இசைக்கவி ரமணன்
கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். ஆன்மீக சாதகர். 28 முறை இமாலயப் பயணம், அதில் 18 முறை அங்குள்ள ஜாகேஸ்வருக்குப் பயணம் செய்தவர். 'கோடுகள் இல்லா உலகம்', 'யோகக் குறள்', 'ரமணனைக் கேளுங்கள்', 'வண்டி போய்க் கொண்டிருக்கிறது', 'திருமணம் என்பது' போன்ற நூல்களின் ஆசிரியர். இவற்றில் சில இசைக் குறுந்தகடுகளாக வெளியாகி உள்ளன. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்; விரைவில் அது வெளியாக இருக்கிறது. திருக்குறள் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று சென்னைக்கும் பிற ஊர்களுக்கும் அலைந்து கொண்டிருக்கும் அவரை ஒரு முன்மதியப் பொழுதில் சந்தித்தோம். அதிலிருந்து...

*****


கே: உங்கள் இளமைப் பருவத்திலிருந்து தொடங்குவோமா?...
ப: நான் பிறந்தது திருநெல்வேலியில்.வீட்டிலிருந்து நடந்தால் மூன்று நிமிடங்களில் தாமிரபரணி. கோயில் யானை கூடவே அரை நிஜார் அவிழ அவிழத் தாமிரபரணிக்கு நடந்து சென்றது நினைவிருக்கிறது. பின் சென்னைக்கு வந்தோம். அப்பா லயோலாவில் விரிவுரையாளர். பின் இந்து நாளிதழில் சேர்ந்தார். பள்ளிப்படிப்பு ராமகிருஷ்ணாவில். கல்லூரிப் படிப்பு ஏ.எம்.ஜெயின் கல்லூரியில். நான் பி.காம் பாஸ் செய்தவன் என்பதை இன்னமும் கூட என் மனைவி நம்பவில்லை. (சிரிக்கிறார்). சிலகாலம் வேலையில்லாமல் இருந்தேன். 1977ல் ஹிந்துவில் சேல்ஸ் ரெப் ஆகச் சேர்ந்தேன். சென்னை, மதுரை, பெங்களூர், விசாகப்பட்டினம் என்று பணியாற்றினேன். ரீஜனல் மானேஜராக உயர்ந்தேன். ஊர் சுற்றிப் பார்க்க, படிக்க, தியானம் செய்ய, அமைதியாக வாழ்வைக் கழிக்க விருப்பம் இருந்தது. ஆனால் வேலை அதற்குத் தடையாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முடியாது. ஆகவே 2005ல் ஹிந்து வேலையிலிருந்து விலகினேன். எஞ்சிய ஓய்வுக் காலத்தை மனைவியுடன் ஆன்மீகம், தியானம், சத்சங்கம் என்று கழிக்க விருப்பம். எனக்கு இரண்டு மகன்கள். இரட்டையர். இருவரும் டெல்லியில் சி.என்.என்.னில் வேலை பார்த்தனர். திருமணம் ஆகிவிட்டது. மருமகள்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டானர். வருவாய் இழப்பு இருந்தாலும் பரவாயில்லை என எல்லோருமே சென்னைக்கு வந்தோம். எங்களுக்குப் பெண் குழந்தைகள் இல்லாத குறை மருமகள்களால் தீர்ந்தது. அம்மா, மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரன் என்று கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். பராசக்தியின் விருப்பத்தின்படி வாழ்க்கை நிறைவாகத் தொடர்கிறது.


