சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற அந்தோனிபிச்சை என்பவரைக் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சுட்டதை அடுத்து அவர் மரணமடைந்தார். இச்செயலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலை தமிழக அரசியல் கட்சிகள் வன்மையாக கண்டித்தன. ஆளும் கட்சியான தி.மு.க. சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இப்பிரச்சினை குறித்த மனு ஒன்றை இலங்கைத் துணைத்தூதரிடம் தமிழக அமைச்சர்கள் அளித்தனர்.
இலங்கை கடற்படையினரின் வன்செயலைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வைகோ நேரில் வலியுறுத்தினார். ஜெயலலிதா மீனவர்களின் மீது தொடுக் கப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை வன்மையாகக் கண்டித்தார்.
கச்சத்தீவை மத்திய அரசு வசப்படுத்திக் கொள்வதே தமிழக மீனவர்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கு வழி என்று டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்தனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்சினை இலங்கை - இந்திய கடற் படையினரின் கூட்டு ரோந்து மட்டுமே தீர்வாக முடியும் என்று இலங்கை முன்னாள் அமைச்சர் ஜெயவர்த்தன தெரிவிக்க, அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட்டால் பாதகம்தான் அதிகம் ஏற்படும் என்று கவலை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கூட்டு ரோந்துப் பணிக்கு மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும் என்று கூறினார்.
கூட்டு ரோந்து பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பின் போது கூறினார். கடலோரக் கண்காணிப்பை வலுப்படுத்த மேலும் 3 கண்காணிப்புக் கப்பல்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இனி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |