முளைப்பாய் தானாக மழைநீரே போதுமென்பாய் கிளையின்றி வளர்ந்திடுவாய் உன் குடும்பமே தோப்பாக
கறுப்பு நிறத்தோடு கரடுமுரடாய்த் தோன்றிடுவாய் நறுக்கென்று நெடுமரமாய் நிமிர்ந்து நீ நின்றிடுவாய்
பாளையைச் சீவி விட்டால் பதனீர் சுரந்திடுவாயதை ஆலையில் காய்ச்சிவிட்டால் ஆகிடுவாய் கருப்பட்டி
தெளிவு என்றவொரு தெள்ளமுதைத் தந்திடுவாய் களிப்பவர் திளைப்பதற்குக் கள்ளையும் கொடுத்திடுவாய்
பங்குனி வெய்யிலிலே பங்கிட்டுச் சுவைத்திடவே நுங்கையும் குலைகுலையாய் நிறையத் தந்திடுவாய்
மருந்திற்கும் விருந்திற்கும் மற்றும் சிறுவர்க்கும் கரும்பின் சுவை போன்ற கற்கண்டைக் கொடுத்திடுவாய்
நிழல்தரா மரமென்று நிந்திக்கும் சிலருக்கு பழந்தன்னைத் தந்துமிகப் பரிகாரம் தேடிடுவாய்
மண்ணில் உன் கிழங்கை மறைத்து வைத்திருப்பாய் உண்ணவே மக்களுக்கு உளமார வழங்கிடுவாய்
வீடுகள் கட்டிடவே விட்டமாய் மாறிடுவாய் ஓடுகள் சுடுமென்று ஓலைகளால் கூரையாவாய்
பெட்டி முடைய, வெடி சுற்ற, புழுக்கம் தீர் விசிறி செய்ய, தட்டி கட்ட ஓலைகளைத் தடையின்றி அளித்திடுவாய்
அடுப்பெரிக்க மட்டையையும் அத்தோடு கருக்குகளும் கொடுத்திடுவாய் அவுணியையும் கூடை பின்ன நீயும்தான்
இதற்கெல்லாம் மேலாக,
தமிழெழுதத் தரமான தாள்களைத் தந்தாய் உன் புகழென்றும் நிலைத்திருக்கும் பனைமரமே பனைமரமே!!
*****
குறிப்பு: தெளிவு - பதநீர் (சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தெளுவு என்றும் கூறுவார்கள்) அவுணி - பனை மட்டையைத் தண்ணீரில் ஊற வைத்து கத்தியால் கீறி எடுத்தால் வரும் கெட்டியான நீர்.
செங்காளி, கலிஃபோர்னியா |