கே: இலக்கிய விதை விழுந்தது எப்போது, எப்படி?
ப: எனது அப்பா சம்ஸ்கிருதத்தில் ஆசுகவி. அதே ஆற்றல் அவருக்கு ஆங்கிலத்திலும்! அவர் தாய்மொழியாகப் படிக்காத தமிழிலும் இருந்தது. இன்றைக்கு அதை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்றால் கவிதை என்பது திறமையல்ல; அது ஒரு அருள், வரம் என்று. ஒரு சாதாரண மனிதன் தனது அடுத்த மூச்சுக்கு உத்தரவாதமில்லை என்பதை உணராமல் இருக்கிறான். நான் ஒரு கவிஞனாக அடுத்த வார்த்தைக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன். என் தந்தை எனக்கு ஒரு விதை என்றால் நான் ராமகிருஷ்ணாவில் படித்த போது இருந்த தமிழாசிரியர் மா.வி. இராகவன் மற்றொரு விதை. அவர் கம்பனையும் இராமனையும் சொன்ன விதமும் கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த விதமும்தான் அந்த வயதில் - அப்போது எங்கள் அறிவை மீறியவையாக இருந்தும் கூட - அவற்றின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. நான் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு நபர் என் நண்பர் ஹரி கிருஷ்ணன். ('தென்றல்' இதழில் 'ஹரிமொழி' தொடரை எழுதிவருபவர்). அவரும் நானும் ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்புகளில் படித்தோம். அவர் பல விதங்களில் எனக்கு முன்னோடி. நான் 9ம் வகுப்பு படிக்கும் காலத்தில்தான் அவரைச் சந்தித்தேன். அவர் அப்போதே ஆறுமுகன் அந்தாதி, கௌமார சதகம் என்றெல்லாம் எழுதி விட்டிருந்தார். மிகுந்த புத்திசாலி. ஆனால் மிகவும் கூச்ச சுபாவி. தினமும் என் வீட்டுக்கு வந்து யாப்பு சொல்லிக் கொடுப்பார். எனக்கு சொல்லிக் கொடுத்து விட்டு, இரவில் விளக்கில்லாத அந்தப் பாதையில் திரும்பிப் போவார். கல்லூரியிலும் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். அவர் எகனாமிக்ஸ், நான் காமர்ஸ். அந்த இருபது வயதில் அருணகிரிநாதரை அப்படியே ஒப்பிப்பார். மிக அழகாகத் தாகூரை ஆங்கிலத்திலிருந்து ட்ரான்ஸ்லேட் செய்வார். கலீல் ஜிப்ரான், வால்ட் விட்மன் என்று அவர் படிக்காததில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டுமே அவருக்கு மிகச் சரளமாக வந்தது. நாங்கள் அவரைப் 'புலவன்' என்று கூப்பிடுவோம்.

கல்லூரியில் தமிழ் மன்றம், இலக்கியக் கூட்டம் எதிலும் அவன் முன் நிற்க மாட்டார். என்னை முன்னுக்கு நிறுத்துவார். என்னை யாராவது பாராட்டினால் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம். ஒரு மனிதன் எப்படி அடக்கமாக இருக்க வேண்டும், நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் ஒரு மிகப் பெரிய ஆதர்சம். அவர் என்னைவிடக் கற்ற அறிஞன். இலக்கண, இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தலைசிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர். அன்றைக்கும் அவர் அந்தப் போக்கிலேயே இருந்தார். "கவிதையைக் காட்டிலும் அது அழைத்துச் செல்கின்ற இடம் முக்கியம்" என்று நான் சொல்வேன். அந்த முக்கியத்துவத்தைக் காட்டிக் கொடுத்தது ஹரி கிருஷ்ணன் போன்ற நண்பர்கள்தாம். எங்கள் இருவருக்கும் பொதுவான இன்ஸ்பிரேஷனாக இருந்தது பாரதி. பாரதி எங்களுக்குள் புகுந்தான். அது புதிய பாதையைக் காட்டியது. எனது அம்மா நன்கு பாடுவார்கள். எனது சகோதரிகளும் நன்கு பாடுவார்கள். எனக்கும் பாட்டு வந்தது; கவிதையும் வந்தது. அதாவது ஒரு கவிதையை எழுதி எனக்கு மெட்டுப் போடத் தெரியாது. வரும்போதே இரண்டும் சேர்ந்தே வரும்.

காற்றில் பறந்த கவிதைகள் கோடி
கனவில் உதித்துக் காலை எழுந்ததும்
கண்கள் பனிக்கச் செய்தவை கோடி

என்று நான் சொல்வேன். கண்ணதாசன் மற்றொரு இன்ஸ்பிரேஷன். மனித உணர்ச்சிகளை எளிமையான வார்த்தைகளில் மிக ஆழமாக அவன் சொன்னது மிக வியப்பாக இருந்தது. அடுத்த இன்ஸ்பிரேஷன் கொத்தமங்கலம் சுப்பு. பாரதியார் ஆசைப்பட்டதை சுப்பு பூர்த்தி செய்தார் என்று நான் கருதுகிறேன். "தீப்பெட்டியை விட மலிவாக என்னுடைய கவிதைகள் பரவ வேண்டும்; என்னுடைய பாட்டின் மொழி சாதாரண பாமர மக்கள் பாடுகின்ற மெட்டில் இருக்க வேண்டும்" என்று பாரதி ஆசைப்பட்டான். அதைக் கொத்தமங்கலம் சுப்பு நிறைவேற்றினார். பாரதிக்குப் பின் வந்த கவிஞர்களில் அவனது பாதிப்பே இல்லாமல் தனியாக நின்ற ஒரு அபூர்வக் கவிஞர் சுப்பு. இவர்களெல்லாம் தான் இலக்கியத்தை நோக்கிய எனது பயணத்திற்கு விதைகள்.

