தமிழ் வரலாற்றாய்வில் தனி முத்திரை பதித்து, அரிய பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரக் காரணமாக அமைந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இவர், ஆந்திர மாநிலம் கர்நூலில் மார்ச் 12, 1907 அன்று மாணிக்கம்-தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை வட்டாட்சியர். அலுவல் காரணமாக அடிக்கடி அவருக்கு பல இடங்களுக்கு பணிமாறுதல் நேர்ந்தது. அதனால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பற்பல ஊர்களில் கழிந்தது. நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். 1916ல் தந்தைக்கு நிலக்கோட்டைக்கு நிரந்தரப் பணிமாறுதல் ஏற்பட்டது. அதுமுதல் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பத்து வயதானபோது திடீரெனத் தந்தை மறைந்தார். அதனால் சகோதரர் இராமகிருஷ்ணன் குடும்பப் பொறுப்பை ஏற்றார். அவர் உதவியால் திண்டுகல்லில் கல்வி தொடர்ந்தது. திண்டுக்கல் வாழ்க்கை இராசமாணிக்கனாரின் வாழ்வில் திருப்பு முனையானது. அங்கு பணியாற்றிய உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மூலம் 'மௌனசாமிகள்' மடத்தைச் சேர்ந்த இளந்துறவி ஒருவரது அறிமுகம் கிடைத்தது. அவர் இராசமாணிக்கனாருக்கு தக்க வழிகாட்டியாக அமைந்தார். சித்தர் பாடல்களையும், வள்ளலாரின் அருட்பாவையும் போதித்த அவர், 'மக்கள் பணியே இறைவனுக்குச் செய்யும் சேவை' என்ற உண்மையையும், சாதி, சமய வேறுபாடுகள் அறவே கூடாது என்பதையும் இராசமாணிக்கனாரின் உள்ளத்தில் பதிய வைத்தார்.
அவர் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தாலும் வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் அடிக்கடி மாணவர்களை திண்டுக்கல் கோட்டைக்கு அழைத்துச் செல்வார். அதன் தொன்மையை, சிறப்பை, வரலாற்றில் அது பெறும் இடத்தை மாணவர்களுக்குப் புரியும்படி விளக்கியுரைப்பார். அது இராசமாணிக்கனாரின் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. பிற்காலத்தில் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மேதையாகத் திகழ இவை போன்ற பயிற்சிகளே அடிப்படையாய் அமைந்தன. சகோதரருக்கு நன்னிலத்துக்குப் பணி மாறுதல் ஏற்பட்டது அதனால் நன்னிலத்தில் இராசமாணிக்கனாரின் கல்வி தொடர்ந்தது. ஆனால் சகோதரருக்கு அடிக்கடி இடம் மாறுதல் ஏற்பட்டதால் இராசமாணிக்கனாரால் எந்த ஊரிலும் நிலையாகத் தங்கிக் கல்வி பயில இயலாமற் போனது. மூன்றாண்டுகள் அவ்வாறு கழிந்த பின் இறுதியாக சகோதரர் தஞ்சாவூருக்கு மாற்றம் பெற்றார். அப்போது இராசமாணிக்கனாருக்கு 15 வயது. வயதின் நிமித்தம் அவரால் தம் கல்வியைத் தொடர இயலவில்லை. அதனால் ஒரு தையற் கடையில் காஜா எடுக்கும் பையனாக வேலைக்குச் சேர்ந்தார்.
நண்பர் ஒருவர் மூலம் இராசமாணிக்கனாரின் கல்வியார்வத்தையும், அறிவுத்திறனையும் உணர்ந்த தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியர், அவரது கல்வி தடையின்றித் தொடர வழிவகுத்தார். 15ம் வயதில் ஆறாம் வகுப்பில் படிக்க இராசமாணிக்கனார் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆசிரியர்களின் துணையோடு நன்கு படித்து முதல் மாணவராகத் தேறினார். அவரது அண்ணியார் தேவாரம், திருவாசகம், திருப்புகழை அனுதினமும் பாராயணம் செய்வார். அதைக் கேட்டுக் கேட்டு இராசமாணிக்கனாருக்கும் அவற்றில் ஆர்வம் மிகுந்தது. விரும்பிப் பயின்று அவற்றில் தேர்ந்தார். அக்காலத்தில் அவரது ஆசிரியராகக் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை இருந்தார். அவர், இராசமாணிக்கனார் மீது மிகுந்த அன்பு கொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். கரந்தைக் கவியரசின் துணையால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பேற்பட்டது. சங்கத் தலைவர் உமா மகேசுவரம்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலிய பெருமக்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. உ.வே.சாமிநாதையர், ரா.இராகவையங்கார் போன்றோரின் ஆய்வு நூல்களைப் படிக்கும் வாய்ப்பும், அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பும் அமைந்தது. இதனால் இராசமாணிக்கனாரின் தமிழார்வமும், சமய அறிவும் வலுப்பட்டது.
