து பாதி பொரியும் போது ஒரு கம்பி அல்லது கத்தியால் தள்ளினால் கிண்ணம் போல் கழன்று விடும். உள்ளும் மேலும் பொன்னிறமாகப் பொரித்து தட்டுக்களில் வைத்துக் கொள்ளவும்.
நிரப்ப தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 6 வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 6 மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி பட்டாணி மற்றும் தேவைக்கேற்ப காய்கறிகள் மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி இஞ்சி - சிறுதுண்டு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க
செய்முறை: காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு உருளைக்கிழங்கை வேகவிட்டு உரித்து உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் போட்டு வதங்கியதும் காய்கறிகள், பட்டாணி, உருளைக்கிழங்கும் போட்டு மஞ்சள்பொடி இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள் உப்பு எல்லாம் போட்டுப் பொரியல் போலச் செய்து கொண்டு கிண்ணங்களில் நிரப்பி மேலாக முந்திரிப் பருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை பொடியாய் நறுக்கி அலங்கரித்துப் பரிமாறவும். சாப்பிடும் சமயம் நிரப்பிச் சாப்பிட்டால் மொறுமொறுப்பாக இருக்கும். பார்ட்டிகளுக்கு வித்தியாசமாக இதைச் செய்யலாம். உப்பு, காரம் தேவைக்கேற்ப குறைத்தோ, கூடவோ போட்டுக் கொள்ளவும். கிண்ணம் கிண்ணமாக இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேங்காய்ச் சட்னியும் வைத்துக் கொண்டால், பல கிண்ணங்கள் உள்ளே போகும்!
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |