சங்கடம் வேணாம்னு
"சார்! ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்."

"என்ன அது? எதுவா இருந்தாலும் தைரியமா, கூச்சப்படாமக் கேளுங்க..."

"சமீபகாலமா நீங்க சட்டையே போடுறதில்லை... வெறும் வேட்டியோடயே வெளியில திரியறீங்க... அது ஏன்?"

"சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை"

"என்ன இது, மகான்கள் மாதிரி பேசுறீங்களே..."

"உண்மைதான்... ஒரு ராஜா எப்பவும் துன்பப்பட்டுக்கிட்டே இருந்தாராம். ஒரு வேதாந்தியைக் கூப்பிட்டு, என் துன்பம் தீர என்ன வழின்னு கேட்டாராம். அதுக்கு அந்த வேதாந்தி 'போதும் என்ற மனசுடைய ஒருத்தனை தேடி கண்டுபிடிச்சி, அவனுடைய சட்டையை வாங்கிப் போட்டுக்க, உன் கவலை போய்டும்' னு சொன்னாராம்"

"அட... ரொம்பச் சுலபமான வழியா இருக்கே..."

"அப்படித்தான் அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சார். ஆனா யாருக்குமே போதும்ங்குற மனசே இல்லாததால ரொம்ப நொந்து போயிட்டார். கடைசியில ஒருத்தன் கிடைச்சான். ஆனா அவன் சட்டையே போடலை."

"சிந்திக்க வேண்டிய விஷயம் சார். நீங்களும் அந்த மனுஷன் மாதிரிதானா?"

"எப்படி சார்?"

"ஆரம்பத்துல நானும் சட்டை போட்டுக்கிட்டு தான் இருந்தேன். என் சட்டையை என் கையால துவைச்சி போடுவேன், அடுத்தவங்களுக்குச் சிரமம் கொடுக்க மாட்டேன். கல்யாணம் ஆனதுக்குப் பிறகு என் மனைவி துவைக்க ஆரம்பிச்சாங்க. அதுதான் எனக்கு கஷ்டமாப் போச்சு! அப்புறம்தான் சட்டையே போட வேணம்னு விட்டுட்டேன்!

"மனைவிக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்காகவா?"

"இல்ல.. இல்ல... எனக்குச் சங்கடம் வேணாம்னுதான்"

"என்ன சொல்றீங்க?"

"பொதுவா சட்டையை கழட்டுனதுக்கு அப்புறம் தானே துவைப்பாங்க... ஆனா என் மனைவி நான் சட்டையை கழட்டுறதுக்கு முன்னாடியே துவைக்க ஆரம்பிச்சிடுவா!"

தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன குட்டிக்கதை

© TamilOnline.com