கிண்ணம் தின்னலாம்!
இனிப்புக் கிண்ணம்

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணெய் : பொரிப்பதற்கு

செய்முறை:
மாவு இரண்டையும் துளி சர்க்கரை, நெய், உப்புப் போட்டு நன்றாகப் பிசைந்து வைக்கவும். சிறிது மாவை எடுத்து சாம்பார் கரண்டியைக் கவிழ்த்துப் போட்டு நிறைய எண்ணெய் தடவி, சிறு அப்பளம் போல இட்டு மாவைக் கரண்டியில் இடைவெளி இல்லாமல் தொப்பி போல் தடவி எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கரண்டியை வைக்கவும். பாதி பொரிந்தவுடன் சிறு கம்பி அல்லது கத்தியால் பிரித்தால் கிண்ணம் போலத் தனியாக வரும். உள்ளும் மேலும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துத் தட்டுக்களில் வைக்கவும். இது போல எல்லா மாவையும் பொரித்து வைத்துக் கொள்ளவும்.

நிரப்ப தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பொட்டுக் கடலை - 1/2 கிண்ணம்
வேர்க்கடலை - 1/2 கிண்ணம்
முந்திரிப் பருப்பு - 1/2 கிண்ணம்
ஏலக்காய் - 8
நெய் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 2 கிண்ணம்
கசகசா - 2 தேக்கரண்டி

செய்முறை:
தேங்காய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, கசகசா எல்லாவற்றையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஏலக்காயுடன் சர்க்கரையும் சேர்த்து ஒன்றிரண்டாக ரொம்ப நைசாக இல்லாமல் பொடித்துக் கொண்டு நெய்யைக் காய விட்டு அதில் கொட்டிக் கிளறி வைத்துக் கொண்டு செய்து வைத்துள்ள கிண்ணங்களில் நிரப்பி மேலாக முந்திரி வறுத்து அலங்கரித்துப் பரிமாறவும். சாப்பிடும்போது ஸ்டஃப் செய்தால் நல்லது. நமுக்காமல் இருக்கும். இது ஒரு வித்தியாசமான தின்பண்டம். பார்ட்டிகளுக்குச் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com