புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
புகைபிடிக்கும்போது ஒரு தற்காலிக ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களால் இந்தச் சந்தோஷம் உண்டாகிறது. அந்தத் தற்காலிகசந்தோஷம் நிரந்தரக் கெடுதலை ஏற்படுத்தும். புகை பிடிப்பதில் பல கெடுதல்கள் உண்டு. அதில் முக்கியமான சிலவற்றை இங்கு காணலாம்.

  • நுரையீரல் நோய்களான நுரையீரல் புற்றுநோய்
  • புற்று நோய் - வாய், தொண்டை, மற்றும் உணவுக் குழாய்ப் புற்றுநோய்
  • அதிக இரத்த அழுத்தம்
  • இருதய நோய், மாரடைப்பு
  • நீரிழிவு
  • பக்கவாதம்
  • உடல் மெலிதல் - உணவு சுவைக்காமல் போதல்
  • மகப்பேறு பாதிக்கப்படுதல்
  • ஆண்மை குறைதல்
  • குடும்பத்தினருக்குப் புற்றுநோய் வருதல்
  • குடும்பத்தினருக்கு ஆஸ்துமா அதிகமாதல்


இவை போலப் பற்பல கெடுதல்கள் வரலாம். புகைபிடிப்பதை நிறுத்துவதால் இவை எல்லாமே குறைவது குறிப்பிடத்தக்கது.

புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று பலர் விரும்புவது உண்டு. ஆனால் அதைச் செய்ய முடியாமல் தவிப்பதே பழக்கத்துக்கு அடிமையாதல் (Addiction) என்று சொல்லப்படுகிறது. இதற்கு உடலில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள் காரணம். இந்த ரசாயன மாற்றத்தை குறைத்துத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரச் சில வழிமுறைகள் தேவைப்படுகின்றன. புகைபிடிப்பவர்களில் பலர் இந்த பழக்கத்தை நிறுத்தக் குறைந்தபட்சம் ஒரு முறையாவது முயற்சி செய்வதுண்டு.

முதலில் புகைபிடிப்போரின் மனோ நிலையை ஆராய்வோம். இவர்கள் குறிப்பாகச் சில வேளைகளில் புகைபிடிப்பது உண்டு. காலையில் காபியுடன், மதிய உணவுக்குப் பின், தொலைதூரக் கார் பயணத்தின் போது, நண்பர்களுடன் உரையாடும்போது, தொலைபேசியில் உரையாடும்போது, புகையின் வாசம் தாக்கும்போது, மது அருந்தும்போது, மன உளைச்சல் அதிகரிக்கும்போது என்று இப்படிச் சில வேளைகளில் இவர்களது கை தானாக புகை பிடிக்க நீள்வதுண்டு. இதை உணர்ந்து கூடுமானவரை இத்தகைய தருணங்களைத் தவிர்க்க முயல்வதும், எச்சரிக்கையாக இருப்பதும் பழக்கத்தை நிறுத்தத் துணை புரியும்.

மருந்துகளும் ஆலோசனைகளும்
முதலில் மனத்தளவில் நிறுத்த முடிவு செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளை மனதில் கொண்டு அதுவரை மனதை தயார் செய்ய வேண்டும். புகைபிடிப்பதைத் தூண்டும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரே ஒரு சிகரெட்டு என்று மனம் அலைபாய விடக்கூடாது. இந்த அடிமையுணர்வு உங்களை இழுத்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் ஒன்று இரண்டாகிப் பிறகு நான்காகிவிடும் என்பதை உணர வேண்டும். தேவைப்பட்டால் இதற்கென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மருந்துகள்
இந்தப் பழக்கத்தை நிறுத்த மருத்துவர் சீட்டு இல்லாமலே கிடைக்கும் சில மருந்துகள் நிகோடின் சார்ந்தவை. இவற்றால் புற்றுநோய் வராது. சிகரெட்டில் நிகோடின் தவிர பல அபாயகரமான ரசாயனப் பொருட்கள் உள்ளன. நிகோடின் அடிமைப் படுத்துகிறது. அதனால் சிகரெட் வேண்டும் என்று அடக்க முடியாத ஆவல் பெருகும்போது இந்த நிகோடின் சார்ந்த மருந்துகள் அந்த ஆவலை அடக்க உதவுகின்றன. இவை வாயில் போட்டு மெல்லும் மிட்டாய் வடிவத்திலும், தோலில் ஒட்டிக்கொள்ளும் பசைப்பட்டையாகவும் கிடைக்கின்றன. புகைக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகரிக்கும்போது இவற்றை உபயோகிக்கலாம். தோல்மீது ஒட்டிக்கொள்ளும் பசைப்பட்டையை தினமும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேவையானால் இவற்றோடு மருத்துவர் சீட்டு மூலம் கிடைக்கும் மருந்துகளும் எடுத்துக் கொள்ளலாம். இதில் குறிப்பாக Wellbutryn உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும். இந்த மருந்துகள் மூலம் தூக்கம் பாதிக்கப்படலாம், நா உலரலாம். Chantix என்ற மருந்தும் நல்ல முறையில் வேலை செய்யும். இதுவும் சிலருக்குத் தூக்கத்தை பாதிக்கக் கூடும். அதனுடன் பல கனவுகளையும் உண்டு பண்ணலாம். புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஐந்தே நிமிடங்களில் அடங்கிவிடும். அந்த நேரத்தில் ஏதாவது வேலையில் கவனத்தைச் செலுத்துவது அவசியம். உடற்பயிற்சியோ கைவேலையோ செய்வது நல்லது. ஐந்து நிமிடங்கள் அடக்கிவிட்டால் வெற்றி நிச்சயம்.

உங்கள் முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கம் பெற BecomeAnEX.org என்பது போலப் பல வலைத்தளங்கள் உள்ளன. இதைத் தவிர இலவச ஆலோசனைக்கு 1800 QUITNOW (1800-7848669) என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். புகை பிடிப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில் இருதயத் துடிப்பு விகிதம் குறைந்து விடும். பன்னிரண்டு மணி நேரத்தில் Carbon Monoxide வாயுவின் அளவு ரத்தத்தில் குறைந்து விடும். மூன்று மாதங்களில் ரத்த ஓட்டமும் நுரையீரல் செயல்பாடும் சீரமைந்து விடும். மாரடைப்புக்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் குறைந்துவிடும். பதினைந்து வருடங்களில் புற்றுநோயின் சாத்தியக்கூறு கணிசமாக குறைந்து விடும்.

இன்னும் என்ன தயக்கம்? புது வருடத்தில் புகைபிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுங்கள்!

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com