கே: பாரதி கலைக்கழகத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து...
ப: நங்கநல்லூரில் நான் வசித்தபோது ஹரி கிருஷ்ணன், பா. வீரராகவன், வீரராகவனின் தம்பி கிருஷ்ணன், குடந்தை கீதப்ரியன் (வர்த்தமானன்) கனடாவில் தற்போது இருக்கும் ஆர்.எஸ். மணி, பாபு, நங்கை சிவன், சுந்தர்ராமன் என எல்லோரும் 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினோம். எங்கள் கவிதைகளுக்கான மேடை அது. மாதம் ஒரு கவியரங்கம். தமிழாசிரியர் வேணுகோபால் (நாகநந்தி) அதில் கலந்து கொள்வார். அவர் மிகக் கடுமையான விமர்சகர். பேச்சாளர். சங்க இலக்கியத்திலிருந்து வள்ளுவன், பாரதி, கம்பன் என்று இலக்கியத்தில் தோய்ந்தவர். எங்களது கவிதைகளை எல்லாம் அவர் எப்படிச் சகித்துக் கொண்டார் என்று இன்றைக்குத் தோன்றுகிறது. சுராஜ் அவர்கள் மூலம் பாரதி கலைக்கழகத் தொடர்பு ஏற்பட்டது. ஒரு கவிஞனே அடுத்த கவிஞனின் கவிதையைப் பொறுமையாக இருந்து கேட்காத நிலையில் சுராஜ் எல்லாக் கவிஞர்களது கவிதைகளையும் பொறுமையாக இருந்து கேட்பார். ஊக்கப்படுத்துவார். பாராட்டுவார். அதில் கி.வா.ஜ. மாதிரி சான்றோர்கள் எல்லாம் வந்து பேசியிருக்கிறார்கள்.

ஆனால் எனது ஆன்மீக நாட்டம் அதிகரிக்க அதிகரிக்க இவற்றின் மீதான ஈர்ப்பு குறைந்தது. கவியரங்கங்கள், கைதட்டல்கள், மேடை, புகழ் இவற்றை மனம் விரும்பவில்லை. அதே சமயம் பாட்டுக்கும் கவிதைக்கும் குறைவில்லை. பெசண்ட் நகர் பீச்சில் அமர்ந்து பாடும்போது சுண்டல் விற்பவர் ஆவலுடன் கேட்டுவிட்டு சுண்டலையும் முறுக்கையும் அன்போடு கொடுத்த அனுபவம் உண்டு. அதேபோல அடையாறு கார்னரில் கடை வைத்திருக்கும் பாயிடம் வெற்றிலை, பாக்கு வாங்கச் சென்றால் (அப்போது அந்தப் பழக்கம் இருந்தது) அவர் பாடச் சொல்லிக்கேட்டு விட்டுத்தான் வெற்றிலை, சீவல் கொடுப்பார்.

வாரணமாயிரம் கேட்டதில்லை
புதுவண்ணப் பட்டாடைகள் தேவையில்லை
தாரக மந்திரம் கேட்டது போல் - தம்பி
தலையசைப்பது போதுமடா
ஊரறியப் புகழ் தேவையில்லை
குயில் ஒண்டுக் குடித்தனம் ஆற்றுதில்லை
வேரைப் பிடித்ததுபோலத் தம்பி குரல்
விக்கித் திணறுதல் போதுமடா


என்றெல்லாம் பல கவிதைகள் எழுதியிருக்கிறேன். விசாகப்பட்டினம் சென்ற பிறகு இலக்கியத்துடனான தொடர்பு குறைந்தது. இலக்கியத்தை விட ஆன்மீகத் தேடலே அப்போது எனக்கு மிகுதியாக இருந்தது.