1927ல் தனது பள்ளி இறுதிவகுப்பை நிறைவு செய்தவர், சிலகாலம் ஆந்திராவில் தனது தமையனாருடன் வசித்தார். பின் ஒரத்தநாடு போர்டு உயர்நிலைப்பள்ளியில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். பின் தனது தந்தையின் நண்பர் உதவியால் சென்னை, புதுவண்ணை தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பேற்றார். 1930ம் ஆண்டில் கண்ணம்மாள் அம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. ஆசிரியர் பணியுடனே மாணவர்களுக்கான பாடநூல்களையும், துணைப்பாட நூல்களையும் எழுதும் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய முதல் நூலான 'நாற்பெரும் வள்ளல்கள்' 1930ல் வெளியானது. தொடர்ந்து 'ஹர்ஷவர்த்தனன்', 'முடியுடை மூவேந்தர்', 'ஆப்ரஹாம் லிங்கன்', 'முசோலினி' போன்ற நூல்கள் வெளியாகின. முதல் பாடநூலான 'பொற்கால வாசகம்' 1932ல் வெளியிடப்பட்டது. இப்பணிகளினூடே தொடர்ந்து படித்து 'வித்வான்' பட்டமும் பெற்றார். 1936ல் முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பேற்றார். ஓய்வு நேரத்தில் பாடநூல்களை வெளியிட்டதோடு, முயன்று பயின்று பி.ஓ.எல்., எல்.டி., எம்.ஓ.எல். பட்டங்களைப் பெற்றார். எம்.ஓ.எல். பட்டத்திற்குப் பெரியபுராணத்தை ஆய்வு செய்து, 'பெரியபுராண ஆராய்ச்சி' என்ற தலைப்பில் தம் ஆய்வேட்டை அளித்தார். அந்த ஆய்வேட்டின் திருத்திய பதிப்பே பின்னாளில், 'பெரிய புராண ஆராய்ச்சி' என்னும் நூலாக வெளியானது. தொடர்ந்து 'சிந்துவெளி நாகரிகம்', 'பல்லவர் வரலாறு', 'சேக்கிழார்-ஆராய்ச்சி நூல்', 'சோழர் வரலாறு' போன்ற வரலாற்று ஆய்வுநூல்கள் வெளியாகி அவருக்குப் புகழ்தேடித் தந்தன. குறிப்பாக, சிந்துவெளி நாகரிகம் பற்றி விரிவாக முதன்முதலில் தமிழில் நூல் எழுதி வெளியிட்டவர் இராசமாணிக்கனார்தான். முதன்முதலில் தமிழில் சங்க காலம் தொடங்கி, பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக-ஆராய்ச்சி நோக்கில் எழுதியதும் அவரே! அவரது இம்முயற்சியை, "தென்னிந்திய வரலாறு பற்றியும் இலக்கியம் பற்றியும் வித்துவான் மா. இராசமாணிக்கம் எழுதியுள்ள நூல்கள் பலவும் அவரது மகத்தான சாதனைகளாகும். பல்லவர், சோழர் வரலாறுகளின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றி அவர் இயற்றிய இந்த நூல்கள் அயராத அவர் உழைப்புக்கு அழியாச் சின்னங்களாகும்" என்று ஹீராஸ் பாதிரியார் புகழ்ந்துரைத்திருக்கிறார்.
