சிகாகோவில் 'ஹரியுடன் நான்' குழு மெல்லிசை
சிகாகோவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கணேஷ்-காயத்ரீ கோவிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு ஜெயா TV மூலம் பிரபலமான 'ஹரியுடன் நான்' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி அரோரா கோவில் அரங்கத்தில் நடைபெற்றது. பிரபல பாடகர் ஹரிஹரனால் பட்டை தீட்டப்பட்ட இந்த இளையோர் பழைய/புதிய தமிழ்ப் பாடல்களோடு, ஹிந்தி, மலையாளம், கர்நாடக இசை என்று சேர்த்து அளித்தது நிகழ்ச்சியின் சிறப்பு.

முதற்பாடலாக அளித்த ஹிந்தி கவாலி அருமையான துவக்கம். பின், கோபாலகிருஷ்ணன் பாடிய 'செந்தமிழ் தேன்மொழியாள்', நிரஞ்சன் பாடிய 'ஒரு நாள் போதுமா', பார்கவி பாடிய 'சந்திரலேகா', லக்ஷ்மி அளித்த 'ஆட வரலாம் பாட வரலாம்' பாடல்கள் அரங்கத்தில் கரவொலி கேட்க வைத்தன. ரவிசங்கரும் லக்ஷ்மியும் இணைந்து பாடிய 'ஹாய் ராமா' (இந்தி), 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை', கேதார்-நிரஞ்சன் பாடிய 'ஆலால கண்டா' பாடல்கள் இனிமை. பின்னர் 'பேட்டை ராப்' மற்றும் குத்துபாடல்கள் வந்திருந்தோரை ஆட வைத்தன. இவற்றைத் தவிர கர்நாடக சங்கீதப் பாடல் கதம்பமும், Rock and Roll medley தொகுப்பும் வெகு ஜோர்.

சிகாகோவின் பிரபல சினோ குழுவினர் வடிவமைத்த இந்த நிகழ்ச்சியை 'ஹரியுடன் நான்' இயக்குனர் சுபஸ்ரீ தணிகாசலம் சுவைபடத் தொகுத்து வழங்கினார். சந்திரசேகர குருக்கள் வரவேற்புரை வழங்கினார். ஏற்பாடுகளை ராம் ரகுராமன் ஒருங்கிணைப்பில் கணேஷ்-காயத்ரீ கோவில் குழுவினர் நன்றாகச் செய்திருந்தனர்.

பேரா. ரங்கநாதன்,
சிகாகோ.

© TamilOnline.com