கே: அந்த ஆன்மீகத் தேடல் அனுபவங்களை விவரியுங்களேன்....
ப: அருள்தான் கவிதைக்குக் காரணம் என்று சொன்னேன். அந்த அருளோடு, பாரதியோடு, பராசக்தியும் என்னுள் புகுந்ததால்; நாத்திகம் பேசிய கண்ணதாசன் ஆத்திகனாகித் தனது கருத்து மாற்றங்களை அப்பட்டமாய் வடித்த கவிதைகளைக் கேட்டதால்; கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கடவுள் பற்றிய கருத்துக்களால் எனக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. ஞானியர், யோகிகள், மகான்கள் வாழ்க்கையைப் படிக்க விருப்பமானது. தத்துவம் புரிந்ததோ இல்லையோ அவர்கள் அடைந்த அந்த நிலை இனம்புரியாத தாகத்தை உண்டாக்கியது. அவர்கள் அடைந்த நிலை நம்மை பிரமிக்க வைக்கும். நாம் இருக்கும் நிலை நம்மை விக்கித்து நிற்க வைக்கும். அந்த இடைவெளி நம்மை மிகவும் ஏங்க வைக்கும். அதனால் இனம் புரியாத சோகமும் கூடவே இருக்கும். அந்தச் சோகத்தின் காரணமாக தேடல் மேலும் அதிகரிக்க, தேடித் தேடி எனது கர்ம வினையின் காரணமாக முற்றிலும் தவறான முகவரிகளைத் தவறாமல் சென்று சேர்ந்தேன். தவறான கதவுகளைத் தட்டி தாக்கப்பட்டு பலமுறை வீழ்ந்திருக்கிறேன். ஏமாற்றப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அந்தத் தேடுதலும் பயணமும் நிற்கவில்லை. ஆனால் இந்த ஏமாற்றத்திற்குப் பிறரைக் குறை சொல்ல முடியாது.

செய்த வினை செப்புவதால் தீர்ந்திடுமோ?
எய்த கைக்கு நானே இலக்கு.

இறுதியில் விசாகப்பட்டினம் அருகே உள்ள பீமினிப் பட்டினத்தில் எனது குருநாதர் சத்குரு சிவானந்த மூர்த்தியைக் கண்டடைந்தேன். அதன்பின் என் வாழ்க்கையின் போக்கே மாறிப்போனது.

கே: ரமணன், 'இசைக்கவி ரமணன்' ஆனது எப்படி?
ப: 'இசைக்கவி' என்ற பட்டத்தை எந்த அமைப்பும் கொடுக்கவில்லை. நானாகவும் போட்டுக் கொள்ளவில்லை. மகேஷ் கிருஷ்ணன் என்ற ஒரு நண்பர். எனக்கு மிக இளையவர். தற்போது அவர் ஹூஸ்டனில் இருக்கிறார். அவர் என் கவிதைகளுக்கு ரசிகர். "ஏன் சார், இப்படி எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறீர்கள்? இது ஊரெல்லாம் கேட்க வேண்டும். எல்லோரும் ரசிக்க வேண்டும்" என்று அடிக்கடி சொல்வார். கவிதையோ, பாடலோ எழுதுவதோடு என் வேலை முடிந்து விடுகிறது. அதை பாபுலரைஸ் செய்ய வேண்டியது என் வேலை அல்ல. அது காலச்சுழற்சியில் நிலைபெற வேண்டும் என்றால் நிற்கும். இல்லாவிட்டால் இல்லை என்பதுதான் என் எண்ணம். அதனால் நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. கிண்டியில் படித்து முடித்துவிட்டு அவர் அமெரிக்கா கிளம்புமுன் ஒரு லெக்சருக்கு ஏற்பாடு செய்தார். நான் அதில் பேசினேன். அவர் கொடுத்த நினைவுக் கேடயத்தில் 'இசைக்கவி' என்று போட்டிருந்தார்.

பின்னர் ஹிந்துவிலிருந்து விலகி சென்னைக்குக் குடிவந்தபோது ஒரு சிறு குழப்பம். இங்கே நிறைய ரமணன்கள். கவிஞர் மா.கி. ரமணன், கல்கியில் எழுதும் மாலனின் அண்ணன் ரமணன், பா.சு.ரமணன், ஹிந்து ரமணன் என்று நிறையப் பேர். சமயத்தில் அவர்களது படைப்பிற்காக நான் பாராட்டப்பட்டேன். கல்கியில் எழுதும் ரமணன் நான் என்று சிலர் கருத, ரமணாச்ரமம் சென்றாலோ அங்குள்ளவர்கள் என்னை ஹிந்து ரமணன் என்று நினைத்து அழைக்க இப்படிக் குழப்பங்கள். எப்படி என்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்வது என்று நினைத்த போதுதான் மகேஷ் கொடுத்த மெமன்டோ ஞாபகம் வந்தது. ரமணன், "இசைக்கவி" ரமணன் ஆனான்.

கே: ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளரானது குறித்து?
ப: 2005ல் சென்னைக்கு வந்தபின் நண்பர்களின் விருப்பத்தின் பேரில் சில கவிதை நூல்களை வெளியிட்டேன். மதுரை சின்மயா மிஷனில் சுவாமி சிவயோகானந்தா என்பவர் இருக்கிறார். அவர் பூர்வாசிரமத்தில் இருந்தே என் நண்பர். கீதையிலும் பாரதத்திலும் கரைகண்டவர். அவர் முயற்சியால் மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சில சிறு நூல்கள் வெளியிடப் பெற்றன. பின் 'குருவே இறைவன்', 'ரமண முரசு' போன்ற தலைப்புகளில் என்னைப் பேச வைத்தார். ஆன்மீகச் சொற்பொழிவு எனக்குப் புதிது. ஆனால் இது பராசக்தியின் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆகவே இதை வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் செய்ய எண்ணினேன். செய்து வருகிறேன்.

ஒருமுறை கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என் பேச்சால் கவரப்பட்டு மேடையேற்றி விட்டார்கள். கோவையில் பல சொற்பொழிவுகள் செய்தேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, "திருக்குறள் பற்றிப் பேசுகிறீர்களா?" என்றார். அப்படி ஆரம்பித்ததுதான் திருக்குறள் சொற்பொழிவு வரிசை. வாரம் ஒருமுறை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். இதற்காக நிறையப் படித்து வருகிறேன். சந்தேகம் வந்தால் உதவுவதற்கு இருக்கவே இருக்கிறான் நண்பன் ஹரி கிருஷ்ணன். என் குருவின் காலடியில் எத்தனையோ வருடங்கள் இருந்திருக்கிறேன். எத்தனையோ தத்துவங்களை, வாழ்க்கை நெறிமுறைகளை அவரிடமிருந்து கேட்டிருக்கிறேன். அவற்றையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். எல்லாம் தெய்வ சித்தம்.

கே: பொதிகையில் ஒளிபரப்பாகும் 'கொஞ்சம் கவிதை; கொஞ்சம் தேநீர்' நிகழ்ச்சி பற்றி...
ப: அதற்கு முழுக் காரணம் மரபின் மைந்தன் முத்தையாதான். பொதிகையில் ஒரு கவியரங்கத்தில் நான் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபின், தயாரிப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் முத்தையா. அங்கே ஆண்டாளின் கணவர் பால. இரமணியும் இருந்தார். முத்தையா அவரிடம், "ரமணன் பாடி நீங்கள் கேட்டதில்லையே. கேளுங்கள்" என்று கூறி என்னைப் பாடச் சொன்னார். நானும் பாடினேன். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு நின்று விட்டார் பால. இரமணி. ஆண்டாளின் கண்களிலோ கண்ணீர். "உங்களை வைத்தே ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என இருக்கிறேன்" என்றார் அப்போதே. அப்படி ஆரம்பித்ததுதான் 'கொஞ்சம் கவிதை; கொஞ்சம் தேநீர்' நிகழ்ச்சி. பின்னர், ஆண்டாள் பிரியதர்ஷினி கோவைக்கு மாற்றலாகிச் சென்ற பின்னரும் பாஷா அவர்களின் உறுதுணையில் பல கவிஞர்கள், பல பரிமாணங்கள் என்று அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நானும் நிலைய வித்வான் மாதிரி அதில் இன்றளவும் கலந்து கொண்டு வருகிறேன். ஆனால் அதற்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை சேலம் ரயில் நிலையத்தில் இரவு 11.00 மணிக்கு ஆர்.எம்.எஸ். தபால் சேகரிக்கும் ஒருவர் வந்து, "சார், உங்கள் நிகழ்ச்சி பிரமாதம். நான் தவறாமல் பார்ப்பதுடன், என் பையன்களையும் பார்க்கச் சொல்கிறேன். இது மாதிரி நல்ல தமிழ் கேட்டு நாளாயிற்று" என்று சொன்னார். மற்றொரு முறை பொள்ளாச்சியில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது நான்கு நண்பர்கள் என்னைச் சந்தித்துப் பாராட்டினர்.

