மயிலாடுதுறை மயூரநாதர்
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழி புகழ்கிற மாயவரம் என்னும் மயிலாடுதுறை திருத்தலம் சென்னை-இராமேஸ்வரம் இருப்புப்பாதை வழியில் மிக முக்கியமான தலமாகும். கும்பகோணம், சென்னை, திருவாரூர், தஞ்சை எனப் பல இடங்களிலிருந்து இங்கு பஸ் மூலம் எளிதாக வரலாம். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளனர். இறைவன் திருநாமம் மயூரநாதர். இறைவி ஸ்ரீ அஞ்சல் நாயகி. தேவாரத் திருப்பாடல்களில் இறைவன் மயிலாடுதுறை அரன், மயிலாடுதுறையான், அஞ்சொலாள் உமை பங்கன் எனவும், வடமொழியில் மயூரநாத ஸ்வாமி, பிரமலிங்கம், வள்ளலார் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. கல்வெட்டுக்களில் மயிலாடுதுறை நாயகர் எனக் காணப்படுகிறது.

தட்சனின் யாகத்தாலும் கௌதமரின் சாபத்தாலும் அஞ்சி வந்து அடைக்கலம் புகுந்த மயில்களுக்கு அபயம் அளித்தமையாலும் பிறவித் தளையில் சுழன்று உழலும் ஆன்மாக்களுக்கு அபயம் அளிப்பமையாலும் அன்னை அபயாம்பிகை என்று போற்றப்படுகிறாள். அஞ்சல் நாயகி, அஞ்சலை, மயிலம்மை என்பது தமிழ்ப் பெயர்கள்.

மாயூரத்திற்கு ஒப்பான தலம் எங்குமே இல்லை என்பர். இத்தலத்தில் நோன்பு, உபவாசம், பூசை, தீர்த்த ஸ்நானம், செபம், தானம், தவம் செய்தால் பெரும்பயன் சித்திக்கும். இவ்விடம் குளங்கள் யாவும் சிவ தீர்த்தம். சிலைகள் யாவும் சிவலிங்கம். இங்கு வசித்தோர் யாவரும் சிவனடியார்கள். இவர்கள் கயிலையை அடைவார்கள். இங்கு மகேஸ்வர பூஜை செய்பவர்களின் பெருமை பெரிதினும் பெரிது. இந்தத் தலத்தைச் சுற்றி மிக விசேஷமான பல புண்ணியத் தலங்கள் உள்ளன.

இடப தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனவித்யாசரஸ், அகஸ்திய தீர்த்தம் ஆகியன முக்கியமான தீர்த்தங்களாகும். துலா கட்டம் எனப்படும் காவிரி ஆற்றின் நடுவில் மேற்கு நோக்கி இடபப் பெருமான் எழுந்தருளியுள்ள தீர்த்தம் இடப தீர்த்தம். பிரம்ம தீர்த்தம் ஆலயத்தினுள் அக்கினி மூலையில் உள்ளது. மயிலம்மை இந்தக் குளத்தில் நீராடித்தான் இறைவனை பூஜித்தார். அகத்தியர் அமைத்தது அகத்தியர் தீர்த்தம். இது தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு நேர் கிழக்கில் சதுரக் கிணறு வடிவில் அமைந்துள்ளது. தல விருக்ஷம் மாமரம். சூதவனம் என வடமொழியில் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு
இக்கோயில் மிகவும் தொன்மையானது. கிழக்கே பெரிய கோபுரமும் வடக்கே மொட்டைக் கோபுரமும் உள்ளது. கொடிமரத்துக்குத் தெற்கே விநாயகரும், வடக்கே ஆறுமுகரும் எழுந்தருளியுள்ளனர். கர்ப்பக் கிரகத்திற்குப் பின்னால் குமரக் கோயிலில் பாலசுப்ரமணியர் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். ஆதி மயூரநாதர் சிவலிங்கத் திருவுருவமாக எழுந்தருளியுள்ளார். கோவில் உள்ளே தாமிரத்தில் செய்யப்பட்ட மயில் உருவம் உள்ளது. அதுதான் அம்மையார் மயில் உருவம் பெற்ற நிலை. அகஸ்தியர் ஸ்தாபித்த விநாயகர், நாத சன்மா வழிபாடு செய்து ஐக்கியமான சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன.

வடக்கே அன்னை அபயாம்பாளின் சந்நிதி. நின்ற கோலத்தில் நான்கு கைகள். மேற்கரங்கள் இரண்டிலும் சங்கு சக்கரம். இடது திருக்கரம் தொடைமேல் தொங்க, வலது திருக்கரம் கிளியை ஏந்தி அபயம் அளிப்பதாக விளங்குகிறது.

தட்சன் தனது யாகத்தில் சிவபெருமானை அலட்சியம் செய்ய, அன்னை அது கண்டு பொறாமல் அங்கு சென்று தந்தையால் அவமதிக்கப்பட்டு, தவயோகத்தால் தன்னுரு நீங்கி பிரம்ம வனத்தில் மயிலுருவம் தாங்கி இறைவனைக் குறித்துத் தவம் இருந்தாள். இறைவன் அது கண்டு இரங்கி அன்னைக்கு விமோசனம் அளித்து இடப்பாகமும் தந்தார். இறுதியில் தட்சனும் தன் தவறுக்கு வருந்தி இறைவனைப் பூசித்து அருள்பெற்ற தலம் இது.

இத்தலத்தில் துலா மாத விழா சிறப்பாக நடைபெறுகிறது. ஐப்பசி விஷு புண்ய காலத்தில் பஞ்சமூர்த்தியும் காவிரிக்கு எழுந்தருளித் தீர்த்தம் கொடுப்பது விசேஷம். கடைமுழுக்கு விழா மிகச் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது. முடவன் ஒருவன் காவிரியில் நீராடத் தன்னால் முடிந்தவரை நகர்ந்து கொண்டே வந்தபோது கடைமுக விழா முடிந்துவிட்டது. அவன் மனம் வருந்திக் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கினான். இறைவன் அவன் கனவில் தோன்றி, "நீ அருணோதயத்திற்கு முன்பு துலா காவிரி கட்டத்தில் நீராடு. முப்பது நாளும் நீராடிய பலன் கிடைக்கும்" என்று கூறி மறைந்தார். அவனும் அவ்வாறே நீராடி முக்தி அடைந்தான் என்று கூறப்படுகிறது. கங்கை முதலிய புண்ணிய நதிகள் நீராடித் தம் பாவங்களை இங்கு போக்கிக் கொண்டதாக வரலாறு.

துலா மாதத் விழாவில் 5ம் திருநாள் அன்னை பெண்மயிலாக, மயூரநாதர் ஆண்மயிலாக கௌரீ தாண்டவம் ஆடுவது, 7ம் திருநாள் மயிலம்மை, மயூர நாதர் திருக்கல்யாணம் யாவும் கண்கொள்ளாக் காட்சிகள்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com