சிகாகோ தங்க முருகன் விழா
டிசம்பர் 10, 2011 அன்று சிகாகோவில் உள்ள லெமான்ட் திருக்கோயிலில் உள்ள ரதி அரங்கத்தில் 11ம் ஆண்டு தங்கமுருகன் விழா சிறப்பாக நடந்தது. விழாவை வசந்தா ஆதிமூலம் நாயுடு தம்பதியினர் துவக்கி வைத்தனர். நிவேதா சந்திரசேகரன் பாடிய துதியோடு விழா துவங்கிற்று. தங்க முருகன் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மேள தாளம் கூடிய காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக அரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

நாள்முழுதும் நடந்த நிகழ்ச்சிகளில் சிறுவர் சிறுமியரின் முருகன் பாடல்கள், நாட்டியம் ஆகியவை கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ரேகா ஐயர் வழங்கிய முருகன் கெளத்துவம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும், ரவி சுப்ரமணியம் குழுவினரின் மிருதங்கம்-தபலா ஜுகல்பந்தியும், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் தெருப்பாடகர் நாட்டியமும் விழாவிற்குக் களையூட்டின.

திருமுருக கிருபானந்த வாரியாரின் சீடர் ஞானமலர் இராமலிங்க ஐயா, ஆனந்தி ரத்தினவேலு, பூமா சுந்தர் ஆகியோரின் சொற்பொழிவுகள் அவையோரின் கருத்துக்கு விருந்தாக அமைந்தன. அனைவரும் விரும்பும் 'லிட்டில் முருகா' நிகழ்ச்சி விழாவுக்குச் சிறப்பு செய்தது. மினு கார்த்திக் குழுவினரின் 'முருகன் விளையாடல்' என்னும் பாடல் வரிசை முருகனின் பிறப்பு முதல் திருமணக் கோலம் வரை பார்பவர்களின் கண்முன் படமாக விரிந்தது. வைதேகி சுந்தர் எழுதி இயக்கிய 'Who wants to be Muruga Millionaire' என்னும் கேள்வி பதில் நிகழ்ச்சி உற்சாகமூட்டுவதாக இருந்தது.

விழாவைச் சிறப்பாக நடத்த உதவிய பூமா சுந்தர், சிவசுப்ரமணியன், வைதேகி, சிவராமன், சுந்தரராமன், ஹரி ஷங்கர், புவனா, உமாபதி, புஷ்பா, குமார், ரேவகி ராமன், வாசுதேவன், லலிதா, ராஜகோபாலன், சுபத்ரா, குழலி, முத்து, உமா, கோபாலகிருஷ்ணன், ஷோபனா சுரேஷ், ஸ்ரீனிவாசன், ராஜகோபால், ப்ரீதா குமார், ராஜா கணபதி, சந்திரசேகர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

சிவராமன்,
சிகாகோ

© TamilOnline.com