கே: உங்களது ஆன்மீக அனுபவங்கள் குறித்து...
ப: நான் பத்ரிநாத், கேதார்நாத், இமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம், லடாக், ஜாகேஸ்வர் போன்ற இடங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். கைலாச யாத்திரை, இமாசல யாத்திரை சென்றிருக்கிறேன். மெய்சிலிர்க்கும் பல அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எது எப்போதும் நம்மோடு தொடர்ந்து இருக்குமோ, நமக்குத் துணை செய்யுமோ, அறத்தின் பாதையை விட்டு சற்றும் பிறழா வண்ணம் நமக்குக் காவலாக இருக்குமோ அதைத்தான் அனுபவம் என்பேன் நான். அப்படி ஒரு அனுபவம் கைலாசத்தில் வாய்த்தது. புகைப்படம் எடுப்பதற்காக 18600 அடி உயரம் உள்ள மலைமீது நின்றபோது ஏற்பட்டது. 2004ம் வருடம் மே 7 அல்லது 8 என நினைக்கிறேன். நான் ஒன்றுமே இல்லை என்பதை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன். அது ஒரு realization. எனது அறியாமையின் விஸ்வரூபத்தை முழுக்க முழுக்க அங்கே கண்டேன். ஏன் அதை அனுபவமாகச் சொல்கிறேன் என்றால் ஏழு வருடமாக அது தொடர்ந்து இருக்கிறது. மெல்ல மெல்லப் பெருகி வரும் அமைதி, அந்த அமைதியின் ஆனந்தமான வெளிப்பாடு, இவற்றை நான் உணர்கிறேன். ஆன்மீக முன்னேற்றத்திற்கான சான்று என்ன என்று என்னைக் கேட்டால் ஒன்று அமைதி; அந்த அமைதியால் விளையும் ஆனந்தம். மற்றது மனிதப் பண்புகள் வளர்தல். பொய், துவேஷம், கோபம், குரோதம் போன்றவை அற்று இருத்தல். மற்றொரு பக்கம் நிறைவு.

கே: உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?
ப: ஹரி கிருஷ்ணன் பற்றி முன்னமேயே சொல்லி இருக்கிறேன். அதுபோல சுப்பு, வ.வே.சு., வானவில் பண்பாட்டு மையத்தை நடத்தி வரும் ரவி ஆகியோரைச் சொல்ல வேண்டும். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகட்டும், கிருஷ்ணன் ஆகட்டும். என்னைத் தமது தம்பி மாதிரிதான் நினைக்கின்றனர். அடுத்து என் மனைவி. அடிப்படை ரசனைகளில் உணவில் ஆரம்பித்து எங்களுக்குள் பல வேற்றுமைகள் உண்டு. ஆனால் கணவன்-மனைவி என்ற பந்தத்தில் நாங்கள் இணைந்தே ஒத்த ரசனை உடையவர்களாக இருக்கிறோம். எங்களுடையது மிகவும் சந்தோஷமான தாம்பத்யம்.

கே: எதிர்காலத் திட்டங்கள்...
ப: எதிர்காலத் திட்டங்கள் என்று ஏதுமில்லை. எனக்கு உலகத்துடன் சண்டை கிடையாது. யார்மேலும் எதன்மேலும் விரோதம் கிடையாது. எனக்கிருக்கும் வருத்தம் என்னவென்றால் உலகத்தின் வறுமைதான். அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம் என்று தோன்றுகிறது. இவ்வளவு வளர்ந்தும் வறுமையும் வளர்ந்துதானே இருக்கிறது. பண்பாடு, கலாசாரம் சீரழிந்து விட்டது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். 130 மில்லியன் மக்களில் பலருக்கு ஒருவேளை உண்ணச் சோறு இல்லை என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இதில் சக மனிதனாக எனது பங்கும் இருக்கிறது என்ற குற்ற உணர்வும் இருக்கிறது. மேலும் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆன்மீகத்தில் என்றாவது இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு. குருநாதரும் அதற்கு உறுதியளித்திருக்கிறார். மொத்தத்தில் எனது வாழ்க்கை முடிந்து போய்விட்டது. ஆனால் வாழுதல் தொடர்கிறது.