அதுவரை பள்ளியாசிரியராகப் பணியாற்றி வந்த இராசமாணிக்கனாரின் அறிவுத்திறனை விவேகானந்தா கல்லூரி பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. 1947ல் அக்கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். மாணவர்களின் அன்பிற்குப் பாத்திரமான அவர், தனது நடத்தை மற்றும் அறிவுரை மூலம் அவர்கள் மேல்நிலைக்கு உயரக் காரணமாக அமைந்தார். ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பெடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற உதவினார். எளிமை, அடக்கம், இனிமை, அன்பு, கருணை இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அவரது வகுப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து பயின்றனர். "இராசமாணிக்கனார் ஒரு தலைசிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல; சிறந்த பண்பாளர்; நிதானப் போக்குப் படைத்தவர்; மாணவர்களிடம் அவர் காட்டிய பரிவையும் மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் அவர்மீது வைத்திருந்த பெருமதிப்பையும் நான் நேரில் அறிவேன். சமூக சீர்திருத்தங்களைப் பற்றிய அவரது கொள்கைகள் தீவிரமானவை; அவற்றைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தார், ஆனால் பிறர் மீது திணிக்க முயலவில்லை. அவரது தமிழறிவும் சீரிய வாழ்வும் இராசமாணிக்கனாருக்கு அழியாப் புகழைத் தேடித் தந்துள்ளன." என்கிறார் இராசமாணிக்கனாரின் மாணவர் ஐராவதம் மகாதேவன். தமிழர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இராசமாணிக்கனார் எழுதிய, 'தமிழர் திருமண நூல்' முக்கியமான ஒன்றாகும்.
தொடர்ந்து 'சைவசமய வளர்ச்சி' என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார் இராசமாணிக்கனார். தான் படித்தது மட்டுமல்ல; தன் மனைவியையும் படிக்க வைத்து முன்னேற்றினார். 1947ல் வித்வான் பட்டம் பெற்ற அவரது மனைவி கண்ணம்மாள், சென்னை மண்ணடியில் இருந்த சி.எஸ்.எம். நடுநிலைப் பள்ளியிலும், பின்னர் மதுரை பாத்திமா கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். அவரும் 'குடும்பக்கலை' முதலிய பல கட்டுரைகளை எழுதியதுடன், 'தமிழ்ப் புலவர் பெருமக்கள்' முதலிய சில நூல்களையும் படைத்துள்ளார். மனைவியைப் போன்று தமது எட்டு மகவுகளையும் அறிவுத் துறையில் பிரகாசிக்கச் செய்தார் இராசமாணிக்கனார். 1953ல் அவருக்கு, மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைக்குத் தலைமை ஏற்க அழைப்பு வந்தது. அவர் மதுரையில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கும் மாணவர்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். அங்கு எழுத்தாளர் மன்றம் உருவாகக் காரணமாக இருந்ததுடன், அதன் தலைவராகவும் பணியாற்றினார். அங்கிருந்த காலகட்டத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்களை அவர் எழுதினார். அனைத்துமே கடின உழைப்பாலும், பல்லாண்டுகால ஆராய்ச்சியாலும் உருவானவை. தற்கால ஆய்வாளர் சிலரைப் போல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, தகவல்களைத் திரட்டி நூல்கள் எழுதும் பழக்கம் இராசமாணிக்கனாருக்கு அறவே இல்லை. அடிப்படையிலேயே வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவருக்கு, இதுபோன்ற வரலாற்றாய்வு நூல்கள் எழுதுவது பெரும் விருப்பமாக இருந்தது. இதற்காக தொடர்ந்து பல பயணங்கள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்கள், கோயில்கள், கோட்டைகள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று, கல்வெட்டுகளை ஒப்பு நோக்கி, பல்வேறு தரவுகளைச் சரிபார்த்து, தொடர்புடையோரைச் சந்தித்து உரையாடி, தகவல் பெற்று, கள ஆய்வை முடித்த பின்னரே தமது ஆய்வுகளை நூலாக்கி வெளியிட்டார். அவை கற்றறிந்த சான்றோர் பலரது பாராட்டுக்களைப் பெற்றன. "இராசமாணிக்கத்தின் உரைநடை எளிமையானது; ஆராய்ச்சிக்கு ஏற்றது. அதில் வெற்றுரையோ சொல்லடுக்கோ பொருளற்ற மொழியோ கிடையாது" என்பது திரு.வி.க.வின் கூற்று.
