அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மூவருக்கு அமெரிக்க அதிபர் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரி்ந்ததற்காக டாக்டர் கார்த்திக் ஏ. ஸ்ரீனிவாசன், சுமிதா பென்னாத்தூர், மற்றும் ஹரிஸ் சரோப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிபர் ஓபாமா விருது வழங்கிப் பாராட்டினார். ஸ்ரீனிவாசன் அறிவியல் தொழில்துறையில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர். சுமிதா பென்னாத்தூர் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தி்ன் மெக்கானிகல் இஞ்சினியரிங் பிரிவில் துணைப் பேராசிரியர். சரோப் பயோமெடிக்கல் துறைத் தலைமப் பொறுப்பாளர்.
சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி தமிழில் 2011ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதுக்கு சு.வேங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1048 பக்கங்களைக் கொண்ட இந்தப் புதினம் நாயக்கர்கள் வரலாற்றையும், மதுரை நகரின் காவலர்களாக நியமிக்கப்பட்ட கள்ளர்களின் பெருமையையும் பேசுகிறது. வெங்கடேசன் எழுதிய ஒரே நாவலும் இதுதான். மதுரைக்காரரான சு. வேங்கடேசன், கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர். நான்கு கவிதைத் தொகுப்புகள், சில கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். இவரது 'கலாச்சாரத்தின் அரசியல்', 'ஆட்சித் தமிழ்-ஒரு வரலாற்றுப் பார்வை' ஆகிய இரு நூல்கள் முக்கியமானவை. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரவான்' படத்திற்கு கதை, வசனத்தை வெங்கடேசன் எழுதியிருக்கிறார். 1 லட்சம் பரிசுத்தொகையுடன் பட்டயமும் அடங்கிய இவ்விருது பிப்ரவரி 14, 2012 அன்று டெல்லியில் வழங்கப்பட இருக்கிறது.
பாரதிய பாஷா பரிஷத் விருது இந்த ஆண்டிற்கான 'பாரதிய பாஷா பரிஷத்' விருது சு.வேணுகோபால் எழுதிய 'வெண்ணிலை' சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியராகப் பொள்ளாச்சியில் பணிபுரியும் வேணுகோபால் 'நுண்வெளிக்கிரணங்கள்' என்ற நாவலையும் 'கூந்தப்பனை', 'பூமிக்குள் ஓடுகிறது நதி', 'களவுபோகும் குதிரைகள்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
எழுத வாங்க... எழுத்தாளர்களை இனம் கண்டு கொண்டு அவர்களுக்கான வாய்ப்புகளைத் தர முன்வந்துள்ளது 'நேனோரிமோ' (www.nanowrimo.org). 1999ல் சான்பிரான்ஸிஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு 'National Novel Writing month' என்கிற பெயரில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் இளம் படைப்பாளிகளுக்கு நாவல் எழுத வாய்ப்பளிக்கிறது. இந்தப் போட்டியில் குழந்தைகளும், டீன் ஏஜில் உள்ளவர்களும் பங்கேற்கலாம். நவம்பர் 1 அன்றைக்குத் தொடங்கி 30க்குள் தங்கள் படைப்பை எழுதிவிட வேண்டும். நாவலை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை, எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். தமிழிலும் எழுதலாமே! தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்கள் புத்தகமாகவும், மின் நூலாகவும் வெளியிடப்படும். இதில் பங்குபெற www.nanowrimo.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எழுதிக் கலக்குங்க!
அரவிந்த் |