2011 நவம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் கலைகளைக் கற்றுத் தரும் பல்லவிதா நடத்திய விவ்ரித்தி ஃப்ரீமாண்ட் ஓலோனி கலையரங்கில் நடைபெற்றது. முதல் நாளன்று மாலை குரு லதா ஸ்ரீராம், ஆஷா ரமேஷ் ஆகியோருடன் மாணவர்கள் இணைந்து மஹா கணபதி என்ற நாட்டை ராகக் கிருதியைப் பாடி விழாவைத் தொடங்கினர். லதா ஸ்ரீராம் வரவேற்புரையில் விவ்ரித்தி குழந்தைகளுக்கு வாய்ப்பையும், உயர்நிலையில் உள்ளோருக்குச் சங்கீத நுணுக்கங்களையும் அளிப்பதாகக் கூறினார். வித்வான் டி.எம். கிருஷ்ணா ஸ்வரஸ்தானம், ஜன்ய ராகம் ஆகியவற்றைப் பற்றி விவரித்ததுடன், கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
நவம்பர் 12 அன்று காலை குருவாயூர் துரை அவர்களின் அமெரிக்க மாணவர்கள் பங்கேற்ற தாள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. துரை அவர்களைப் பாராட்டி, அருண் அய்யர், வயலின் விதூஷி கன்யாகுமரி, டி.எம். கிருஷ்ணா, பத்ரி சதீஷ், மேலக்காவிரி பாலாஜி ஆகியோர் பேசினர். இதனையடுத்து ஸ்ருதி ஸ்வர லயா மாணவ, மாணவிகள் பாடினர். பின்னர் டாக்டர் ராஜலக்ஷ்மி சீனிவாசன் 'ராமாயணத்தில் காந்தர்வ வேதம்' என்ற தலைப்பில் பேசினார். பின்னர், வித்யா சுப்ரமண்யம் அவர்களின் மாணவி வினித்ரா மணி நடனம் ஆடினார். அடுத்து ஸ்ரீமத் பாகவதத்தில், கிருஷ்ணரின் குழந்தைப்பருவத்தை Pat. கிருஷ்ணன் அழகான தமிழில் விவரித்தார். லதா ஸ்ரீராம் அவர்களின் மாணவ மணிகள் பாடினார்கள். முதலில் 'ஸ்ருதி, ஸ்மிருதி, புராணே..' என்ற குருவந்தன சுலோகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பக்கவாத்தியமாக சுபா, சுசீலா நரசிம்மன் (வயலின்), விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்), குஹா வெங்கட்ராமன் (வீணை) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.
ரசிகா குமார் அவர்கள் நவரத்ன மாலிகா வர்ணத்திற்கு பரத நாட்டியம் ஆடியது வெகு சிறப்பு. விக்ரம் அய்யர் (Speech Writer in Obama Administration) இவ்விழாவில் முக்கியப் பேச்சாளராகப் பேசும்போது சிறுவயதில் தாம் லதா ஸ்ரீராம் அவர்களிடம் பாட்டுக் கற்றுக் கொண்டதைப் பற்றிக் கூறினார். அடுத்து டி.எம். கிருஷ்ணா, சங்கீதா சிவகுமார் ஆகியோர் சங்கீதத்தில் பாடாந்தரம் என்றால் என்ன என்பதை விவரித்தனர். மேலக்கரை பாலாஜி மிருதங்கம், எல். ராமகிருஷ்ணன் வயலின் வாசித்தனர்.
நவம்பர் 13 அன்று கன்யாகுமரி அவர்களின் அமெரிக்க மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நாட்டைக்குறிஞ்சி வர்ணத்துடன் துவங்கியது. கன்யாகுமரி இயற்றிய சாருகேசி ராக கீர்த்தனை கேட்கச் சுகம். இதன் பின் கதிரி குன்னிராமன் அவர்களின் சிஷ்யை, வித்யா சுந்தரம், கலாக்ஷேத்ரா பாணியில் பரதநாட்டியம் ஆடினார். பின்னர் சுசீலா நரசிம்மன் அவர்களின் மாணவ, மாணவிகள் வயலினும், ரவீந்திர பாரதி அவர்களின் மாணவர்கள் மிருதங்கமும் வாசித்தது நன்றாயிருந்தது. ஆஷா ரமேஷ் (ராகமாலிகா) அவர்களின் மாணவ, மாணவியர் பாடினர். இதனையடுத்து ஸ்ரீவத்ஸன் மற்றும் சுபப்ரியா குறுகிய அவகாசத்தில் கச்சேரி செய்ய எவ்வாறு கிருதி ராகம் இவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆலாபனையை எவ்வாறு தெளிவாகவும், குறுகிய நேரத்திலும் செய்யலாம் என்றும் அறிவுரை வழங்கினார்கள். அடுத்துப் பல்லவி ஸ்ரீராம் அவர்களின் பரதநாட்டியம் நடைபெற்றது. நடனத்திற்கு சித்தார்த் ஸ்ரீராம் (வாய்ப்பாட்டு), நிஷாந்த் சந்திரன் (வயலின்), ரவீந்தர பாரதி (மிருதங்கம்), அநிருத்தன் வாசுதேவன் (நட்டுவாங்கம்) ஆகியோர் நல்ல பக்கபலம்.
அதன் பின்னர் டி.எம். கிருஷ்ணா ராகம், தானம், பல்லவி பற்றி விவரித்தார். பிரதிலோமம், அனுலோமம் ஆகியவற்ரை அவர் சங்கராபரண ராகத்தில் பாடிக் காண்பித்தது அருமை. நிகழ்ச்சிகளில் வித்யா சுப்ரமணியன், வசந்தி வெங்கடேசன், ப்ரவீணா வரதராஜன் ஆகியோர் தொகுப்புரை வழங்கினர். ஸ்ரீராம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
கௌசல்யா சுவாமிநாதன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |