ஜீ.முருகன்
சிற்றிதழ் சார்ந்து இயங்கி வரும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஜீ. முருகன். இவர், 1967ல் திருவண்ணாமலை அருகே உள்ள கொட்டாவூரில், கோவிந்தசாமி-கமலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். செங்கத்தில் பள்ளிக்கல்வி. திருக்கழுக்குன்றத்தில் பொறியியல் (டிப்ளமா) பயின்றார். பதின்பருவத்தில் இவர் படித்த ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன், லா.சா.ராமாமிர்தம் போன்றோரது நூல்கள் வாசிப்பார்வத்தைத் தூண்டின என்றாலும் அப்துல் ரகுமான், பாலகுமாரன், சுஜாதா என அக்காலத்தில் புகழ் பெற்றவர்களின் படைப்புகள் இவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' தொடங்கி 'பல்லக்குத் தூக்கிகள்', 'பிரசாதம்', 'நடுநிசி நாய்கள்', 'பள்ளம்', 'ஒரு புளியமரத்தின் கதை' போன்றவை இவருக்குள் ஊற்றுக்கண்களைத் திறந்தன. 'நிகழ்', 'கனவு', 'கிரணம்' போன்ற சிறு பத்திரிகைகளின் அறிமுகம் ஏற்பட்டது. கி.பழனிச்சாமி என்னும் கோவை ஞானியின் நட்பு, இலக்கிய ஆர்வம் மேலும் வளர வழி வகுத்தது. புத்திலக்கிய நூல்கள் பல அறிமுகமாகின. அவற்றின் தாக்கத்தால் கவிதை, சிறுகதைகள் எழுதத் தலைப்பட்டார். 'காளான்' போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின.

முதல் நாவல் 'மின்மினிகளின் கனவுக்காலம்' 1993ல் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'சாயும்காலம்' 2000த்தில் வெளியாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது. சர்வீஸ் இன்ஜினியர், டிடிபி நிறுவன உரிமையாளர் எனும் பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கும் இவர், சிறிது காலம் விவசாயத்தையும் முழுநேரத் தொழிலாகச் செய்திருக்கிறார். கணினி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். 'ஜீவா' என்னும் எழுத்துருவை வடிவமைத்திருக்கிறார். ஸ்ரீநேசனுடன் இணைந்து வனம் என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தியிருக்கிறார்.

கணிப்பொறியாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட முருகனின் சிறுகதைகள் மனித உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்களை, மனப் பிறழ்வுகளை, அச்சங்களை, வீழ்ச்சிகளை காட்சிப்படுத்துகின்றன. தனிமனிதச் சிக்கல்கள், ஆன்மீகம், காதல், காமம், அன்பு, போதை, உறவு, வெறுப்பு, தேடல் என்று வாழ்வின் பல்வேறு கூறுகளைப் பாசாங்கில்லாமல் பேசுகின்றன. மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழ்ந்து ஊடுருவிச் செல்பவையாக உள்ளன. யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம், பின் நவீனத்துவம் என சிறுகதைகளுக்கான பல்வேறு சோதனை முயற்சிகளில் ஜீ.முருகன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரது படைப்பாற்றல் பற்றி ஜெயமோகன், "ஜீ.முருகனின் கதைத் தொகுதிகளை புதிய வடிவங்களுக்காக முயற்சி செய்பவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. ஜீ.முருகனின் முக்கியமான பலம் அவருக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது. அவரது கதைகள் ஒரு யதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன. 'கறுப்பு நாய்க்குட்டி', 'அதிர்ஷ்டமற்ற பயணி' போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீ.முருகன் வழக்கமான கதைவடிவத்தை அடைவதற்கு முன்னாலேயே கதையை நிறுத்திவிடுதல், கதைக்குள் பிரக்ஞைபூர்வமாக தலையிட்டுப் பேசுதல் போன்றவற்றையே உத்திகளாக செய்திருக்கிறார்" என்கிறார்.

வடிவச் செம்மையும் தேர்ந்த மொழி ஆளுமையும் கொண்டவை இவரது படைப்புகள். 'கறுப்பு நாய்க்குட்டி', 'சாம்பல் நிற தேவதை', 'காண்டாமிருகம்' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். 'மரம்' (நாவல்), 'காட்டோவியம்' (கவிதைத் தொகுப்பு) ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறார். "உண்மையில் ஒரு எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை, அவனைச் சந்தித்துப் பேசுவதிலோ, அவனை வரவழைத்து விருந்து வைத்து மகிழ்வதிலோ, பரிசு கொடுத்து கொண்டாடுவதிலோ இல்லை; அவனை வாசிப்பதில்தான் இருக்கிறது" என்பது முருகனின் கருத்து. "இலக்கியம் என்பது சாரமற்று, மேம்போக்கான பரிமாறுதலாக, செல்வம், பிரபல்யம், அதிகாரம் இவற்றைச் சேர்க்கும் களமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் நாம் செய்யப்போவது என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்" என்று குறிப்பிடும் முருகன், "எழுதுதல், புத்தகம் போடுதல், விற்றல், வாங்குதல், புகழ்பாடுதல், பலன் தேடுதல் என்று தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் நாடகத்தில் நாமும் ஒரு பாத்திரமேற்கப் போகிறோமா அல்லது இதிலிருந்து விலகி தனித்துவத்துடன், நேர்மையான படைப்புச் சூழலுக்காக நம் பங்களிப்பைச் செய்யப்போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம்" என்று குறிப்பிடுகிறார் தன் முகநூலில்.

நவீன படைப்பாளிகளில் முக்கியமானவராக கவனம் பெற்றிருக்கும் ஜீ.முருகன், பிரபல நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். மனைவி அனிதா, மகன்கள் சிபி, ரிஷி ஆகியோருடன் தற்போது வேலூரில் வாழ்ந்து வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com