தென்றல் பேசுகிறது...
அதிபர் ஒபாமாவின் 'ஸ்டேட் ஆஃப் த யூனியன்' உரையில் அவுட்சோர்சிங் குறித்து அவர் கூறியவை இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவுட்சோர்சிங்கில் மூன்றுவகை உண்டு: தொழில்நுட்பம், சேவை, உற்பத்தி. இந்தியாவைப் பொருத்தவரை தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் அதிகமாக அவுட்சோர்சிங் செய்யப்படுகிறது. ஆனால், அதிபரின் பேச்சில் மிக அதிகமாகக் காணப்படுவது உற்பத்தித் துறையில் சீனா பெருமளவு வேலை வாய்ப்புகளைத் தட்டிக்கொண்டு போவது குறித்ததாகும் என்பது கூர்ந்து கவனித்தால் தெரியவரும். அமெரிக்கரான ஹென்றி ஃபோர்டு கண்டுபிடித்த கார், மிக அதிகமாக ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் டெட்ராயிட்டுக்கே சவாலாக ஆனது. ஆனால், அமெரிக்கக் கணினிகளும், அதற்கான உதிரிப் பொருட்களும் அமெரிக்கக் கம்பெனிகளாலேயே சீனக் கம்பெனிகளுக்கு உற்பத்திக் காண்ட்ராக்டில் விடப்படுகிறது. அதுவல்லாமல், குறைந்த கூலி கொடுத்துத் தயாராகும் எண்ணற்ற பொருட்கள் - பொம்மை முதல் காலணி வரை - உலகின் சந்தையில் வந்து குவிந்திருக்கிறது. எனவே, அதிபர் ஒபாமாவின் கவலை வெறும் 'Bangalored jobs' குறித்ததல்ல; சற்றே குறைந்த, பெரும்பாலானவர்கள் செய்கிற உற்பத்திப் பணியிடங்கள் சீனாவுக்குப் போய்விட்டதைக் குறித்ததாகும். இதைப்பற்றி இந்தியாவும் கவலைப்பட்டாக வேண்டும்.

"சென்ற 22 மாதங்களில் 3 மில்லியன் பணியிடங்கள் அமெரிக்காவில் உண்டாக்கப்பட்டுள்ளன" என்று அதிபர் கூறியிருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது. இழுத்து மூடப்படுமோ என்று தத்தளித்த ஃபோர்டும், கிரைஸ்லரும், ஜெனரல் மோட்டார்ஸும் மீண்டும் நிமிரத் தொடங்கிவிட்டன. ஆனால், ஈராக்கிலிருந்தும் ஆஃப்கனிஸ்தானத்திலிருந்தும் படைகள் திரும்பத் தொடங்கிவிட்ட நிலையில் ஏராளமான இளைஞர்கள் அமெரிக்காவின் தெருக்களை மீண்டும் நிரப்புவார்கள். அவர்களுக்குப் படிக்கவும், வேலை செய்யவும் வாய்ப்புகள் தேவை. "உயர்கல்வி என்பது உல்லாசமல்ல; அவசியம். எனவே கல்வி நிலையங்கள் தமது கட்டணத்தை உயர்த்தினால் அவற்றுக்கு அரசின் உதவி குறையும்" என்று ஒபாமா எச்சரித்திருப்பதை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும். அதே காரணத்துக்காகவே அவர் கல்விக் கடனுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். சரியான சிந்தனை.

*****


கல்விக் கட்டணத்தின் கிடுகிடு உயர்வு அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரும் சவால்தான். நடுத்தர வகுப்பினர் ஆரம்பக் கல்விக்குக்கூடக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உண்டாகியிருக்கிறது. சென்ற பத்தாண்டுகளில் பொதுவாக வருவாய்த் தரம் ஏறியிருக்கிறது என்று சொன்னாலும், செல்வப் பங்கீடு ஒன்றுபோல இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால், திடீரென வருவாய் பெருகிவிட்ட ஒரு தட்டினரை வைத்து, கல்வியில் எல்லா நிலைகளிலும் கட்டணங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஏறிப்போய் விட்டன. தமிழகத்தைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகளின் தரமும் உயர்ந்திருக்கிறது என்றாலும், ஓரளவு வசதி படைத்தவர்கள் கூடத் தம் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்பவே விரும்புகிறார்கள். எல்லாவற்றிலும் அரசு மூக்கை நுழைப்பதும் கட்டுப்படுத்துவதும் ஒரு மக்களாட்சி அரசில் விரும்பத் தக்கதல்ல என்றாலும், கல்விக் கட்டணங்களை (நன்கொடைகள் உட்பட) அரசு நெறிப்படுத்தாவிட்டால், எல்லோருக்கும் கல்வி என்ற நிலை வெறும் ஏட்டளவில் நின்றுபோகும் அபாயம் உள்ளது.

*****


உலகின் சிறந்த கல்லூரிகளோடு கைகோத்து, அங்கே பிற்பட்ட சமுதாயத்தினரும் சேர்வதற்கான கல்விப் பயிற்சியை ஓர் அறக்கட்டளை வழியே இலவசமாகத் தரும் திட்டத்தை அமல் படுத்துவது வெள்ளை அமெரிக்கருக்கே சாதிக்கக் கடினமானதாகும். ஆனால் ஒரு இந்தியர், அதிலும் தமிழரான அருண் அழகப்பன் அதைச் சாதித்திருக்கிறார். வால் ஸ்ட்ரீட்டின் உயர்நிலைச் சட்ட வல்லுனர் ஒருவர் என்ன கட்டண விகிதம் வாங்குகிறாரோ அதே விகிதத்தில் ஒரு கோச்சிங் ஆசிரியர் கட்டணம் பெறும் அந்தஸ்தைச் சம்பாதித்துக் காட்டியதும் அவரது சாதனைகளில் அடங்கும். இந்த இதழின் நேர்காணலில் இந்த வித்தியாசமான கல்வியாளரை நாம் சந்திக்கிறோம். காளமேகம் போல அருவியாகக் கொட்டும் கவிதை, வளமான தமிழ், அதை இசையில் கலந்து குழைத்துத் தரும் சுகம் - இவற்றுக்குச் சொந்தமானவர் இசைக்கவி ரமணன். இன்னொரு நேர்காணல் அவருடனானது. உலகெங்கிலும் விரும்பிப் படிக்கப்படும் சிறுகதைகள், சென்னையில் சங்கீத சீஸன் பற்றிய கட்டுரை, தகவல்கள் என்று மீண்டுமொரு வண்ணக் கதம்பம் உங்கள் கையில். ரசியுங்கள், சுவையுங்கள்.

தென்றல் இதழுக்கு ஆலோசகர்களாக எம்முடன் இணைந்துள்ள சந்திரா போடபட்டி, பிரபாகர் சுந்தரராஜன் ஆகியோரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்களுக்கு தேசிய சுதந்திர நாள், வேலன்டைன் தின, மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்.


பிப்ரவரி 2012

© TamilOnline.com