தயங்காமல் கம்பீரமான குரலில் பாட்டும் கவிதையுமாக தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார் இசைக்கவி. அவரது தெளிவும் அடக்கமும் நம்மையும் ஆட்கொள்ள, மாறாத பிரமிப்புடன் நன்றி கூறி விடை பெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


என் தந்தை
எனது தந்தை த.வே. அனந்தராம சேஷன் எம்.ஏ. (ஆனர்ஸ்), எகனாமிக்ஸில் கோல்ட் மெடலிஸ்ட். ஹிந்துப் பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தவர். கிட்டத்தட்ட தினமும் எடிடோரியல் எழுதியிருக்கிறார். கல்வி மற்றும் புத்தக விமர்சனம் பக்கங்களுக்குப் பொறுப்பேற்று இருந்தார். 27 சுப்ரபாதங்கள் எழுதியவர். ஹூஸ்டன், சிட்னி உட்பட 22 ஆலயங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்தவர். கன்யாகுமரி பகவதி அவருக்கு பிரத்யட்ச தெய்வம். பாலா திரிபுரசுந்தரி மந்திரத்தில் சித்தி பெற்றவர். குருவாயூரப்பன், விஷ்ணு பக்தர். சிறந்த ஜோதிடர். உபாசனை சக்தியால் ஜாதகம் இல்லாமலேயே பலன் சொல்லுவார். அதனால் அவரைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். 'தசமஹா வித்யா'வை தமிழில் 'தேவியும் மனிதனும்' என்ற பெயரிலும் சுப்ரமண்ய சஹஸ்ரநாமத்தை 'அழகு முருகனின் ஆயிரம் பெயர்கள்' என்ற தலைப்பிலும் எழுதியிருக்கிறார். 'சிவ சஹஸ்ரநாம பாஷ்யம்' எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 750 நாமங்கள்வரை எழுதியிருந்தபோது உடல் நலமில்லாமல் போய்விட்டது. மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு மீதி 250ஐ எழுதி என்னிடம் கொடுத்தார். இதை அவரது மறைவிற்குப் பின் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டது. எதைக் கேட்டாலும் அவரிடமிருந்து விளக்கம் கிடைக்கும். குறிப்பாக சாஸ்திரங்களில் கூறியுள்ள விஷயங்கள், அவற்றின் உள்ளர்த்தங்கள், முறைகள் போன்றவற்றை நன்றாக விளக்குவார்.


இசைக்கவி ரமணன்

*****


இராஜராஜன் 1000
திருமதி பத்மா சுப்ரமணியம் எனக்கு 35 வருடப் பழக்கம். நான் அவர்களை 'பத்து அக்கா' என்று அழைப்பேன். நெருங்கிய குடும்ப நண்பர். நான் சென்னைக்கு வந்த பின் ஒருநாள் என்னை அழைத்து, "நான் இராஜராஜ சோழன் ஆயிரமாம் ஆண்டு விழாவில் 1000 நடனக் கலைஞர்களை வைத்துத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு நிகழ்ச்சி நடத்த இருக்கிறேன். நீதான் நிகழ்ச்சித் தொகுப்பாளர்" என்றார்.

என்னுடைய அறிமுகப் பேச்சு 5-6 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். எனக்கு இடப்புறத்தில் தொலைவில் முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.களுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. பொதிகையில் 7.02க்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தார்கள். திடீரென கலெக்டர் வந்து 6.30க்கே நிகழ்ச்சியை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டார். நான் நடன நிகழ்ச்சியைப் பற்றிப் பேசவா என்று கேட்டேன். இல்லை வி.ஐ.பி.க்கள் வந்த பிறகுதான் அதைத் துவங்க வேண்டும் என்றார்கள். என்ன செய்யலாம் என்று நான் கேட்கும்போதே கேமராவை முடுக்கிவிட்டார்கள். அக்காவோ, "நீ பேசு" என்று சொல்லிவிட்டார். நான் திடீரென்று பேச எதுவும் தயாரிக்கவில்லை. மனதுக்குள் வந்த கவிதைகளை எல்லாம் சொல்லி, இராஜராஜனின் பெருமைகளைப் பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 156 நாடுகளில் அதைப் பார்த்தார்களாம். நிறையப் புகழ் எனக்குக் கிடைத்தது.

இதைக் காணொளியில் பார்க்க:இசைக்கவி ரமணன்

© TamilOnline.com