அணில் சொன்ன ரகசியம்
அது ஒரு சிறிய காடு. அங்கு ஒரு மரத்தில் அணில் ஒன்று வசித்து வந்தது. அது பழங்களை உண்டும் விதைகளைக் கொறித்தும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தி வந்தது. மரத்தை அடுத்திருந்த சிறிய குகையில் நரி ஒன்று வசித்தது. அது தினந்தோறும் தனது உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. அதனால் எப்போதும் ஆனந்தமாக இருக்கும் அணிலைப் பார்த்த நரிக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. தான் உணவுக்கு அலைந்து திரியும்போது அணில் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது நரிக்கு மிகவும் எரிச்சலூட்டியது.

ஒருநாள் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து அணில் ஆனந்தமாக முந்திரிக் கொட்டையைக் கொறித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து உடனே தனது குகையிலிருந்து ஓடி வந்த நரி, அப்படியே தனது இரு கைகளாலும் அணிலின் கழுத்தைப் பிடித்து நெருக்கியது.

"ஐயோ, என்னை விட்டு விடுங்கள்! நான் உங்களுக்கு எந்தத் துன்பமும் செய்ததில்லையே!" என்று கெஞ்சியது அணில்.

"உண்மைதான் நீ எனக்கு எந்தத் துன்பமும் தந்ததில்லை. ஆனால் உன்னைப் பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக, எரிச்சலாக இருக்கிறது. நான் ஒருவேளை உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் போது, நீ மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறாயே! அது எப்படி என்று சொல். உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

"ம். அது தேவரகசியம். ஒரு முனிவர் எனக்குச் சொன்னது. அதை எப்படி உன்னிடம் சொல்வது? நீ உடனே என்னை விட்டுவிட்டால் நான் சொல்கிறேன்" என்றது அணில்.

"சரி" என்று சொல்லி அணிலை விடுவித்தது நரி.

உடனே பாய்ந்து மரத்தில் தாவி ஏறிக்கொண்ட அணில், "அந்த ரகசியம் இதுதான். நாங்கள் யாரையும் விரோதிகளாக நினைப்பதில்லை. யாரையும் துன்புறுத்தி மகிழ்வதில்லை. யாருக்கும் கெடுதல் செய்வதில்லை. யாரைப் பார்த்தும் பொறாமைப் படுவதில்லை. நீங்களும் இப்படி வாழ்ந்தால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம்" என்று கூறிவிட்டுத் தனது கூட்டுக்குள் சென்றது.

"இப்படி என்னால் வாழ முடியாதுதான். ஆனாலும் இன்று முதல் முயற்சித்துப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் இரைதேடிச் சென்றது நரி.

அணில் சொன்ன ரகசியம் நரிக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பயனுடையதுதான்! இல்லையா குழந்தைகளே!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com