தமிழ்நாடு முழுதும் பயணங்கள் செய்து பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் இராசமாணிக்கனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராக 1959ல் பொறுப்பேற்ற அவர், 1967 முடிய அப்பணியைச் செவ்வனே செய்தார். பத்துப்பாட்டை ஆய்வு செய்து, 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்ற நூலை எழுதினார். அது பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்றது. தமது ஆராய்ச்சிகளைக் கட்டுரைகளாகப் பல இதழ்களில் எழுதினார். தாம் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தேர்ந்தெடுத்து நூல்வடிவம் தந்தார். சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்கள் இராசமாணிக்கனாரின் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து ஒலிபரப்பின. பின்னர் அவையும் நூலாக்கம் பெற்றன. இலங்கை, மலேசியா உட்படப் பல நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றியிருக்கும் இராசமாணிக்கனாரைத் தமிழக அரசு, 1966ல் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. மாநாட்டில் இவர் சமர்ப்பித்த 'சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம்' பற்றிய ஆய்வுக் கட்டுரை அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.
சமயத்துறையில் இராசமாணிக்கனார் ஆற்றிய பணிகளுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் ('சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்'), மதுரை ஆதீனம் ('ஆராய்ச்சிக் கலைஞர்'), தருமபுர ஆதீனம் ('சைவ இலக்கியப் பேரறிஞர்'), சைவ சித்தாந்த சமாஜம் ('சைவநெறிக் காவலர்') போன்ற சமய அமைப்புகள் இவருக்குப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. தருமபுர ஆதீனம் இவரது 'சைவ சமய வளர்ச்சி' என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இராசமாணிக்கனாரின் ஆய்வுகளைப் பிற மொழியினரும் அறிய வாய்ப்பளித்தது.
பல பல்கலைக்கழகங்களில் தலைமைத் தேர்வாளராகவும் பாடத்திட்டக்குழுத் தலைவராகவும் இராசமாணிக்கனார் பணிபுரிந்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அவரது நூல்களில் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நூல்கள் வரலாற்றைப் பொருளாகக் கொண்டவை. இவரது நூல்களில் 'கால ஆராய்ச்சி' என்ற நூல் மிக முக்கியமானதாகும். அதில் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு, கலித்தொகை போன்ற நூல்களின் காலம் பற்றியும், சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்றோரது காலத்தையும் தெள்ளிதின் ஆராய்ந்து நிறுவியுள்ளார். "ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிந்துவெளி எழுத்துகளின் ஆய்வில் பல்லாண்டுகள் மூழ்கித் திளைக்கவிருந்த எனக்கு என் 13ஆம் வயதிலேயே, நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அதை அறிமுகம் செய்வித்த ஆசான் இராசமாணிக்கனார். பிற்காலத்தில் என் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்துகொண்ட இராசமாணிக்கனார், என்னை வெகுவாகப் பாராட்டி ஆசிகளை வழங்கினார்" என்கிறார் வரலாற்றறிஞர் ஐராவதம் மகாதேவன்.
"தலைமைப் புலமை நிலையம் தமிழ் மொழிக்குத் தக்க பாதுகாப்பு வளையம்"
- என்று இராசமாணிக்கனாரைப் புகழ்ந்துரைக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். தமிழ், இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்றாய்வு, மாணவர் நலம் என்று ஓயாமல் உழைத்த இராசமாணிக்கனாரை இதயநோய் தாக்கியது. தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதிலும் தமது 60ம் வயதில், மே 26, 1967 அன்று அவர் காலமானார். அவரது படைப்புகள் பிற்காலத்தே தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப் பட்டன. தமிழின் பல தளங்களிலும் தனிமுத்திரை பதித்த இராசமாணிக்கனார், தமிழர் நெஞ்சங்களில் என்றும் நினைந்து போற்றத்தக்க முன்னோடி.
(தகவல் உதவி: டாக்டர் இரா. கலைக்கோவன் எழுதிய, இந்திய இலக்கியச் சிற்பிகள் - மா. இராசமாணிக்கனார், சாகித்ய அகாதமி வெளியீடு)
பா.சு.ரமணன் |