"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" என்று டிவியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. கொதித்த பாயசத்தில் பாலை ஊற்றிக் கிளறினாள் சீதா.
"அத்தை, மாமாவுக்கு பாயசம் தரீங்களா?".
"இல்லை. இன்னும் கொடி ஏத்திட்டு வரலம்மா வந்தவுடனே சாப்பிடுவார்".என்று பதில் கூறியபடி தேங்காய் துருவினாள் கமலம்.
"பாட்டி.. எங்க ஸ்கூல்ல இன்னிக்கு நான் பாட்டுப் பாடினேன்" என்றபடி வந்தது ஸ்ருதி, அந்த வீட்டின் பேத்தி.
"என்ன பாட்டுப் பாடினே செல்லக்குட்டி?"
"கொடி ஏத்திட்ட பிறகு யாராவது நம்ம நாட்டைப் பத்தி பாடறீங்களான்னு எங்க டீச்சர் கேட்டாங்க. நான் போய் நம்ம தாத்தா வீட்டில பாடுவாரே, பாருக்குள்ளே நல்ல நாடு.. அந்தப் பாட்டை பாடினேன்."
"சமத்து! தாத்தா கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவார்." அப்பொழுது வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு வந்தார் ஒரு எண்பது வயது முதியவர். "அப்பு தாத்தா! நான் இன்னிக்கு ஸ்கூல்ல உங்களுக்கு பிடிச்ச பாட்டு பாடினேன்" என்று ஓடி வந்தது ஸ்ருதி.
"அப்படியா ராஜாத்தி. சமத்து. எனக்கு இப்போ பாடிக் காட்டு. அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேருக்கும் பாயசம் வாங்கிண்டு வா" என்றார் அப்புசாமி தாத்தா. "சுதந்திர தின வாழ்த்துக்கள் அப்புசாமி" என்று கூறியபடி வீட்டிற்குள் நுழைந்தார் பக்கத்து வீட்டு போஸ். "வாங்க போஸ் எப்படி இருக்கீங்க? வந்தே மாதரம்!" என்று சல்யூட் அடித்தார் அப்புசாமி.
"அப்புசாமி நானும் பாக்கறேன். நீங்க எப்பவுமே கதர் உடுத்தறீங்க கொடி அணியறீங்க. நீங்க சுதந்திரப் போராட்டத்தில் கலந்திருக்கீங்களா?".
"என்ன போஸ் கேக்கறீங்க? நாட்டுப்பற்று இருக்கணும்னா சுதந்திரப் போராட்டத்துல கலந்திருக்கணுமா? என்னுடைய வீட்டில இருக்கறவங்க மேல எனக்கு எவ்வளவோ பாசமோ, அதுபோல நாட்டு மேலயும் பாசம் உண்டு. எண்பது வருஷமா என்னோட பந்தம் எந்நாடு. அதனால சுதந்திர தினத்திற்கு எங்க வீட்டில பாயசம் வைப்போம். இருங்க பாயசம் குடிங்க" என்று பேசியபடி அருந்தினார் தாத்தா.
*****
அன்று ஞாயிற்றுக் கிழமை. "ஏ சிவா. வாடா போலாம்" என்று தன் பேரனைக் கூப்பிட்டார் அப்புசாமித் தாத்தா. "தோ வர்றேன் தாத்தா, ஸ்ருதியும் கிளம்பிட்டு இருக்கா."
"போன வாரம் நம்ம சுத்தம் பண்ணினதில பக்கத்துத் தெரு எவ்வளோ நல்லா இருக்கு தெரியுமா. இந்த வாரம் நம்ம ரெண்டு தெரு தள்ளி ஒரே குப்பையா இருக்கு அங்க போய் சரி பண்ணுவோம்."
"சரி தாத்தா".
"கிளம்பியாச்சா! தாத்தாவும் பேரனும் ஊரைச் சுத்தம் பண்றோம்னு. ரொம்ப வெய்யில் கிளம்பறத்துக்கு முன்னாடி வந்துடுங்க" என்று சொன்னபடி வந்தாள் கமலம்.
"சரி சரி நீ போய் உள்ள காலுக்குத் தைலம் தடவு, கால் வலின்னு சொன்னியே" என்று கூறியபடி சிவா, ஸ்ருதியுடன் கிளம்பினார் தாத்தா.
"தாத்தாக்கு பாட்டி மேல எவ்ளோ பாசம் பாரு ஸ்ருதி" என்று கேலி செய்த சிவா, "தாத்தா நம்ம நாட்டின் மேல இவ்ளோ பற்று வெச்சிருக்கிற நீங்க ஏன் தாத்தா சின்ன வயசில சுதந்திரப் போராட்டதில கலந்துக்கல?"
"அதுவாடா கண்ணா, அந்தக் காலத்தில நான் கொடி பிடிச்சு முதல்ல ஓடினேன். ஆனால் உங்க பாட்டி என்ன அன்பால கட்டிப் போட்டுட்டா. எனக்குப் பின்னாடி எங்கப்பாவுக்கு ஆறு பெண்கள் பிறந்தன. அவங்களுக்குக் கல்யாணம் பண்ணணும் என்கிற பொறுப்பு வந்துடுத்து. அதனால கொடியை வாங்கிட்டு விவசாயக் கலப்பையை கொடுத்தா உங்க பாட்டி. ஆனா நம்ம நாட்டுக்கு என்னால முடிஞ்சதச் செய்யணும்னுதான் இந்த வயசிலயும், ஒவ்வொரு வாரமும் ஒரு தெருவைச் சுத்தம் பண்றேன், இல்ல, ஒரு குழந்தைக்கு படிப்பு சொல்லித் தரேன். ஆனால் சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்காத துக்கம் இருக்கத்தான் இருக்கு."
தாத்தாவுடன் சேர்ந்து சமூக அக்கறையோடு சிவாவும் ஒவ்வொரு வாரமும் பொதுச்சேவை செய்யப் போவான்.
*****
இதோ, ஐந்து நாட்கள் ஆயின. தாத்தா ஒரு பருக்கைகூடச் சாப்பிடவில்லை. நாட்டின் ஊழலை எதிர்த்து காந்தியவாதி ஒருவர் உண்ணாவிரதம் தொடங்க, அவரை ஆதரித்து, தாத்தாவும் உண்ணாவிரதத்தை நடத்த, ஐந்து நாட்கள் ஓடிவிட்டன.
"தாத்தா உங்க போராட்டத்த நிறுத்திக்கோங்க. உங்க உடம்பு பலகீனம் ஆயிடுச்சு" இது சிவா.
தாத்தா தன் பிடிவாதத்தைத் தளர்த்தவில்லை.
"பாட்டி நீயாவது சொல்லேன்." "இல்லைடா தங்கம். நம்ம நாட்டில நடக்கற ரெண்டாவது சுதந்திரப் போராட்டம் இது. இதுல உங்க தாத்தா கலந்துகிட்டு தன்னுடைய சுதந்திர தாகத்தைத் தீர்த்துக்கட்டும். எந்தப் போராட்டத்துல கலந்துகிட்டா என்ன, நாட்டுக்காக செய்யற எல்லாமே தியாகம்தான். செய்யறவங்க தியாகிதான். போனமுறை சூழ்நிலையினால நான் தடுத்திட்டேன். இப்போ நான் அதைச் செய்யமாட்டேன்" என்று சொன்ன பாட்டியின் முகத்தைக் கண்ட அப்புசாமித் தாத்தாவுக்கு பெரிய அமைதி தெரிந்தது.
லக்ஷ்மி சுப்ரமணியன், மின்னசோட்டா |